மாடு அறுப்பதற்கான தடையை மீள்பரிசீலனை செய்யவும் – நிந்தவூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

அரசாங்கம் மாடு அறுப்பவதற்கு தடை விதிக்க இருப்பதனை மீள்பரிசீலனை செய்யுமாறு நிந்தவூர் பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்.
நிந்தவூர் பிரதே சபையின் செப்டம்பர் மாதக் கூட்டம் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் தலைமையில் இன்று (30.9.2020) காலை 10 மணியளவில் நடைபெற்றது.
இன்றைய அமர்வின் போது தவிசாளர் தாஹீர் உரையாற்றுகையில்,
மாடு அறுப்பதற்கு அரசாங்கம் தடையை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கிகாரத்தைப் பெற்றுள்ளது. பசு வதைக்கு எதிராகவே இத்தடையை கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், இத்தடை முயற்சியின் பின்னணியில் இன ரீதியான செயற்பாடும், அரசியல் நோக்கமும் இருப்பதுடன், இனவாதிகளை திருப்திபடுத்தும் செயலும் மறைந்துள்ளது.
மனிதனின் உணவுத் தேவைக்காக மாடு மட்டுமன்றி வேறு உயிர்களும் கொல்லப்படுகின்றன. மனித தேவைக்காக உயிர்வதை செய்யப்படுகின்றதென்றால், பசுக்கு மட்டுமன்றி பன்றி, கோழி, ஆடு போன்றவற்றிக்கும் உயிர்கள் உள்ளன. ஆனால், அவற்றிக்கு தடையை கொண்டு வரு நினைப்பதுமில்லை. அவற்றினை உயிராகக் கொள்வதுமில்லை. ஆதலால், பசுவதைக்கு எதிராக மாடு அறுப்பதற்கு தடையை கொண்டு வருவதற்கு அமைச்சரவை வழங்கியுள்ளது என்பது ஒரு திட்டமிட்ட புறக்கணிப்பாகும்.
மேலும், மாடு அறுப்பவதற்கு தடை வருகின்ற போது பல பிரதேச சபைகளின் வருமானம் இழக்கப்படும். மாட்டுப் பண்ணையாளர்களையும் பாதிக்கச் செய்யும். ஆதலால், மாடு அறுப்பதற்கு தடையை ஏற்படுத்தவுள்ளதனை மீள்பரிசீலனை செய்யுமாறு இச்சபை அரசாங்கத்தினை கேட்டுக்கொள்கின்றது எனத் தெரிவித்தார்.