பொய்களினால் மக்கள் செல்வாக்கை கட்டியெழுப்ப முயலும் பைசால் காசீம் – நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹீர் காட்டம்!

சுகாதார இரக அமைச்சர் பைசால் காசிம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு முயற்சிக்கிறார். தன்னால் அபிவிருத்தி பணிகளை செய்ய முடியாது என்பதற்காக என் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்களின் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்து கொள்ள நினைக்கிறார். இவ்வாறு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தனது அபிவிருத்திகளுக்குத் தடைகளை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்துக் கொண்டுவருகின்றார். இக்குற்றச்சாட்டு தொடர்பாக கருத்துக் கேட்ட போதே மேற்கண்டவாறு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.

இராஜாங்க அமைச்சர் கடந்த சுமார் 15 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பதவிகளை வகித்து வருகின்றார்;. தற்போது சுகாதார இராஜாங்க அமைச்சராக உள்ளார் இவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட காலம் முதல் இன்று வரை நிந்தவூர் பிரதேசத்திற்;கு கொண்டு வந்த பாரிய அபிவிருத்தி பணிகள் எவை என கேட்கின்றேன்.

மேலும், அவர் தனது அபிவிருத்திக்கு தடையாக நான் இருந்து கொண்டு இருப்பதாக தெரிவிக்கின்றார். அவர் கொண்டு வந்த எந்த அபிவிருத்திக்கு தடையாக இருந்தேனென்று ஆதாரபூர்வமாக அவரினால் கூறமுடியுமா?

நிந்தவூர் பிரதேசத்தின் அபிவிருத்திகளுக்காக அவரினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்த ஒரு நிதியும் திருப்பி அனுப்பப்படவில்லை. அவரால் கொண்டு வந்த எல்லா அபிவிருத்திகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கியே வந்துள்ளேன். மேலும், மக்கள் நடமாட்டம் இல்லாததும், குடியிருப்புக்கள் இல்லாததுமான வீதிகளை அமைக்க முற்பட்ட போது, அதனை மாற்றி மக்கள் பாவனைகளும், குடியிருப்புகளும் அதிகமாக உள்ள வீதிகளையும், இன்று வரையும் குன்றும், குழியுமாக காணப்படுகின்ற எத்தனையோ வீதிகள் உள்ளன. அவற்றை முதன்மைப்படுத்தி அபிவிருத்தி செய்யுமாறு கேட்டிருந்தேன். ஆனால், அவர் அதைத் தவிர்த்து தனக்கு சொந்தமாக அட்டப்பள்ளம் பிரதேசத்தில் காணப்படும் காணிக்கு சுமார் 600 மீட்டர் பாதையொன்றை அமைக்க வேண்டும் என்று அடம் பிடித்தார். அதனையும் கூட நாங்கள் தடுக்கவில்லை. இப்படியான அவருடைய செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி கொண்டு இருக்கும் நிலையில் அபிவிருத்திகளை தடை செய்கின்றேன் என பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்.

நிந்தவூர் பிரதேச மக்கள் அவர் ஒரு இராஜாங்க அமைச்சர் என்ற அடிப்படையில் பல்வேறு அபிவிருத்திகளை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள். குறிப்பாக பாடசாலைகளுக்கான கட்டிட வசதிகள், நிந்தவூர் காதிநீதிமன்ற கட்டிடம், பாடசாலைகளில் காணப்படும் தளபாடக் குறைபாடுகள்;, நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலையின் மைதானத்தை நாசமாக்கி கட்டப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள மண்டபத்தை பூர்த்தி செய்து தருமாறும், நிந்;தவூரில் பாரிய அழிவினை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் கடலரிப்பினை தடுக்குமாறும், இன்னும் பல முக்கிய அபிவிருத்திகளைச் செய்து தருமாறும் அமைச்சர் என்ற வகையில் அவரிடம் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மேலும், நிந்தவூர் பிரதேசத்தில் வேளாண்மைச் செய்கை ஒரு போகத்தில் மாத்திரம்தான் செய்யப்படுகின்றது. கடந்த காலங்களில் இரண்டு போகங்கள் செய்யப்பட்ட நிந்தவூர் பிரதேச வயல்களுக்கு நீர்பாய்ச்சுகின்ற வாய்க்கால்கள், குளங்கள் புனரமைப்பு செய்யப்படாமையினாலேயே இந் நிலை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாகவும் விவசாயிகள் இராஜாங்க அமைச்சரை மூன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் சந்தித்து இப்பிரச்சினையை தீர்த்து தருமாறு கேட்டுக் கொண்டார்கள். ஆனால், எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. வரட்சியைக் காரணங்காட்டித் தப்பித்து கொள்கின்றார். ஏனைய பிரதேசங்களில் இரண்டு போகங்கள் செய்கை பண்ணப்படுகின்றன. வாய்கால்களும், குளங்களும் உரிய காலத்தில் புனரமைப்பு செய்யப்பட்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது.

