அமைச்சர் ரிஷாட்டை கொலை செய்ய சதி; அவரை வாக்குகளால் பலப்படுத்துவதன் மூலமே அந்த சதிகார்களுக்கு தக்க பதிலடி கொடுக்க முடியும் – மாகாண சபை முன்னாள் உறுப்பினர் நஸீர்!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கொலை செய்ய சதி சர்வதேச நாடுகளில் இருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நாம் அவரை உங்கள் வாக்குகளால் பலப்படுத்துவதன் மூலமே அந்த சதிகார்களுக்கு தக்க பதிலடி கொடுக்க முடியும் என மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான எம்.என்.நஸீர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பங்கு மிகப்பெரியது. அவருக்கு உயிர் அச்சுறுத்தல்களும் ஆபத்துக்களும் சூழ்ந்திருந்த போதிலும், நமது முஸ்லிம் சமூகத்துக்காக நல்லாட்சி அரசுக்கு ஆதரவு வழங்கினார். ஆனால் இந்த நால்லாட்சியிலும் சர்வதேச சக்திகளின் மூலம் அவருக்கு உயிரச்சுறுத்தல் வந்தவன்னமே உள்ளது.
20 வருட அகதி வாழ்க்கையின் பின்னர், வடக்கு மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் போன்று நமது குருநாகல் மாட்டத்தில் 30 வருடங்களாக தூங்கிக் கிடந்தவர்களை தட்டியெழுப்பி அபிவிருத்திகளுக்காக அவர்களை ஓடவிட்ட தைரியமான தலைமையே அமைச்சர் ரிஷாட். எனவே, நாம் அவரை பாதுகாப்பதும் பலப்படுத்துவதும் எமது கடமையாகும்.
கடந்த தேர்தலின் போது எம்மால் குருநாகல் மாட்டத்தில் 5 உறுப்பினர்களை பெற முடிந்து இதனை நிறைவேற்றுவதற்கான சக்தி எம்மிடம் இருக்கின்றதா? என்ற கேள்வி இருந்தது. அதனை கற்பனை பண்ணிக்கூட எம்மால் பார்க்க முடியாமல் இருந்தது. ஏனெனில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்டத்தில் அறிமுகமாகி 2 வருடங்கள் மாத்திரமே ஆனாலும் தேர்தலில் நாம் வரலாறு காணாத வெற்றியை பெற்றோம். 
அல்லாஹ்வின் உதவியால் அதிகாரமும் கிடைத்தது. குளியாப்பிடிய பிரதேசசபையில் நாம்மால் ஒரு உபதவிசாளரை பெற்றுக்கொள்ள முடிந்தது. இந்த வெற்றியின் பயணாக தேர்தல் காலத்தில் நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நம்மால் நிறைவேற்ற முடிந்தது. இந்த மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற கவலை அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமும் எமக்காக உழைத்த மக்கள் மனதிலும் இருந்ததனால் நம்மால் இந்த வெற்றியை அடைய முடிந்தது.
நமது குருநாகல் மாவட்டத்திலும், ஏனைய சில இடங்களிலும் வாழும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட பல பிரச்சினைகளுக்கு, அதாவது குருநாகல் மாவட்டத்தில் பள்ளிகள் தாக்கப்படும் போது, அமைச்சர் ரிஷாட் சட்டத்தின் அடிப்படையில் நமது மக்களுக்கு உதவி செய்திருக்கின்றார். 
இன்று சிலர் அவரை இனவாதி என்று சொல்கின்றார்கள். அவர் இனவாதி அல்ல இந்த சமூகத்துக்காக குரல் கொடுக்கக் கூடிய நேர்மையான அரசியல்வாதி முஸ்லிம் சமூகத்துக்காக 24 மணித்தியாளமும் கண்விழித்து கஷ்டப்படும் ஒரு சமூக உணர்வு மிக்க தலைவனை நான் இதுவரை பார்த்ததில்லை.
நமது சமூகத்தின் குரலை பாதுகாக்க குருநாகல் சமூகம் மட்டுமல்ல முழு இலங்கையிலும் உள்ள முஸ்லிம்கள் முன்வர வேண்டும். மக்களின் நல்வாழ்வுக்காக எம்முடன் இணைந்து பணியாற்றுமாறும் அன்பாய் வேண்டுகின்றேன் என்றார்.
(ரிம்ஸி)