ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்யுங்கள் – ஜனாதிபதி கோட்டாவிடம் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை

அதிமேதகு ஜனாதிபதி,
கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
ஜனாதிபதி அலுவலகம்,
கொழும்பு 01.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு,

வில்பத்து சரணாலயம் மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்
குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்தல்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக நியமனம்
பெற்றுள்ள தங்களுக்கு முதலாவதாக, எனது மற்றும் என்னை
பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களின்
மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியின் தலைவரான, என்னை
இலக்கு வைத்துநான் செய்யாத எனது நடவடிக்கைகள் குறித்து பல்வேறு
இலத்திரனியல், அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம்
பொதுமக்களுக்கிடையில் ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை
பரப்புவதன் மூலம் குறுகிய அரசியல் நோக்கங்களை அடையவும்
இனவெறியைத் தூண்டவும் சிலர் முயற்சிக்கின்றனர் என்பதை மிகுந்த
வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முன்னைய அரசாங்கத்தின் அமைச்சராக பணியாற்றியபோது, என்னை இலக்கு
வைத்து அவர்கள் என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளில் வில்பத்து சரணாலயம்
அழிக்கப்பட்டு, முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தல் மற்றும் பயங்கரவாதி
சஹ்ரானுடனான தொடர்புகள் ஆகியவை அடங்கும். அந்த குற்றச்சாட்டுகளில்
எந்தவொரு உண்மையும் இல்லாமல் குறுகிய நன்மைகளைப் பெறும்
நோக்கத்துடன் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் என்பதை நான் உங்களுக்கு
தெரிவிக்க விரும்புகிறேன்.

மேலும், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பு
உள்ளது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக பாராளுமன்ற தேர்வுக் குழு
விசாரணை நடாத்தியதோடு, பொலிஸ் விசாரணையின் போது நான் நிரபராதி
என்று கூறி, அப்போது பதில் கடமையாற்றிய பொலிஸ் மா அதிபர்
சபாநாயகருக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருந்தார்.
ஆனால் இவர்கள் இந்த தலைப்புகளை பலமுறை தவறாக சித்தரித்துள்ளனர்
என்றும் இது ஒருசேறுபூசும் திட்டமாக கொண்டு செல்லப்படுவதால், எமது
அப்பாவி சமூகம் சிரமத்திற்கு ஆளாக்கப்படுகிறது என்பதை நான்
கூறிக்​கொள்ள விரும்புகிறேன். சகலரும் ஒற்றமையுடன் வாழும் எமது
தாய்நாட்டில் இனம், மதம், சாதி பேதங்ளை உருவாக்குவதன் மூலம் அவர்கள்
நாட்டை ஸ்திரமின்மைக்கு உட்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதை நான்
உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

மேலும் வில்பத்து பாதுகாப்பு பகுதியில் உள்ள அரசு நிலங்கள் எதுவும்
எனது அதிகாரத்தால் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என்பதையும்
நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 1990 களில்
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு 2009 முதல் தங்கள்
சொந்த கிராமங்களில் மீள்குடியேறுவதற்கான சந்தர்ப்பம்
உருவாகியபோது, அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக
பதவி வகித்த தாங்கள் வழங்கிய ஒத்துழைப்பை நான் மிகவும்
நன்றிபூர்வமாக ஞாபகப்படுத்த விரும்புகினறேன். சுமார் 30
ஆண்டுகளாக, கைவிடப்பட்ட இந்த கிராமங்கள் வனப்பகுதியாக
மாறியது. எனவே, வனபாதுகாப்பு திணைக்களம் இதை வனப்பகுதி என
பெயரிட்டது. இருப்பினும், இந்த சூழ்நிலையின் யதார்த்தத்தை உணர்ந்த,
அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கம்,
இந்த மக்களின் காணிகளை அடையாளம் கண்டு மீள்குடியேற்ற ஒரு
சிறப்பு பணிக்குழுவை நியமித்து அவர்களை மீள்குடியேற்றுவதற்கான
நடவடிக்கைகளை மேற்கொண்டது.
வில்பத்து ஒதுக்கு நிலம் (Reserve) குறித்து பல்வேறு
கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டங்கள் பகுப்பாய்வுகள் நடாத்தப்பட்டு
இதன் உண்மையை புரிந்துகொண்ட சூழல் ஆர்வலர்கள் அதனை ஏற்றுக்
கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தவறான
குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருவதால், நம் நாட்டின் மதிப்புமிக்க
இயற்கை வளமாக இருக்கும் வில்பத்து தேசிய சரணாலயத்திற்கு ஏதேனும்
சேதம் ஏற்பட்டிருப்பின், இதன் உண்மையை நாட்டு மக்களுக்கு
தெளிவுபடுத்துவதற்கு ஒரு சுயாதீன ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து,
அதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில்
ஒட்டு மொத்த மக்களையும துயரத்தில் ஆழ்த்திய, அந்த பயங்கரவாத
தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக
கூறி பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைத்தமை தொடர்பாக
விசாரணை நடாத்தி நான் சுற்றவாளி என ஏற்கனவே
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும், வேண்டு மென்றால்
மீண்டும் ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து அந்த பயங்கரவாத
தாக்குதல் பற்றி சிறப்பான விசாரணை ஒன்றை நடாத்துமாறு மிகவும்
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.
இப்படிக்கு உண்மையுள்ள

றிஸாட் பதியுதீன்
பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்