நேபாளம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் கடும் மழை வெள்ளம்:நூற்றுக் கணக்கானோர் பலி

நேபாள நாட்டில் இவ்வருடம் பருவ மழை கனமழையாகப் பெய்து வருவதால் அங்குள்ள மலைத் தொகுதிகளில் இருந்து இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலங்கள் ஊடாக பாயும் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகின்றது.

இதனால் உத்தரப் பிரதேசத்தில் வெள்ளத்தில் மூழ்கி 60 பேர் இறந்துள்ளதாகவும் 4 இலட்சம் பேர் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவும் பணியில் ஹெலிகாப்டர்களும் படகுகளும் பயன்படுத்தப் பட்டுள்ளதுடன் உணவுப் பொட்டலங்களும் விநியோகிக்கப் பட்டன. நேபாளத்தில் பெய்து வரும் கனமழையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி கடந்த 4 நாட்களில் 101 பேர் பலியாகி உள்ளதாகவும் 130 இற்கும் அதிகமானவர்களைக் காணவில்லை எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் தீவிர மழை வீழ்ச்சி இனி வரும் நாட்களில் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

நேபாளத்தின் கர்னாலி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் 7000 வீடுகளும் பார்டியா மாவட்டத்தில் 12 000 வீடுகளும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. தொடர் மழையால் காலரா நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.