மடாட்டுகம பகுதி மக்களுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு!!!

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் வேண்டுகோளிற்கு இணங்க மேர்சி லங்கா நிறுவனத்தின் நிதியொதுக்கீட்டில் கெக்கிராவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மடாட்டுகம பகுதியில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று அமைத்துக்கொடுக்கப்பட்டது.

இது மக்கள் பாவனைக்காக 2018.12.27 அன்று அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் குறித்த பிரதேச மக்கள், மேர்சி லங்கா நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளர் எம்.ஆர்.எம். முனாஸ், கெக்கிராவ பிரதேச சபை உறுப்பினர் ஷாலித்த மற்றும் சமூக சேவையாளர் நளீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் பிரதம அதிதியான பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அங்கு உரையாற்றுகையில்,

இலங்கை நாட்டில் அதிகளாவாக சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்ற மக்கள் அனுராதபுர மாவட்டத்திலேயே காணப்படுகின்றார்கள். இதற்கு காரணம் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள குடிநீரானது ப்லோரைட் எனும் பதார்த்தத்தை அதிகளவாக கொண்டுள்ளமையே. அனுராதபுர மாவட்ட மக்களின் உடல் நலத்தை கருத்தில்கொண்டு அனுராதபுர

மாவட்டத்தில் பல பகுதிகளுக்கும் நான் ஏதோ ஒரு வகையில், குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை பெற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கின்றேன். இம்மாத இறுதிக்குள் இன்னும் 5 சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறந்து வைக்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதி தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் மூலம் இந்த பிரதேசத்தில் உள்ள அனைத்து மக்களும் பயனடைய வேண்டும். இன, மத பேதமின்றி அனைத்து சமூக மக்களுக்கும் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.