பலவசதிகள் இருந்தும் சமுகத்தின் நன்மை கருதியே மகிந்தவை விட்டு வெளியேறினோம் -றிஷாத் பதியுதீன்

A.S.M.இர்ஷாத்

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் நான் மக்கள் பணி செய்வதற்காக கேட்ட உதவிகளையெல்லாம் தந்தபோதும் சமூகத்தின் நன்மை கருதியே மஹிந்த ராஜபக்ஷவின் அரசிலிருந்து தமது கட்சி வெளியேறியதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

எருக்கலம்பிட்டியில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஐம்பெரும் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் றிஷாத் தனது உரையில் மேலும் கூறியதாவது: மஹிந்த அரசிலிருந்து வெளியேறுவதற்கு தாங்கள் எடுத்த துணிச்சலான முடிவின் காரணமாகவே அந்த அரசிலிருந்த கட்சிகளும், அமைச்சர்களும், எம்பிக்களும் அடுத்தடுத்து வெளியேறி மஹிந்த அரசை உருக்குலைய வைத்ததாகவும் தெரிவித்தார்.

எருக்கலம்பிட்டி கிராமம் பல்வேறு வரலாற்று சிறப்புக்களை கொண்டுள்ளது. இந்த கிராமத்தில் பிறந்தவர்களும் இங்கே படித்தவர்களும் இன்று இலங்கையிலும், சர்வதேசத்திலும் கொடிகட்டி பறக்கின்றனர். நான் இந்தக் கிராமத்தின் அயல் கிராமமான தாராபுரத்தில் பிறந்த போதும் இந்தக்கிராமத்தின் மீதும் அன்பும் அபிமானமும் கொண்டவன்.

என்னிடத்தில் பிரதேசவாதமோ, ஊர்வாதமோ கிடையாது. இந்த கிராமத்திலுள்ள மக்கள் உதவிகள் கேட்போதெல்லாம் எந்;தவித பேதமும் பாராது என்னால் முடிந்தவரை உதவியுள்ளேன். பதவியை கொடுப்பவன் இறைவனே. அதை எந்த ஒரு தனிமனிதனாலோ குழுக்களாலோ பறித்தெடுக்க முடியாது.

ஏழைக்குடும்பத்தில் பிறந்த எனக்கு அல்லாஹ் இந்த உயரிய பதவியை வழங்கியுள்ளான். அதனை இறைவனுக்கு பொருத்தமான முறையில் அமானிதமாக பயன்படுத்தி வருகின்றேன்.
வாக்குகளை வசீகரிப்பதற்காகவோ அல்லது எனது சொந்த தேவைக்காகவோ நான் இந்தக் கிராமத்திற்கு வரவில். எனது 14 வருட கால அரசியல் வாழ்வில் இந்தக் கிராமத்திற்கும் பணியாற்ற வேண்டும் என்று என் மனச்சாட்சியை தொட்டுக் கேட்டவனாகவே நான் உங்கள் முன்னிலையில் வந்துள்ளேன்.

நமது தனிப்பட்ட தேவைகளுக்காகவோ சுயநல வேட்ககைகளுக்காகவோ ஒரு சமூகத்தை பாழாக்கிவிட முடியாது. இன்று இங்கு வந்த பின்னரே பல்வேறு பிரச்சினைகளை என்னால் நேரடியாக காணமுடிகின்றது.

புதிய வீடமைப்புத்திட்டத்தின் அருகே உள்ள பாலத்தையும் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நான் அதிகாரிகளுக்கு பணித்துள்ளேன்.
எருக்கலம்பிட்டி கிராம மக்கள் தெரிந்தோ, தெரியாமலோ அல்லது நேரடியாகவோ, மறைமுகமாகவோ எனது கடந்த கால வெற்றியில் பங்களிப்பை நல்கியுள்ளார்கள். இதனை நான் ஒருபோதும் மறந்துவிட முடியாது

எருக்கலம்பிட்டி மக்கள் மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஐம்பெரும் விழாவில் பங்பேற்ற அமைச்சர் றிஷாத் பதியுதீன் கிராமத்தின் முதற்கட்ட பணியாக ஐம்பது வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

அத்துடன் மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் வழங்கல், திவிநெகும வாழ்வாதார உதவிகள், மாதர் சங்க சுயதொழில் வாய்ப்பு, நெசவுத்தொழிலுக்கான உதவி ஆகியவற்றையும் வழங்கினார்.
இதுதவிர அமைச்சரின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட எருக்கலம்பிட்டி உள்ளக வீதியையும் அமைச்சர் மக்களிடம் கையளித்தார்.