அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிராந்திய கிளை ஆரம்பிக்கும் நிகழ்வு!

புத்தளம் மாவட்டத்தின் கொட்ராமுல்லை, தில்லையடி, புத்தள நகர், பாலாவி, காரைத்தீவு, புளிச்சாக்குலம், மாதம்பை ஆகிய பகுதிகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புணரமைப்பு மற்றும் கட்சியின் பிராந்திய கிளை ஆரம்பிக்கும் நிகழ்வு, கட்சியின் புத்தள மாவட்ட அமைப்பாளரும், புத்தளம் நகரசபை உறுப்பினருமான அலி சப்ரியின் தலைமையில் இடம் பெற்றது.

புத்தள மாவட்டத்துக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுவினை அமைக்கும் வகையில், புத்தளம் தொகுதியின் அனைத்து வட்டாரங்களுக்குமான நிர்வாகக்குழு அமைக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் அலி சப்ரி ரஹீம் கருத்து தெரிவிக்கையில்,

“புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட மத்திய குழுவினைத் தெரிவு செய்வதற்கான அடித்தளத்தை கல்பிட்டியில் இட்டுள்ளோம். கல்பிட்டி தொகுதியில் கட்சியின் வட்டாரக் கிளைகளை அமைத்துள்ளோம். தற்போது புத்தள மாவட்டத்தின் ஏனைய தொகுதிகளிலும் கட்சியின் கிளைகளை அமைத்து  வருகின்றோம். இந்தக் குழுக்களிலிருந்து புத்தள மாவட்டத்திற்கான தாய்க்குழுவையும் இன்னும் ஓரிரு மாதத்திற்குள் அமைக்கவுள்ளோம்.

தற்போது அமைக்கப்பட்டுவரும் வட்டாரக் கிளைகள் ஒருபோதும் பெயரளவில் இயங்காது. கட்சியின் வட்டாரங்களுக்கான அபிவிருத்தியின் முழுப்பொறுப்பினையும் அந்தந்த வட்டாரங்களுக்கே வழங்குவோம். மேலும், ஏனைய அதிகாரங்களையும் வழங்கி, புத்தளம் தொகுதி இழந்து நிற்கும் தொகுதியின் பாராளுமன்ற உறுப்புரிமையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடாக பெறுவோம். அதற்கான அடித்தளத்தினை எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் இடுவோம்” இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வுகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இல்லியாஸ், இணைப்பாளர் ஜெவ்சி மற்றும் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

(ப)