‘கல்முனை தொகுதியில் மக்கள் காங்கிரஸ் வரலாறு எழுதும் காலம் கனிந்துள்ளது’ – சட்டமுதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இம்முறை கல்முனை தொகுதியை வெற்றிகொண்டு வரலாற்றுச் சாதனை படைக்கும்  என்று மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளரும் கட்சியின் ஸ்தாபக செயலாளர் நாயகமுமான சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.

தனது கல்முனை அலுவலகத்தில் நேற்று (03) இடம்பெற்ற விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது, அவர் மேலும் கூறியதாவது,

“கடந்த தேர்தலில் எவ்வித அதிகாரமும் இல்லாது, அம்பாரை மாவட்டத்தின் சகல ஊர்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை வியாபிக்கச் செய்ததன் ஊடாக, பெரும் வெற்றியை நாம் கண்டோம். காலடி எடுத்து வைத்த முதல் தடவையிலேயே 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை எமது கட்சி பெற்றது ஒரு சாதனையாகும். மறைந்த தலைவர் அஷ்ரபின் மறைவுக்குப் பிறகு, அம்பாரை மாவட்டத்தில் இழந்த உரிமைகளையும், நடைபெறாத அபிவிருத்திகளையும் பெற்றுக்கொள்வதற்கு ஒரு மாற்று அரசியல் சக்தி இல்லாமல் இருந்த காலகட்டத்தில்தான் நாம் கட்சியை அம்பாரையில் அறிமுகப்படுத்தியபோது, பல சவால்களை எதிர்கொண்டு, இன்று முழுமையாக மாவட்டத்தின் சகல ஊர்களும் எம்மீது நம்பிக்கை கொண்டு, ஜனநாயக அரசியல் மாற்றத்திற்காக எம்மை ஆதரிக்க முன்வந்துள்ள நிலை ஒரு சாதனையாகும்.

இதனால், இம்மாவட்ட மக்களுக்கு, நாம் இம்முறை தேர்தலில் சிறந்தவர்களை பாராளுமன்றம் அனுப்புவதனுாடாக, இம்மக்கள இழந்தவற்றை இயலுமானவரை பெற்றுக்கொடுக்க முனைவோம். அதற்காக அணைத்து அம்பாரை மாவட்ட மக்களும் எம்முடன் கைகோர்க்குமாறு வேண்டுகோள் விடுப்பதோடு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெற்றியின் பங்காளர்களாக அனைவரும் மாற வேண்டும்” என்றும் கூறினார்.