அவசர அவசரமாக அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

அவசர அவசரமாக அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது இதில் மூன்று விடயங்கள் முக்கியமாக செய்யப்படவிருக்கின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் உள்ள வட்டார கிளை நிருவாகத்தினருடன் அரசியல் யாப்பு தொடர்பான கூட்டம் ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் அசனார் அக்பர் தலைமையில் நேற்று (12.07.2017) இரவு இடம் பெற்ற போது கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

இந்த அரசியல் அமைப்பிலே மூன்று விடயங்கள் முக்கியமாக செய்யப்படவுள்ளது. அதில் தமிழ் மக்களுடைய அதிகாரத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும், ஜனாதிபதி முறைமை மாற்றம், தேர்தல் மாற்றம் ஆகும்.

இதிலே தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பு வடக்கு கிழக்கும் இணைக்கப்படும் என்கின்ற சந்தர்ப்பம் கிடையாது. நான் அறிந்த வகையில் இணைக்கப்படாது என்கின்ற விடயம் தான் இடம்பெறுகின்றது.

அதிக விடயங்கள் பேசப்படுகின்றது. ஆனால் இறுதியில் அரசாங்கம் எதை வழங்குவார்கள் என்று சொல்ல முடியாது. கடந்த காலங்களில் தமிழ் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பாரிய பிழைகளை செய்திருக்கின்றோம். இதனால் சிங்களவர்களிடையே நம்மை பற்றிய நல்ல அபிப்பிராயங்களை வளர்க்க தவறியுள்ளனர்.

கடந்த காலத்தில் எங்களுடைய கலாசாரங்கள், எதிர்பார்ப்புகள் பற்றி பேசியிருந்தால் பொதுபலசேனா உட்பட பல அமைப்புக்கள் உருவாகியிருக்காது. இந்த பிழையை எதிர்காலத்தில் விட்டுவிடக் கூடாது. அதற்கேற்பவாறு செயற்பட வேண்டும்.

முஸ்லிம் மக்களுடைய பிரச்சனை சம்பந்தமான இருபத்தி இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பம் இட்டு பிரச்சனை தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாட கேட்டு சமர்ப்பித்தோம். இதுவரையில் ஜனாதிபதியிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. எங்களது நடவடிக்கையை நாங்கள் நிறுத்தவில்லை.

சமகாலத்திலே விதவாத போக்குடைய சிங்கள அரசியல் தலைவர்களை கொண்டு எங்களுக்கு சாதகமாக விடயங்களை அபிவிருத்தி செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது. அவ்வாறு அழுத்தங்களை கொண்டு செல்ல வேண்டும் என்றார்.