‘பண்டா ஆட்சியின் போது மாப்பிட்டிகம தேரர் என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் படிப்பினை’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! (Video)

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லரை போன்று ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே, அவருக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பு” என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் S.W.R.D.பண்டார நாயக்க ஆகிய இருவரும் தேசிய வாதத்தின் வாக்குறுதியின் பெயரில் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ராஜபக்ஷ ஹிட்லரைப் போன்று இருக்க வேண்டுமென்று திலும் அமுனுகம கூறியுள்ளார்.”

மாப்பிட்டிகம புத்த ரக்கிட்ட தேரருக்கும் பண்டார நாயக்கவிடமிருந்து இது போன்ற எதிர்பார்ப்பே இருந்தது. அது எப்படியான முடிவொன்றுக்கு கொண்டு சென்றது என்பதை நாங்கள் அறிவோம்” என ரிஷாட் எம். பி தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் ஹிட்லர் தொடர்பான இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு, இங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பதிலளிக்கையில், “அடால்ஃப் ஹிட்லர் எந்தவொரு அரசியல்வாதிக்கும் முன்மாதிரியானவர் அல்ல” என தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதுமாத்திரமின்றி, இந்த அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவர பாடுபட்ட முக்கியமானவர்களில் ஒருவரான முருத்தட்டுவே ஆனந்த தேரர், இது தொடர்பில் கூறுகையில், ஹிட்லர் பாணியிலான ஆட்சியை நாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென யாராவது சொன்னால், அதற்கு மக்கள் விரைவில் பதிலளிப்பார்கள்” என்று, தெரிவித்துள்ளதாகவும், ரிஷாட் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.