நிந்தவூர் பிரதான வீதியில் பொது சந்தை ஒன்றினை அமைத்துத்தருவதாக மீன் வியாபார சங்கங்களிடம் பல சுற்று பேச்சுவார்த்தை நடாத்தி இருந்தார். அதன் போது 06 மாத காலத்திற்குள் பொது சந்தை கட்டிதருவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார். 06 வருடங்கள் கழிந்த பின்னரும் பொது சந்தை அமைத்து கொடுக்கப்படவில்லை. எமது பிரதேச சபையினாலும் இராஜாங்க அமைச்சரின் ஆலோசனைக்கு ஏற்ப கட்டப்பட்டுள்ள பொது சந்தைக்கு வியாபாரம் செய்வதற்கு சொல்ல வேண்டாமென்று அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் வியாபாரிகளை தடுத்த வரலாறும் இராஜாங்க அமைச்சருக்கு இருக்கின்றது. தற்போது வியாபாரிகள் ஏமாற்றப்பட்டு வீதியில் நிற்கின்றார்கள்.

நிந்தவூர் பொது மைதானத்தினை அபிவிருத்தி செய்து தருமாறு நிந்தவூர் அனைத்து விளையாட்டு கழகங்களின் சம்மேளனம் இராஜாங்க அமைச்சர் பைசால் காசிமிடம் கேட்டுக்கொண்டது. ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொது விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்ய முடியாதென்பதாகவே அவரின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

நான் முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட உறுப்பினராக இருந்த காலத்தில் விளையாட்டு துறை பிரதி அமைச்சராக இருந்த எச்.எம்.எம் ஹரீஸிடம் பொது மைதானத்தை புனரமைப்பதற்க்காக நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தேன். அதற்கு அமைவாக அவர் முதற்கட்டமாக ரூபா 20 இலட்சம் நிதி ஒதுக்கி பார்வையாளர் அரங்கை அமைத்துத் தந்திருந்தார். மீண்டும் ரூபா 30 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து இருந்தார். இக்காலத்தில் பிரதேச சபை கலைக்கப்பட்ட சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி அந்நிதிக்கு மண் போடுவதற்காக நிந்தவூர் வெளவாலோடை பிரதேசத்தில் ஆற்றுக்கு அருகாமையில் சிறியதொரு மைதானத்தினை அமைத்து உள்ளார். இந் நிதியை பொது விளையாட்டு மைதானத்திற்கு பயன்படுத்துமாறு விளையாட்டு கழகங்கள் பராளுமன்ற உறுப்பினரான பைசால் காசிமை நேரடியாக சந்தித்து மன்றாட்டமாக கேட்ட போதிலும் அதை அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

தற்பொழுது வெளவாலோடை சிறிய மைதானத்தின் ஓர் ஓரத்தில் பூப்பந்து உள்ளக விளையாட்டு அரங்கு (வெட்மிடன் கோட்) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூப்பந்து உள்ளக விளையாட்டு அரங்கின் நிர்மாணிப்பு வேலைகள் பல குறைபாடுகளை கொண்டதாக காணப்படுகின்றன. இக்குறைபாடுகளை கொண்ட நிலையிலேயே பிரதேச சபையின் (2018) தேர்தலுக்கு முன்னதாக பிரதேச சபையின் செயலாளரை வற்புறுத்தி அதனை கையேற்குமாறு பணித்தார். அப்போது இருந்த செயலாளர் இக்குறைபாடுகளை அவ்விடத்திலேயே சுட்டிக் காட்டினார். இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதுடன், அக்கட்டத்தின் காணி உரிமை, அக்கட்டிடத்திற்கான வரைபடம், கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் மதிப்பீடு, கட்டப்பட்ட காலப்பகுதி உள்ளிட்ட ஆவணங்களோடு ஒப்படைக்குமாறும் கேட்டிருந்தார். ஆனால், இக்குறைபாடுகள் எதனையும் நிவர்த்தி செய்யாமலும், ஆவணங்களை ஒப்படைக்காமல் பூப்பந்து உள்ளக விளையாட்டு அரங்கை பொறுப்பெடுக்குமாறும் இராஜாங்க அமைச்சர் பிரதேச சபையை கேட்டுக்கொள்வது சிறு பிள்ளை தனமான செயலாகும். இக்கட்டிடத்தில் காணப்படும் குறைபாடுகள், பிரச்சினைகள், மோசடி, கட்டிடத்தின் உறுதியற்ற தன்மை என்பவற்றை மூடி மறைப்பதற்காக பிரதேச சபை பொறுப்பெடுக்கவில்லை என்று பலியை போடுகின்றார். இவ்வேலைத் திட்டங்கள் யாவும் நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் செய்து முடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

