‘கொவிட்-19; முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய பிரதமர் அனுமதியளித்தமை, எமது போராட்டத்தின் வெற்றியாகும்’ – தவிசாளர் தாஹிர்!

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய பிரதமர் அனுமதியளிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமை, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி அமைப்பாளரும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளருமான எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்துள்ளார்.
 
கொரோனா தொற்றால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அனுமதியளிப்பதாக, இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளமை தொடர்பில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
’20வது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, தங்களின் சுயநலத்தை மறைப்பதற்காக, “கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்காகவே, அச்சட்ட மூலத்திற்கு வாக்களித்தோம்” என்று தெரிவித்தார்கள். ஆனால், எதுவும் நடைபெறவில்லை.
 
கொரோனா தொற்றினால் மரணிக்கின்றவர்களை எரிப்பதில் எந்த மாற்றமும் கிடையாதென்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்தது. இதன் பின்னர், அரசாங்கத்தின் கரங்களை மேலும் பலப்படுத்துவதற்கு முண்டியத்து ஆதரவு வழங்கிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், வாய் மூடி மௌனமாகிக் கொண்டார்கள்.
 
இந்நிலையில்தான், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில், கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இப்பேரணிக்கு முஸ்லிம்களும் ஆதரவு வழங்க வேண்டுமென்று மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதீன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள முஸ்லிம்கள் பெரும் ஆதரவை வழங்கியிருந்தார்கள் . இப்பேரணி பெரும் வெற்றியில் முடிவடைந்தது.
 
முஸ்லிம்களின் இந்தப் பிரச்சினை சர்வதேசம் வரை கொண்டு செல்லப்பட்டது. அதனால்தான், இன்று பாராளுமன்ற உறுப்பினர் மரைக்கார். பிரதமரிடம் பாராளுமன்றத்தில் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது, கொவிட்  தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளமை, எமக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். இதனை அரச வர்த்தமானியிலும் அறிவிக்க வேண்டும். அதுவரை அல்லாஹ்வை பிராத்திப்போம்!
 
ஆகவே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ‘பொத்தவில் முதல் பொலிகண்டி வரை’ எனும் பேரணியை ஏற்பாடு செய்த வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.