புலவர் திருநாவுக்கரசின் மறைவு மன்னார் மக்களுக்கு பாரிய இழப்பாகும்.

மன்னார் மாவட்டத்தின் திருக்கேதீஸ்வர ஆலய அறங்காவலர் சபை இணைச்செயலாளர் புலவர்  அம்பலவாணர் திருநாவுக்கரசு (சமாதான நீதவான்) மறைவு இந்துக்களுக்கு மாத்திரமன்றி அந்த மாவட்டத்தில் வாழும் ஏனைய இன மக்களுக்கும் கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

தமிழிலே நன்கு புலமையும், பாண்டித்தியமும் பெற்ற அமரர் திருநாவுக்கரசு சைவத்தின் மேன்மைக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தார்.

மன்னார் மாவட்டத்தில் இந்து, இஸ்லாமிய கிரிஸ்தவ மக்களின் இன நல்லுறவை வலுவாக்கும் வகையில் அவரது செயற்பாடுகள் அமைந்திருந்ததோடு ஐக்கியத்துக்காகவும் பாடுபட்டவர். அத்துடன் கல்வி மேம்பாட்டுக்காகவும் அவர் பல அரிய பணிகளை மேற்கொண்டார். திருக்கேதீச்சர அறப்பணிகளில் மாத்திரமின்றி மாவட்டத்தின் இந்து சமய வளர்ச்சிக்கும் தன்னாலான பங்களிப்பை நல்கியவர்.

மன்னார் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவனென்ற வகையிலும், அந்த மாவட்டத்தின் பிரதிநிதியென்ற வகையிலும் அவரது பண்பான செயற்பாடுகளை நான் நன்கு அறிவேன்.

அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றேன்.

-ஊடகப்பிரிவு-