தோப்பூர், களநிலைமைகளை அமைச்சர் றிஷாட் நேரில் சென்று ஆராய்வு

 

அமைச்சின் ஊடகப்பிரிவு

தோப்பூர், செல்வநகர், நினாய்க்கேணிப் பகுதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் இன்று மாலை (2017.05.19) விஜயம் செய்தார். கடந்த செவ்வாய்கிழமை இந்தக்கிராமத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நடந்த விடயங்களை கேட்டறிந்து கொண்டார்.

இனந்தெரியாதோர் தமது கிராமத்துக்கு வந்து தாக்குதல்களை நடாத்தி தம்மை இந்தப்பிரதேசத்திலிருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தியதாக கிராமத்தவர்கள் தெரிவித்தனர்.

‘நினாய்க்கேணியில் 127 பேருக்குச் சொந்தமான சுமார் 49 ஏக்கர் காணி இருக்கின்றது. அத்துடன் இந்தப்பகுதியில் 47 வீடுகள் அமைந்திருக்கின்றன. இவை எமது பூர்வீகக்காணிகள். இங்கு வாழ்ந்து வரும் நாங்கள் எமது நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றோம். எமக்குச் சொந்தமான காணிகள் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எங்களை இந்த இடத்திலிருந்து வெளியேற்றிவிட்டு எமது கிராமத்துக்கு தொலைவில் அமைந்திருக்கும் பண்சல ஒன்றுக்கு இந்தக்காணிகளை பெற்றுக்கொடுப்பதே இனவாதிகளின் நோக்கமாகும்.’

இவ்வாறு நினாய்க்கேணி மக்கள் அமைச்சரிடம் தமது கவலையை வெளியிட்டனர். இதன் பிரகு அமைச்சர் றிஷாட் பதியுதீன், மஹ்ருப் எம்.பி மற்றும் டாக்டர் ஹில்மி உள்ளடங்கிய குழுவினர்; பாதிக்கப்பட்ட இடங்களை சுற்றிப் பார்வையிட்டனர்.

சம்பவங்களையும் விவரங்களையும் கேட்டறிந்து கொண்ட அமைச்சர் றிஷாட் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துடன் தொடர்புகொண்டு, இந்த மக்களின் உண்மை நிலையை எடுத்துகூறியதுடன் மக்களைப் பாதிப்புள்ளாக்கும் செயற்பாட்டை தடுத்துநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள்விடுத்தார்.