‘பொத்துவில் உப பஸ் டிப்போ, பிரதான டிப்போவாக தரமுயர்த்தப்பட வேண்டும்’ – நாடாளுமன்றில் முஷாரப் எம்.பி வேண்டுகோள்!

பாராளுமன்றில் நேற்று (24)  இடம்பெற்ற போக்குவரத்து அமைச்சு மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் மீதான விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் உரையாற்றிய போது…

“அண்மையில் பசறையில் இடம்பெற்ற சோகமான கோர பஸ் விபத்து உட்பட நாட்டில் நாளாந்தம் நிகழ்ந்து வரும் வீதி விபத்துக்களின் அதிகரிப்பை அவதானிக்கையில், நாட்டின் வீதி அபிவிருத்தி மற்றும் பொதுப் போக்குவரத்து மேலாண்மை துறைகளில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை உணரப்படுகிறது.

போக்குவரத்து சபையில் அரசு மேற்கொண்டு வரும் மாற்றங்களின் போது, போக்குவரத்து சேவையின் அவசியம் உணரப்படுகின்ற பிரதேசங்கள் குறித்து விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் சனத்தொகை அதிகம் காணப்படும், சம்மாந்துறை உப பஸ் டிப்போவின் நிர்வாகம் மற்றும் வாகனங்கள் வேறு இடத்திற்கு நகர்த்தப்படுவதை இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விளைகிறேன்.

அத்துடன், அதிக உள்ளக மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் மூலம், நாட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் பொத்துவில் பிரதேசத்தில் அமைந்திருக்கும் உப பஸ் டிப்போவானது, பிரதான டிப்போவாக தரமுயர்த்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்..

அனைவரும் சட்டத்தை அறிந்துகொள்ள வேண்டிய வகையில், பாடசாலைகளின் பாடத்திட்டத்தில் சட்டம் இணைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்  இத்தருணத்தில், வீதி ஒழுங்குகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களும் பாடப்புத்தகங்களில் உள்ளடக்கப்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் படி, இத்தாக்குதலின் பின்னணியில் இருக்கும் சூத்திரதாரிகள் யாரோ என்பதாகவும், முஸ்லிம்களுக்கு இதில் எந்தவித தொடர்பும் இல்லை என தெட்டத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், புர்கா தடை, மத்ரஸாக்களை தடை செய்தல் என அபத்தமான செயல்களில் அரசாங்கம் அரசியல் செய்ய முற்படுவதை விடுத்து, அதனை சமூக விழுமியங்கள், பண்பாடு, கலாச்சாரம், உரிமை என்பன பாதிக்கப்படாத வகையில் அணுக வேண்டும்.

அண்மையில் நிகழ்வொன்றில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சாய்ந்தமருது பிரதேசம் ஸஹ்ரான் மறைந்திருந்து பயிற்சி பெற்ற இடம் என்றும், அவன் வாழ்ந்த இடம் என்றும் புரியப்படும் வகையில் வெளியிட்ட கருத்தை மேற்கோள்காட்டி, குண்டுதாரிகளுடன் சம்பந்தப்பட்ட சகாக்களின் மறைவிடம் குறித்து பாதுகாப்புதுறைக்கு தகவல் தந்த ஒட்டுமொத்த சாய்ந்தமருது மக்களின் மனம் புண்படும்படியாக, பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பேசியதை சாடி, பொறுப்புள்ள வகையில் கருத்துக்களை அவர் தெரிவிக்க வேண்டும்” என தெரிவித்தார்.