புத்தளம் – அறுவக்காடு கழிவகற்றல் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு! புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்!

கொழும்பிலுள்ள குப்பைகளை புத்தளம், அறுவக்காட்டுப் பகுதியில் கொண்டுவந்து கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் பிரதேச மக்கள் இன்று (19) இலவன்குளம் பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்புக் கழிவுகளை புத்தளம் அறுவாக்காட்டிற்கு கொண்டு சென்று முகாமை செய்வதற்கான பாரிய வேலைத் திட்டத்தை 105 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுடன் பாரிய நகர அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டு வருகிறது. ஒருநாளைக்கு கொழும்பிலிருந்து சுமார் 1200 மெற்றிக் டொன் கழிவுகளை புகையிரதம் மூலம் அங்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. மேற்படி கழிவு முகாமை செயற்திட்டத்தை சீனா ஹார்பர் எனும் ஒரு சீன நிறுவனம் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளமையால் புத்தளம் பிரதேசம் ஆரோக்கியமற்றதாக அமையும் எனக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம், கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான பைசர், ஆஷிக் உட்பட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும்  கலந்துகொண்டனர்.

(ன)