புதிய உறுப்பினர் சிராஜ் பொதுமக்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்!

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு பாலமுனை மின்ஹாஜ் வட்டாரம் சார்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புதிய உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பாலமுனை 02 ம் பிரிவைச் சேர்ந்த எச்.எம்.சிராஜ் நேற்று (12) மாலை பொதுமக்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

சின்னப்பாலமுனை றியாழுல் ஜென்னா ஜூம்ஆப் பள்ளிவாயலில், நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஏ. உதுமாலெவ்வை தலைமையில் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை மற்றும் ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையிலேயே அவர் பிரதேச சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.தாஹிர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளர் எம்.எஸ்.எம்.ஜௌபர், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எம்.பதுர்தீன், எம்.ஹம்ஸா, பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல்.பாயிஸ், அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் பிரதித் தலைவர் ஐ.எல்.எம். ஹாஸிம் ஸூரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் எஸ்.எம்.முஸர்ரப், மக்கள் காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளர் பி.எம்.ஹூஸைர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர் எச்.எம். சிராஜின் பெயர் அரச வர்த்தமானியில் கடந்த வெள்ளிக்கிழமை (03), அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி திலின விக்ரமரத்னவினால் வெளியிடப்பட்டிருந்தது.

கடந்த அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மின்ஹாஜ் வட்டாரத்தில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளைப் பெற்றுத் தெரிவான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் தனது உறுப்பினர் பதவியை அண்மையில் ராஜினாமாச் செய்திருந்தார். இவரது வெற்றிடத்திற்கே பட்டியல் வேட்பாளராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த எச்.எம். சிராஜ் இவ்வாறு நியமிக்கப்பட்டு சத்தியப் பிரமாணம் செய்துள்ளார்.

பதவி விலகிய எம்.ஏ.அன்சில், தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாகவே இவ்வாறு தனது பதவியை இராஜினாமாச் செய்தார். அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஒப்புதலுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளரினால் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டு, இப்புதிய உறுப்பினருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதேச சபை உறுப்பினராக புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள எச்.எம். சிராஜ் இன்று வியாழக்கிழமை (13) முதல், உத்தியோகபூர்வமாக சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(தி)