“எந்தவிதமான பாகுபாடுகளுமின்றி சேவையாற்றுகின்றோம்” முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவிப்பு!

‘’செமட்ட செவன’’ வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட தாழ்வுபாட்டில் நிர்மாணிக்கப்பட்ட வளனார்புரம் வீட்டுத்திட்டம் (07-10-2018) சென்ற ஞாயிற்றுக்கிழமை வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்விலே முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும்,அமைச்சர் றிஷாத் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீன் மற்றும் மன்னார் மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் முஹம்மது பஸ்மி, மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் முஜாஹிர், மன்னார் மாவட்ட செயலாளர் சீ.ஏமோகன்ராஜ், நானாட்டான் பிரதேச சபை தவிசாளர், மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் சந்தியோகு உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

‘’தாழ்வுபாட்டில்’’ நிர்மாணிக்கப்பட்ட வளனார்புரம் வீட்டுத்திட்ட திறப்பு விழாவில் சிறப்பதிதியாய் கலந்துகொண்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீன் உரையாற்றுகையில்,,

‘’இன்று நாங்கள் ஒரு வீட்டை கட்டுவதற்காக எத்தனையோ இடங்களில் எத்தனையோ நாட்களாக தவமிருக்கின்றோம்.இன்று எங்களுடைய மண்ணுக்கு அழகான (50)ஐம்பது வீடுகளை கட்டி,ஐம்பது வீடுகளுக்கும் அமைச்சர் சஜீத்தின் பாதங்கள் சென்று ஒவ்வொரு வீடு வீடாகப் பார்வையிட்டு எங்களிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள்.எங்களின் மக்களுடைய ஆசைகளை எவ்வாறு தீர்த்து வைக்கலாமென்று நாங்கள் எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில்தான் அவர்களது உள்ளங்களை புரிந்துகொண்டு இன்று வருகை தந்திருக்கின்ற அன்புக்குரிய சஜீத் பிரேமதாச, தன்  தந்தையின் எண்ணக்கருவாக அவருடைய மனதில் தோன்றிய இத்திட்டமானது இலங்கையில் இருக்கின்ற வீடில்லாத அனைத்து மக்களுக்கும் வீடு சென்றடைய வேண்டுமென்ற  கருவைக் கொண்டதே.

இந்த வரலாற்று நிகழ்வை இன்று சஜீத் பிரேமதாச  தன் தந்தையின் அழியாப் பெயருக்காகவும்,நாட்டு மக்களின் நன்மைக்காகவும் நடாத்திக்கொண்டிருக்கின்றார்.அவருடைய ஆசைகள் நிறைவேற வேண்டும்.

அதே போன்று மக்களுக்கு வீடுகள் கிடைக்கப்பெற்றிருக்கிறது.வீடுகளை சரியான முறையில் கட்டுவதற்கு பலரிடம் ஆர்வமில்லாமல் இருக்கின்றது.சிறிய தொகையான ஒரு இலட்சம் ரூபாய் கூட இல்லாமல் இன்று எத்தனையோ வீடுகள் இடைநடுவில் கைவிடப்பட்டுக் கிடக்கிறது..

எங்களிடம் எல்லா வளமும் இருக்கின்றது.மண்வளம்,கல்வளம்,நீர்வளம்,கடல் வளம், இருக்கின்றது.உங்களிடம் அனைத்து வசதிகளும் இருக்கின்றது.ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனோபாவம் இருக்கின்றது.இந்த தாழ்வுபாடு கிராமமானது எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு கிராமம்.ஒரு தாய் பிள்ளைகள் போல் ஒற்றுமையாக வாழும் இந்தக் கிராமத்தில் இவ்வாறான திட்டங்களை கொண்டு வந்தமையானது மாபெரும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

இது போல இன்னும் பல திட்டங்கள் வர இருக்கின்றன.இன்னும் வீடில்லாதவர்களுக்கு பல வீடுகளை வழங்கப்பட இருக்கின்றன. நிச்சயமாக வீடில்லாத அனைவருக்கும் வீட்டுத் திட்டங்களை வெகுவிரைவில் கொண்டு வந்து தருவோம்.எனக் கூறிய அவர்.

தொடந்தும்  உரையாற்றுகையில்…

அதே போல் சில நாட்களுக்கு முன்னர் இந்தப் பிரதேசத்தின் பாதைகளை செப்பனிடுவதற்காக பணம் இல்லாமல் இருந்த போது எங்களுடைய மாந்தை பிரதேச செயலாளர் முஜாஹிர் மூலமாய் இரண்டு மில்லியன் ரூபா பணத்தை வழங்கப்பட்டு  இந்தக் கிராமத்திற்கான பாதை உடனடியாக செப்பனிடப்பட்டிருக்கின்றது.மக்களின் பிரச்சினை தீர்த்துக்கொடுக்கப்பட்டுள்ளது. சமூகத்திற்காய் குரல் கொடுக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னின்று செயற்படுகின்றது.

உங்கள் பக்கத்துக்கிராமமான தாராபுரத்தில் உங்கள் உள்ளங்களை வென்ற  அமைச்சர் ரிசாத் பதியுதீன் இருக்கின்றார். உங்களுடைய தேவைகளை சரியான முறையில் ஒன்றிணைந்து அழகான முறையில் பெற்றுகொள்ளுங்கள்.உங்களுடைய தேவைகளை நாங்கள் எந்தவிதமான பாகுபாடுகளுமில்லாமல் நிறைவேற்றித் தந்திருக்கின்றோம்,தொடர்ந்தும் தர இருக்கின்றோம்.

இக்கிராமத்தை எங்களுடைய  கிராமமாக நினைத்தே நாங்கள் வாழ்ந்து வருகின்றோம்.உங்களுடைய நல் வாழ்வுக்காகவே உங்களுக்கு பாகுபாடற்ற சேவைகளை புரிவதற்காகவே  நாங்கள் அரசியலில் பயணிக்கின்றோம்.

இங்கே கட்டப்பட்டிருக்கின்ற  வீடுகளை சரியான முறையில் பார்த்துக்கொள்ளுங்கள்.முழுமையாய் முடிந்தளவு அழகு படுத்துங்கள்.  வீடுகள் உங்களுக்குச் சொந்தமானது,உங்களது சந்ததிகளுக்குச் சொந்தமானது.இக்கிராமம் மீன்பிடியை வரமாகக் கொண்ட கிராமம்,இதையும்தாண்டி இக்கிராமம் இன்னும் உயர வேண்டும்.கல்வி செழிக்க வேண்டும்,அரச உத்தியோகத்தர்கள் அதிகமதிகம் உதிக்க வேண்டும், உங்கள் ஊர் உயர வேண்டும்,நல்ல மக்களாகிய உங்களின் பிள்ளைச் செல்வங்களை எதிர்காலத்தில் ஒரு பொறியியலாளராகவும், வைத்தியர்களாகவும், ஆசிரியர்களாகவும், நல்லறிசர்களாகவும், ஒழுக்கவாதிகளாகவும்   நீங்கள் உருவாக்க வேண்டும்.

உங்கள் அனைவருடைய வாழ்விலும் துன்பம் அகன்று இன்பம் பெருகிட இறைவனை பிரார்த்திக்கின்றேன். இவ்வாறு  ரிப்கான் பதியுதீன் உரையாற்றினார்.

-ஊடகப்பிரிவு-