‘அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட தனியார் சட்டங்களை எளிதில் ஒழிக்க முடியாது’ – முஷாரப் எம். பி!

“அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்ட தனிமனித சுதந்திரம், தனியார் சட்டங்களுக்கான அவகாசம் என்பவற்றை கருத்தில்கொண்டு, தனியார் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாமே தவிர, முஸ்லிம் தனியார் சட்டத்தை முழுவதுமாக நீக்க வேண்டும் என்ற முயற்சிகளுக்கு, எனது வன்மையான எதிர்ப்பை பதிவு செய்கிறேன்” என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்.
 
இன்று (09) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
 
“ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற விடயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ளாத நிலைகள், நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. கொவிட்-19 மூலம் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கட்டாயமாக எரிக்கின்ற நிலையும் இதனாலேயே உண்டாகியுள்ளது. துறைக்குப் பொறுப்பான அமைச்சர், ‘நீரின் மூலமாக கொரோனா பரவல் ஏற்படாது’ என, இன்று காலை பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்ததன் அடிப்படையில், துறைசார் நிபுணர்களின் பரிந்துரைக்கு அமைவாகவும், ஜனாஸாக்களை அடக்குவதற்கான அனுமதி துரிதமாக வழங்கப்பட வேண்டும்” எனவும் மேலும் தெரிவித்தார்.