“சிறுபான்மை மக்களின் நலனில் அக்கறைகொண்டுள்ள ஒரு தலைவனின் கீழ் ஒன்றுபட்டுள்ளோம்” – மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி!

எதிர்காலத்தில் சஜித் பிரேமதாசவை சக்தி மிக்க தலைவராக வரவுள்ள பாராளுமன்றத்தில் கூடுதல் ஆசனத்தினை பெற்று பிரதமராக்குவோம். இவரை சிறுபான்மை சமூகத்தினை பாதுகாக்கின்ற தலைவனாக நாங்கள் நம்புகின்றோம் என மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின்  தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று (04) ஓட்டமாவடியில், பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற போதே, அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

சிறுபான்மை சமூகத்தின் தலைமைத்துவத்தினை தக்கவைத்துக் கொள்கின்ற போராட்டம் என்ற அடிப்படையிலே, இந்த நாட்டின் தமிழ், முஸ்லிம் சமூகம் நம்பக்கூடிய தலைமையாக சஜித் பிரேமதாச இருக்கின்றார். கடந்த காலத்தில் எமது சமூகத்திற்கு ஏற்பட்டுப்போன பின்னடைவுகள், பிரச்சனைகள் எல்லாவற்றிலும் எங்களை துவம்சம் செய்ய முற்பட்ட பொழுது இந்த கட்சியும், தலைமையும் சமூகத்தினை பாதுகாக்க அதிக வேலைகளை கொடுத்தது என்பதை மறந்துவிடாதீர்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எமக்கு ஒரு ஆசனத்தினை பெறக்கூடிய தேர்தலாக, எதிர்காலத்தில் சஜித் பிரேமதாசவை பிரதமராக்குகின்ற தேர்தலாக இந்தத் தேர்தலை நீங்கள் அனைவரும் உள்வாங்கிக்கொள்ளுங்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அடுத்ததாக, அதிக வாக்குகளை பெறுகின்ற கட்சி ஐக்கிய மக்கள் சக்தி என்பதை மறந்து விடாதீர்கள்.

சிறுபான்மை மக்களின் நலனை பார்க்க வேண்டும் என்கின்ற ஒரு தலைவனின் கீழ், நாங்கள் ஒன்று திரண்டுள்ளோம். “எந்தவித சாதி, பேதம் இல்லாமல், எந்தவித பிரச்சனைகள் வந்தாலும் அவர்களை அரவணைத்துக்கொண்டு செல்வேன்” என்று பிரேமதாச சொன்னது போன்று, அவரது மகன் சஜித் பிரேமதாச சொல்வது எங்களுக்கு மன நிம்மதியை தருகின்றது.

எமது போராட்டத்தினை வலுச்சேர்க்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் தலைமைகள், தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து, சஜித் பிரேமதாசவினை வலுவூட்டல் செய்து, எதிர்காலத்தில் சக்திமிக்க தலைவராக, வரவுள்ள பாராளுமன்றத்தில் கூடுதல் ஆசனத்தினை பெற்று பிரதமராக்குவோம். இவரை சிறுபான்மை சமூகத்தினை பாதுகாக்கின்ற தலைவனாக நாங்கள் நம்புகின்றோம். நீங்களும் நம்பியேயாக வேண்டும்.

ஆளும் தரப்பில் இருந்து பல விமர்சனங்கள் வரும் பிரச்சனைகள் இருக்கின்றது. எதிர்காலத்தில் இவைகளுக்கு நாங்கள் முகங்கொடுக்க வேண்டுமாக இருந்தால், உங்களுக்காக பாராளுமன்றத்தில் உரத்துப் பேச வேண்டுமாக இருந்தால், அவர்ளோடு விட்டுக் கொடுக்காமல் பேச்சுவார்த்தை செய்யக் கூடிய ஒரு தலைவன் பின்னால் நாங்கள் அணி திரண்டுள்ளோம்” என்றார்.