‘புத்தளம் மாவட்ட சிறுபான்மை சமூகத்துக்கான பாராளுமன்ற பிரதிநிதியை பெறுவதற்கு சிறந்த வியூகம்’ – வேட்பாளர் அலி சப்ரி ரஹீம்!

புத்தளம் மாவட்ட சிறுபான்மைச் சமூகம், கடந்த 33 வருடகாலமாக பெற்றுக்கொள்ள முடியாத பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்முறை பெறுவதற்கான வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பான்மை கட்சிகளுக்கு வாக்களித்து, அதனை இல்லாமல் செய்துவிட வேண்டாம் எனவும் புத்தளம் மாவட்ட தராசு சின்ன முதலாம் இலக்க வேட்பாளர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார்.

புத்தளம், கொத்தான்தீவு கொலணி மற்றும் றஹ்மத் நகர் பிரதேசங்களில் நேற்று இரவு (24) இடம்பெற்ற பிராசரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

புத்தளம் மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களும், தமிழர்களும் தொடர்ந்தேர்ச்சியாக பெரும்பான்மை கட்சிகளுக்கு வாக்களித்து, பெரும்பான்மை பிரதிநிதிகளையே பாராளுமன்றம் அனுப்பிய வரலாறு உள்ளது. இதனால் பெரும்பான்மை உறுப்பினர்கள், அவர்கள் சார்ந்த மக்களுக்கு தேவையான அனைத்தையும் பெற்றுக்கொடுத்து வருகின்றனர். இந்த நிலையினால் நாம் எல்லா துறைகளிலும் பின்தங்கி வருகின்றோம்.

இதனை மாற்றியமைக்க வேண்டும் என பல வருடங்களாக சிந்தித்தது மட்டுமின்றி, பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை செய்த போதும், பெரும்பான்மை வேட்பாளர்களால் எம்மில் சிலர் விலைகொடுத்து வாங்கப்பட்டு, எமது மக்களது வாக்குகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இம்முறையும் அந்த நிலைமையே காணப்படுகின்றது.

இருந்தபோதும் புத்தளம் வாழ் சிறுபான்மை மக்களுக்கான மாற்றம் தொடர்பில், பலராலும் உணரப்பட்டதினால், சகல கட்சிகளினது பிரதிநிதிகளுடன் ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில், இம்முறை தராசு சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.

எமது மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர். தராசு கூட்டணியினை வெற்றிபெறச் செய்வார்கள். இதன் மூலம்தான் எமது மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் பாதுகாப்பு என்பவைகள் உத்தரவாதப்படுத்தப்படும்.

நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் துணிவான செயற்பாடுகள், இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பினை கடந்த காலங்களில் செய்துள்ளது. இதுபோன்று இம்முறை எமது அணியினர் வெற்றிபெறக் கூடிய கள ஆய்வு காணப்படுவதால், தராசு சின்னத்தினை வெற்றியடைச் செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

இந்தக் கூட்டங்களில், வேட்பாளர் எம்.றமீஸ், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இணைப்புச் செயலாளர் இர்ஷாத் றஹ்மத்துல்லா, புத்தளம் நகர சபையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி எம்.சபீக் உட்பட பலரும் உரையாற்றினர்.