‘முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற இனவாத அச்சுறுத்தலை போக்க, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – திகாமடுல்ல வேட்பாளர் ஜவாத்!

ஜனாதிபதி, இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் பொதுத் தலைவராக இருந்தால், ஏன் இந்த நாட்டில் தலைதூக்கியிருக்கின்ற இனவாதத்தை ஒழிக்க முன்வரக்கூடாது? என்ற கேள்வியை முன்வைப்பதுடன், இவ்விடயம் தொடர்பில் பேசுவதற்கு ஜனாதிபதி சந்தர்ப்பம் தரவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் கே.எம்.ஏ.றஸாக் (ஜவாத்)வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருதமுனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே. அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது,

“இந்த நாட்டிலே வாழுகின்ற முஸ்லிம் சமூகம், இந்த நாட்டுக்கு எதிராகவோ, ஆட்சியாளர்களுக்கு எதிராகவோ ஒரு போதும் செயற்பட்டதில்லை. மாறாக பெரும்பான்மை சமூக ஆட்சியாளர்களுக்கு முண்டு கொடுத்தே வந்திருக்கின்றார்கள்.

இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களை அர்ப்பணித்த முஸ்லிம் சமூகம், இன்று வரை நாட்டிற்கும் ஆட்சியாளர்களுக்கும், விசுவாசமாகவே வாழ்ந்து வருகின்றது. இந்த நிலையில், இன்று முஸ்லிம் சமூகம் இனவாத அச்சுறுத்தலுக்குள்ளாகி, ‘எந்த நேரத்தில் என்ன நடக்குமோ’ என்ற அச்சத்துடன் வாழும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த அச்ச நிலையைப் போக்க ஜனாதிபதி முன்வர வேண்டும்.

ஆனால், இன்று இனரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் முஸ்லிம் சமூகம் அச்ச நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலை தொடரக்கூடாது. மாறாக இந்த நாட்டின் சிறுபான்மை  சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம் சமூகத்திற்கான உரிமைகளை வழங்கி, அவர்களை அரவணைத்துச் செல்வதற்கு ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். மதவாதிகளின் அத்துமீறிய செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும்.

கல்முனை தொகுதியில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எடுக்கின்ற வாக்கை விட ஒரு வாக்கேனும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எடுத்துவிட்டால், அதிலிருந்து முஸ்லிம் காங்கிரஸின் திருத்தம் ஆரம்பிக்கும். காணிக்கு உறுதி எழுதிக்கொடுத்ததைப் போல, கடந்த இருபது வருடமாக பதவிகளை வைத்துக்கொண்டிருக்க முடியாது. இம்முறை நான் தேர்தலில் போட்டியிடுவதால், கடந்த இருபது வருடங்களாக தொட்டிலில் ஆடிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது.

அம்பாறை மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களின் மனதிலிருக்கின்ற பயத்தை நீக்குவதற்கும், தெளிந்த மன நிலையைக் கொண்டு வருவதற்கும், அவர்களிடம் இருக்கின்ற அச்ச நிலையை இல்லாமல் செய்வதற்கும் என்னை அர்ப்பணிப்பேன். அதற்காக என்னை இழப்பேன். அபிவிருத்தி இல்லாமல் பின்தங்கிக் கிடக்கின்ற பிரதேசங்களை இனங்கண்டு, அபிவிருத்தி செய்யவும் ஆயத்தமாக இருக்கின்றேன்” என்றார்.