1996ம் ஆண்டு மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களினால் அடிக்கல் வைக்கப்பட்ட நிந்தவூர் கலாசார மண்டப வேலைகள் அவரின் மரணத்தோடு முற்றாக கைவிடப்பட்டிருந்தது. இம்மண்டபத்திற்கு அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபம் என்று பெயர் சூட்டப்பட்டது. இம்மண்டபத்தினை கட்டி முடித்து தருமாறு நிந்தவூர் பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு, புத்தி ஜீவிகள் என பலரும் அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த எம்.ரி. ஹசன் அலி, பைசால் காசிம் ஆகியோரிடம் கோரிக்கைகளை முன்வைத்தார்கள்.

ஆயினும், மர்ஹும் அஷ்ரப்பின் கொள்;கையில் மிகுந்த பற்று கொண்ட ஹசன் அலி 2015ம் ஆண்டு ரூபா 1 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து இருந்தார். அந்நிதிக்கான வேலைகள் செய்து முடிக்கப்பட்டதன் பின்னர், 2017 ஆம் ஆண்டு வரை எந்தவித நிதி ஒதுக்கீடும் இம் மண்டபத்தின் வேலைகளுக்கு செய்யப்படவில்லை. 2017 ஆம் ஆண்டு அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிட வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இச்சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் பைசால் ஹாசிம் அவர்கள் கட்டிடத்தின் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர் தவிசாளர் கட்டிடத்தை பொறுப்பேற்க மாட்டார் என தெரிவித்துள்ளார். இக் கட்டிடத்தின் வேலைகளை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தினால் கூட கட்டிட வேலைகள் பூர்த்தி செய்வதற்கு 3 வருடங்களுக்கு மேல் எடுக்கும். இவ்வாறு இருக்கும் நிலையில் சாஸ்திரம் சொல்பவனைப் போல் தவிசாளர் பொறுப்பேற்;கமாட்டார் என்று கூறுகின்றார்;. இவரின் கணிப்பீட்டின்படி அடுத்த பிரதேச சபைத் தேர்தலிலும் அவரின் அணியினர் அடுத்த முறையும் பிரதேச சபையின் அதிகாரத்தினைப் பெற்றுக் கொள்ளமாட்டார்கள் என நினைக்கின்றார். கட்டிடம் முடியும் போது அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கும்.

முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவை பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அழைத்து வந்து நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை மைதானத்தின்; மேற்கு பக்கம் ஒரு கட்டிடத்திற்கு அடிக்கல் வைத்தார். அக்கட்டிடம் அடிக்கல்லோடு நிற்கின்றது. நிந்தவூர் வெளவாலோடை பிரதேசத்தில் மீன்பிடி இறங்குதுறை அமைப்பதற்கு அடிக்கல் ஒன்று வைத்தார். இது கூட அவ்வாறே அடிக்கல் வைத்ததோடு நின்று விட்டது. இவ்வாறு நிந்தவூர் பிரசேத்தின் அபிவிருத்தி தொடர்பாக இராஜாங்க அமைச்சர் பைசால் காசிமின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், அவர் தமது இயலாமையை மறைப்பதற்காக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எனது அபிவிருத்திக்கு தடையாக இருக்கின்றார். எனது அபிவிருத்தியின் வேகம் 50 வீதத்தினால் குறைவடைந்துவருகின்றது என்று சொல்லிக்கொள்வதில் வெட்கம் இல்லையா என்று கேட்கின்றேன். அவர் சொல்லும் ஐம்பது வீத வீழ்ச்சி என்பது கடந்த பிரதேச சபைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவாகும். இதனால், அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த பிரதேச சபைத் தேர்தலில் 16750 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதில், 7900 வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சிக்கும் (முஸ்லிம் காங்கிரஸிற்கும்), 8850 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. இதுதான் அவர் கூறிக் கொண்டிருக்கும் ஐம்பது வீத வேகக் குறைபாடாகும். வாய்த்தடுமாற்றத்தினால் அபிவிருத்தி என்று சொல்லிவிட்டார் என நினைக்கின்றேன். அவரொரு பாராளுமன்ற உறுப்பினர், இராஜாங்க அமைச்சர், முஸ்லிம் காங்கிரசின் பிரதி தேசிய அமைப்பாளர், நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் என்று எல்லா பதவி வழிகளிலும் உயர் நிலையில் இருக்கின்றார். இவ்வாறு அவரின் பதவிகள் இருக்கும் போது சாதாரண தவிசாளராக இருக்கின்ற நான் அவரின் அபிவிருத்தியை தடுப்பதாக கூறுகின்றாரே இதனை ஏற்றுக் கொள்ள முடியுமா? இது அறிவிற்கு பொருந்துவதாக தெரிகின்றதா?

கல்முனையில் நவீன ;தெரு மின் விளக்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, காரைதீவு – மாவடிப்பள்ளி வீதி, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஆகிய ஊர்களின் பிரதான வீதிகளில் நவீன மின்விளக்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது போன்று நிந்தவூரில் அமைப்பதாகவும் பல இடங்களில் அவர் கூறி இருந்தார். ஆனால் இதுவும் நடைபெறவில்லை. இதையும் நான்தான் தடுத்தேனா என்று கேட்க விரும்புகின்றேன்.

சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் கடந்த பிரதேச சபைத் தேர்தலில் நிந்தவூரில் இடம்பெற்ற அரசியல் மாற்றத்தினால் தடுமாறிக் கொண்டு இருக்கின்றார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு முகம் கொடுப்பது என்பதில் அச்சம் அடைந்து உள்ளார். இதனால், தவிசாளராகிய என் மீது இல்லாத, பொல்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, இழந்து நிற்கின்ற மக்கள் செல்வாக்கை சரி செய்யலாமென கனவு காண்கின்றார். இதனால் அவர் மூளைக்கும் நாவுக்கும் தொடர்பு இல்லாமல் பேசுகின்றார். அவரிடம் நாம் விடுக்கின்ற வேண்டுகோள் உண்மையை பேசுங்கள் அல்லாஹ் உதவி செய்வான் என்பதேயாகும்.

மேலும், 2015 ஆம் ஆண்டு பிரதேச சபை கலைக்கப்பட்டது முதல் 2018 ஆம் ஆண்டு பிரதேச சபைத் தேர்தல் நடைபெறும் வரைக்கும் நிந்தவூர் பிரதேச சபையின் முழுக்கட்டுப்பாடும் அவரின் பார்வையிலேயே இருந்தது. அப்போது இவரினால் என்ன அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன. இன்றுபோல் அன்றும் அனைத்துப் பதவிகளையும் வகித்திருந்த இராஜாங்க அமைச்சர், அக்காலப்பகுதியில் அபிவிருத்திகளை செய்யாது இருந்தமைக்கான தடைகள் என்னவென்பதை மக்களே நீங்களே சிந்தியுங்கள்.

நிந்தவூர் பிரதேச மக்கள் இராஜாங்க அமைச்சரின் சுயரூபத்தை விளங்கி வைத்துள்ளார்கள் அவர் அபிவிருத்திகளை வாயால்தான் செய்வார் என்று அறிந்து வைத்துள்ளார்கள். என் மீது வீண்பலிகளை போடுவதே இவரின் இலட்சியமாகும். நான் முஸ்லிம் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக இருந்த காலத்திலும் இவ்வாறே குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். இதனையிட்டு நான் அலட்டிக் கொள்ளவில்லை. மக்களிடம் பொய்யான தகவல்கள் சென்று விடக்கூடாது என்பதற்காக இந்த அறிக்கையினை வெளியிடுகின்றேன்.