புத்தளம் – கரைத்தீவு; மாலை நேர போக்குவரத்து சேவையினை நடத்துமாறு அலி சப்ரி ரஹீம் எம்.பி வேண்டுகோள்!

புத்தளத்திலிருந்து கரைத்தீவுக்கான மாலை நேர பயணிகள் போக்குவரத்து சேவையினை நடத்துமாறு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், இலங்கை போக்குவரத்து சபையின் புத்தளம் முகாமையாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கரைத்தீவிலிருந்து பல தேவைகளுக்காவும் குறிப்பாக, மாலை நேரத்தில் புத்தளம் தள வைத்தியசாலைக்கு வருகைதரும் பொதுமக்கள், நோயாளிகளை பார்வையிட்டதன் பின்னர், மீண்டும் மாலை 6.00 மணிக்கு கரைத்தீவுக்கு செல்வதற்கு பேரூந்து வசதிகளின்றி பெரிதும் சிரமங்களை எதிர்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
இதனையடுத்து, புத்தளம் பேருந்து முகாமையாளருக்கு கடிதம் மூலம் குறித்த வேண்டுகோளினை முன்வைத்துள்ள அலி சப்ரி ரஹீம் எம்.பி, இந்த பிரச்சினைக்குத் தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு வேண்டியுள்ளார்.
இதுதொடர்பில், சாதகமான முறையில் பரிசீலிப்பதாகவும், ஒருங்கிணைந்த பஸ் போக்குவரத்து நேரசூசி பயன்பாட்டில் உள்ளதால் தனியார் துறையுடனும் கலந்து பேசி, மக்களின் தேவையினை நிவர்த்திப்பதற்கு உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் சாலை முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளதாக, அலி சப்ரி எம்.பி யின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.