இஷாக் எம்.பியின் நிதியொதுக்கீட்டில் கல்கிரியாகம பகுதியில் பாதை புனர் நிர்மாணம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பலாகல பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்கிரியாகம கிராமத்தில் 875M நீளமான பாதை புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

புதிய கல்கிரியாகம சந்தியிலிருந்து மத்திய மகா வித்தியாலயம் வரையிலான இப்பாதை கொங்கிரீட் கல் பதித்து புனர் நிர்மாணம் செய்யப்பட்டு 2018.08.04 அன்று மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

 

குறித்த நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

“அனுராதபுர மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய கிராமங்களின்  அபிவிருத்திகள் தொடர்பில் அனுராதபுர மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகின்றார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

தற்போதுள்ள தலைவர்கள் ஆட்சியை குறை கூறுவதற்கும், கட்சி பேதங்கள் பேசுவதற்கு ஒதுக்கும் நேரங்களை தங்கள் பதவியை பயன்படுத்தி மக்களுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்தாலே இன்று நம் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்கள் பாதி அபிவிருத்தி அடைந்திருக்கும். இது குறித்து அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

எது எவ்வாறாயினும் எனது மாவட்டத்தில் எனது அபிவிருத்திப் பயணம் தொடரும். அண்மையில் நடைபெறவிருக்கும் “கம் பெரலிய” நிகழ்ச்சித்திட்டத்தையும் சரிவர பயன்படுத்தி நமது மாவட்டத்திலுள்ள மிகவும் பின்தங்கிய கிராமங்களை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதன் மூலம், நமது முழு மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

ஐ.எம்.மிதுன் கான் – கனேவல்பொல