நெல் உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாவது மாவட்டமாக பேசப்பட வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி.

நெல் உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாவது மாவட்டமாக பேசப்பட வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம் என கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள் மற்றும் நீர்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விழால்ஓடை மற்றும் மூக்கறையான் பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-

கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டீர்களோ அதுபோன்று எதிர்வரும் காலங்களிலும் நீங்கள் செய்யப்பட வேண்டும். உங்களுக்கான அரசியல் தலைமைகள் பல்வேறு உதவிகளை வழங்குவோம்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விழால்ஓடை மற்றும் மூக்கறையான் பகுதிக்கு ஒரு விவசாய அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் வருகை தந்தது இதுவே முதல் தடைவையாக இருக்கின்றது.

எமது விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் இருநூறு மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விழால்ஓடை பாலமும், நாற்பத்தி ஒரு மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மூக்கறையான் பாலமும் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தற்போது மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையில் நெல் உற்பத்தியில் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் உள்ளது. தற்போது பல பாலம் அமைக்கப்பட்டுள்ளமையால் இலங்கையில் நெல் உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாவது மாவட்டமாக பேசப்பட வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.

இதற்கான மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய அமைச்சின் ஊடக என்ன பங்களிப்பை செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்து தருவேன். எதிர்காலத்தில் அனைத்து தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டவர்களாக, ஒரு தீர்மானம் எடுக்கின்றவர்களாக இருக்க வேண்டும்.

இடைநடுவில் சில புள்ளுருவிகள், கருப்பு ஆடுகள் வந்து உங்களை குழப்ப பார்ப்பார்கள் நீங்கள் உங்கள் அபிவிருத்தி விடயத்தில் தைரியமாக இருக்க வேண்டும் என்றார்.

ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினரும், விவசாய அமைப்பின் தலைவருமான எச்.எம்.அமீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்பாசன மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, பிரதேச சபை உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர், அமைச்சின் பிரதிநிதிகள், விவசாய திணைக்கள உயர் அதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.