மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுடனான சந்திப்பு!

மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், திருமலை மாவட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் அசங்க ஆகியோரை இன்று காலை (23)  சந்தித்துக் கலந்துரையாடினார். 

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அன்றாட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த அவர், வருமானம் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட உணவுத் தேவைக்காக உலர் உணவு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை துரித்தப்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன், மாவட்ட அரச அதிபர், ஆளுநர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகளுடனும் தொடர்புகளை மேற்கொண்டு, இந்த விடயம் தொடர்பில் விரைவான நடவடிக்கைகளை மேற்கோள்வதற்கான செயற்பாடுகளையும் அவர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.