“பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தவே ஜனாஸாக்களை எரிக்கின்றனர்” – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்வைத்து, முஸ்லிம்களுக்கு நாங்கள் முடிந்தளவு அநியாயங்களை செய்துள்ளோம் என்று பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தவே, முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரியூட்டப்படுகின்றன என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், டொக்டர் ஷாபி ஆகியோர்களை இலக்குவைத்து தேர்தல் செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதன் தொடரில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்வைத்து, முஸ்லிம் அரசியல் தலைவர்களை கைது செய்ய வேண்டும் அல்லது ரிஷாட் பதியூதீனை கைது செய்ய வேண்டும் எனும் திட்டங்கள் இருந்தபோது அது சாத்தியம் இல்லாமல் போனதால் ரிஷாட் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் மற்றும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் அதனோடு சிறுசிறு பிள்ளைகள், பெரியோர்காள் என்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் பொதுத் தேர்தலை முன்வைத்து பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்துகின்ற வேலைத் திட்டம் என்று அவர் சாடினார்.

“உலகத்தில் எங்கேயாவது ஒரு நாட்டில் நகர சுத்திகரிப்பு அல்லது மலங்களை அள்ளி குழியில் போடுகின்ற தொழில் செய்யும் ஒருவர் மரணித்தால் கூட, அவரின் உடலை இன, மத பேதங்களுக்கு அப்பால் மிக கௌரவமாக நல்லடக்கம் செய்கின்ற நடைமுறை இருந்து வருகிறது. உலகத்தில் எந்த நாடும் பின்பற்றாத ஒரு வேலைத்திட்டத்தை எமது நாட்டில் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் கொரோனா இல்லாத ஒரு சகோதரியின் ஜனாஸாவும் எரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான வேலைகளைச் செய்கின்ற போது முஸ்லிம்கள் கவலைப்படுவார்கள், சங்கடப்படுவார்கள் என்று தேசியத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகளுக்கு தெரியாமலில்லை. ஆனால், இதைச் செய்வதன் மூலம் இந்தக் கொரோனா பிரச்சினைக்குள் இதையும் நாங்கள் செய்கிறோம் என்று பேரினவாத சமூகத்திக்குச் சொல்லுகிறார்கள் என்பதுதான் எனது நூறு வீத நிலைப்பாடாகும்.

கொரோனா தொற்றினால் மரணிக்கின்றவர்களின் ஜனாஸாக்களை எடுத்து அடக்கம் செய்வதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின் படி அடக்கம் செய்வதன் மூலம் எவ்வாறான தொற்றுக்களும் ஏற்படாது என்று தெரிவித்து, எமது கட்சி அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் ஒன்றினை செய்துள்ளது. குறித்த வழக்கில் எங்களுக்கு உச்ச நீதிமன்றத்தினூடாக சாதகமான பதில் கிடைக்கும் என்று அரசியல் தலைவர்களிடத்திலும், சட்டத்தரணிகளிடத்திலும் நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.