நம்பிக்கையாளர்களின் உரிமையை பாதுகாக்க அடிப்படை உரிமை மனு..!

கொவிட் – 19 (கொரோனா) வைரஸினால் உயிரிழப்போரை தகனம் செய்யக் கோரும் திருத்தப்பட்ட வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளது.

குறித்த இவ் வர்த்தமானி (2170/08) சுகாதார அமைச்சினால் ஏப்பிரல் மாதம் நான்காம் திகதி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தில் நேற்று (14) தாக்கல் செய்யப்பட்ட இதற்கெதிரான மனுவில், சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னிஆரச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர். அனில் ஜாசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமீர் அலி, தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் பொருளாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான ஹுஸைன் பைலா ஆகியோரினால் இம்மனு, சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி தவராசாவினூடாக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலுக்கமைய எரியூட்டலையும் நல்லடக்கத்தையும் அனுமதித்து, ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி பின்னர், எரியூட்டலை மட்டும் அனுமதித்து, திருத்தி வெளியிடப்பட்டதையே இதில் மனுதாரர்கள் பிரதான விடயமாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சடலத்தை எரியூட்டுவதால் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியுமெனவும், நல்லடக்கம் செய்வதால் மண்ணுக்குள்ளிருந்து வைரஸ் கிருமிகள் வெளியாகும் என்ற அரச தரப்பினரினதும், சுகாதார தரப்பினரினதும் நிலைப்பாடுகளையும் இதுவரை விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியாதுள்ளதையும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாளாந்தம் அதிகரிக்கும் கொரோனாவின் தாக்கம் நின்றபாடில்லை. குறிப்பாக நல்லடக்கம் தடை செய்யப்பட்டு, எரியூட்டலை மட்டும் அனுமதித்துள்ள இலங்கையிலும் இது தொடரவே செய்கிறது. எனவே, பரவலைத் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளாகவே நல்லடக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கையில் கூறப்படுவதை ஏற்க முடியாதுள்ளது. ‘இந்த ஜனாஸாக்களின் மூலம் பரவும் கிருமிகள் இலங்கையை கோரமாகத் தாக்கும்’ என்ற பயப்பிராந்தியை, வேண்டுமென்றே ஆதாரமில்லாது சுகாதாரத் துறையினர் முன்வைத்துள்ளதாகவே புலப்படுகின்றது. விஞ்ஞான ரீதியான முடிவுகள் நிரூபணமூலமாகவே எடுக்கப்பட வேண்டும். மாறாக ஐயத்திலும், எழுமாறாகவும் குறித்த ஒரு தரப்பினரால் ஏகமனதாக எடுக்கப்பட்ட இம் முடிவுகள், பாதிக்கப்பட்ட மக்களை சந்தேகத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

மேலும், தனிமைப்படுத்தல் தொற்றுநோய் கட்டளைச் சட்டம் ஏற்கனவே அனுமதித்த நல்லடக்க விடயம், அவசரமாகத் திருத்தப்பட்டமை பாரபட்சமாகவே பார்க்கப்பட வேண்டியதென்பதே மனுதாரர்களின் நிலைப்பாடுகளாகும்.

சமூகத்துக்கான வகிபாகங்களிலிருந்து சற்றும் விலகாத பொறுப்புடன் நடந்துவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அரசியல் அதிகாரத்தை இலக்கு வைத்து காய்நகர்த்தும் கட்சியல்ல. ராஜதந்திரங்களை தந்திரமாகப் பாவிக்கும் கட்சியின் உயர்பீடம், அதிகாரங்களைக் காட்டிப் பணியவைக்கும் மேலாதிக்கவாதிகளுக்கு அடிபணிந்த வரலாறுகள் இல்லை.

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்களைச் சமூகச்சாயம் பூசும் சந்தர்ப்பமாக்கக் காத்திருந்த சந்தர்ப்பவாதிகளைத் திணறடித்த சாதுரியம், கட்சியின் தலைவர் மற்றும் தவிசாளர்களின் வழிநடாத்தல்கள், வியூகங்களால் ஏற்பட்டவையே. இதுவரைக்கும் தலைவர் ரிஷாட் பதியுதீனை அதிகாரத் தொல்லைகள் துரத்தி வருகையில், சமூகத்துக்கான அவரது பணிகளில் தடங்கல்களை ஏற்படுத்த முடியாதுள்ளமை அவரது நெஞ்சுரத்தையே காட்டுகிறது.

எனவே, இப்பொழுது ஏற்பட்டுள்ள ஈமானிய நெருக்கடிகளிலிருந்து நம்பிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்கான ராஜதந்திர, ஜனநாயக, சட்ட ரீதியான  நடவடிக்கைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஈடுபடுமென்பது திண்ணம்.