“நீர், மின்சார கட்டணங்களில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவும்” – முன்னாள் எம்.பி அப்துல்லாஹ் மஹ்ரூப் வேண்டுகோள்!

நீர், மின்சார துண்டிப்பை தற்காலிகமாக நிறுத்த வேண்டுமெனவும் என்றும் கட்டணங்களில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கொரோணா தொடர்பான விஷேட செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அன்றாடத் தொழிலாளர்கள் மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள்,  நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களை உரிய காலப்பகுதியில் செலுத்தமுடியாத நிலையில் உள்ளனர்.

இக்காலப்பகுதியை மக்கள் வீட்டிலேயே கழிப்பதால் அதிக நீர்ப்பாவனை, மின்சார பாவனை காரணமாக அதிக கட்டணத் தொகை ஏற்படுவதை தவிர்க்க முடியாதுள்ளது. எனவே, அன்றாட தொழிலாளர்கள், வருமானம் குறைந்தோர்களின் கட்டணங்களில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கட்டணங்களை செலுத்தக் கூடியவர்கள் வங்கிகளில் செலுத்த முடியாத நிலை காணப்படுவதினால், சாதாரண சூழ்நிலை ஏற்படும் வரை, நீர் மற்றும் மின்சாரத் துண்டிப்பை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கொரோணா தொடர்பான விஷேட செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவிடம், முன்னாள் எம்.பி அப்துல்லாஹ் மஹ்ரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.