‘தேசியப்பட்டியல் பதவியை சம்மாந்துறைக்கு வழங்கி, அம்பாறை மக்களை மக்கள் காங்கிரஸ் கௌரவித்தது’ – வேட்பாளர் மாஹிர்!

சம்மாந்துறை தொகுதி இரண்டு முறை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்திருக்கின்ற அதே சமயம், கணிசமான வாக்குகளை முஸ்லிம் காங்ரஸிற்கு மக்கள் வழங்கியிருந்த போதும், சம்மாந்துறை மக்களை கௌரவப்படுத்தும் முகமாக, ஒரு வருடமேனும் தேசியப்பட்டியல் பதவியை அவர்களுக்கு வழங்க வேண்டுமென மு.கா வினர் ஒரு போதும் எண்ணியதில்லை என்று முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் வேட்பாளருமான ஐ.எல்.எம். மாஹிர் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிராஸ் சார்பில், திகாமடுல்ல மாவட்டத்தில், இலக்கம் 4 இல் போட்டியிடும் வேட்பாளரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரை ஆதரித்து, நேற்று முன்தினம்  (23) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ரணூஸ் முஹமட் இஸ்மாயிலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப், செயளாளர் சுபைர்தீன், பொருளாளர் ஹுசைன் பைலா மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய வேட்பாளர் மாஹிர்,

“திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அமோக ஆதரவுடன், 33000 வாக்குகளுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, சொற்ப வாக்குகளால் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை  இழந்திருந்தது.

33000 வாக்குகளை வழங்கிய மாவட்டத்தையும், அதிகப்படியான 14000 வாக்குகளை வழங்கிய சம்மாந்துறை மக்களையும் கௌரவித்து, தேசிய பட்டியல் மூலம் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் வழங்கி, கட்சியும் கட்சியின் தலைமையும் திகாமடுல்ல மாவட்டத்தையும் துறையூரையும் அலங்கரித்தது.

எனவே, வாக்குறுதி மீறாத, சொன்னால் செய்யக்கூடிய ஒரு தலைமையும், கட்சியும் எமக்கு மிகப்பெரிய பொக்கிஷமாகக் கிடைத்திருக்கின்றது. சம்மாந்துறை மக்களாகிய நாம் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் தலைமைக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளோம்.

எனவே, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், இன் ஷா அல்லாஹ் நாம் அனைவரும் ஒன்றினைந்து, மயில் சின்னத்திற்கும், இலக்கம் 4 இற்கும் வாக்களித்து, திகாமடுல்ல மாவட்டத்தையும் துறையூரையும் வென்றிடுவோம்” என்று கூறினார்.