முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் உயிர்த்தியாகி அலி உதுமான்

இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த அலி உதுமானின் உயிர்த்தியாகம் மறக்கப்பட முடியாதொன்றாகும். இவ்விடத்தில், “தியாகிகள் மரணிப்பதில்லை” என்ற மாபெரும் தலைவர் அஷ்ரப் அவர்களின் கூற்றை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இஸ்லாத்தின் வரலாறு இரத்தங்களாலும் பல யுத்தங்களாலும் வரையப்பட்ட காவியமாகவே இருக்கின்றது. முஸ்லிம்களுக்கென்று அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கிய மர்ஹூம் அஷ்ரபோடு ஆரம்ப காலத்தில் 1980 களில் இருந்து ஒன்றாக பாடுபட்ட அலி உதுமான் அவர்கள் 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தீவிரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகினர்.

அன்னாரின் மறைவுக்கு பிறகு நடைப்பெற்ற அனைத்து கூட்டங்களிலும் அஷ்ரப் அவர்கள் அலி உதுமானின் பெயரை ஞாபகப்படுத்த மறக்கவில்லை. அதேபோன்று, அக்கால கட்டத்தில், அரசாங்க நிர்வாக சேவையில் இருந்த   புலிகளின் துப்பாக்கிக்கு இரையான  மூதூரைச் சேர்ந்த மக்பூல் அவர்களின்   உயிர் தியாகத்தையும் எமது அரசியல் வரலாறு மறந்து விடாது.

அலி உதுமான் அவர்கள்  1946 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிறந்தார். நானும் 1946 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலே பிறந்தேன். எனவேதான், அஷ்ரபின் அரசியல் வரலாற்றில் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒன்றாக இருந்த எனக்கு  அலி உதுமான் அவர்களின் அரசியல் உறவை மறக்கமுடியாமல் இருக்கின்றது.

மேற்கூறப்பட்ட தியாகிகளின் இரத்தத்தாலும், பல்லாயிரக் கணக்கான போராளிகளின் வியர்வையாலும் அல்லாஹ்விடம் மடிப் பிச்சை கேட்டு முந்தானையோடு கையேந்திய தாய்மார்கனின், சாகோதரிகளின் கண்ணீராலும் உருவாக்கப்பட்ட மர்ஹூம் அஷ்ரபின் அரசியல் இயக்கம் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றியுள்ளதா? , நிறைவேற்றுகின்றதா? என்பது இன்று மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

மாபெரும் தலைவர் அஷ்ரபுக்கு ஈடானவொரு தானைத் தலைவர் ஒருவரை இன்று எமது சமூகம் தாகத்தோடு தேடித்துடித்துக் கொண்டு இருக்கின்றது. இந்த தலைமைத்துவத்தாகம் தீரும் காலம் வெகு தூரத்திலில்லை. இத்தகைய தலைவரை இனம் கண்டுகொள்வது  கடினமானதொன்றல்ல. இதனை ஊகிப்போர் உணர்த்து கொள்வார்கள்.

எஸ்.சுபைர்தீன்

பொதுச் செயலாளர்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்