“இலங்கை முஸ்லிம்கள் இம் மண்ணுக்கே உரமாக வேண்டும்” – கிண்ணியா நகரசபை உறுப்பினர் மஹ்தி!

இலங்கையில் பிறந்து, வளர்ந்த  ஒருவரின் உடல் இந்த நாட்டுக்கே உரமாக வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில், அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,
“மரணித்த உடலுக்கான  இறுதிக் கடமைகளை அதன் உறவினர்கள் விரும்புகின்றவாறே நிறைவேற்றுவது, அவர்களது அடிப்படை உரிமை ஆகும். ஆனால், தற்போது கொவிட்-19 தொற்று காரணமாக மரணிக்கின்ற உடலங்களை எரித்தேயாக வேண்டும் என்று இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது.
இந்நிலையில், மரணிக்கின்ற தங்களது உறவுகளின் உடலங்களை ‌எரிக்காமல், தமது சமய, கலாச்சார முறைப்படி அடக்குவதற்கு அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, சிறுபான்மை மக்கள் போராட்டங்களை தொடங்கியிருக்கின்றார்கள்.
இலங்கை அரசின் நிலைப்பாட்டை அறிந்துகொண்ட  மாலை தீவு,  முஸ்லிம்களின் கொரோனா  ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக மனிதாபிமான அடிப்படையிலும் மத நம்பிக்கையின் அடிப்படையிலும் விருப்பம் தெரிவித்துள்ளதான செய்திகளை ஊடகங்களில் காணக் கிடைத்தது. அதே நேரம், இத்தீர்மானமானது தங்களது உடலங்களை எரிப்பதை விரும்பாத கத்தோலிக்க மக்களினது போராட்டத்திற்கு என்ன பதிலை சொல்லப் போகின்றார்கள் என்ற கேள்வியையும் எழுப்புகிறது. இந்த முயற்சி ஆரோக்கியமான ஒரு முடிவல்ல. எதிர்காலத்தில் இந்நாட்டு முஸ்லிம்களின் இருப்பைக் கூட  கேள்விக்குள்ளாக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்புகின்றது.
ஆகவே, இலங்கையில் பிறந்து, வளர்ந்து, மரணிக்கின்ற ஒருவர்,  இலங்கை மண்ணுக்கே உரமாக வேண்டும். வேறொரு நாட்டிற்கு உரமாக முடியாது. இவ்வாறான ஒரு தீர்மானத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இது வன்மையாகக்  கண்டிக்கப்படக் கூடிய  அடிப்படை உரிமை மீறலாகும். இவ்வாறான முயற்சிகளை உடனடியாக எல்லோரும் கைவிட வேண்டும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.