மு கா முக்கியஸ்தர்கள் றிஷாதின் கரங்களைப் பலப்படுத்த முடிவு!

-சுஐப் எம் காசிம்

முஸ்லிம் காங்கிரசின் நீண்ட கால உறுப்பினரும் பொறியியலாளருமான சாய்ந்தமருதுவைச் சேர்ந்த ஹிபத்துல்  கரீம் தலைமையிலான அந்த பிரதேச முக்கியஸ்தர்கள் பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் நேற்று (28) இணைந்து கொண்டனர்.

7M8A2373 (1)

மர்ஹூம் அஷ்ரப்புடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட ஹிபதுல் கரீம், அவரது ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட்டை இன்று கொழும்பில் சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்தினார்.

அவர் கருத்து தெரிவித்த போது,

சாய்ந்தமருது மக்கள் காலாகாலமாக முஸ்லிம் காங்கிரசிற்கே வாக்களித்து வருகின்ற போதும் அந்தக் கட்சியினால் தமது பிரதேசத்திற்கு உருப்படியான எந்த நன்மையும் இதுவரை கிடைக்கவில்லை.

அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது பிரதேசம் பல்வேறு வகைகளிலும் பின் தங்கியே காணப்படுகின்றது. தேர்தல் கால வாக்குறுதிகளை நம்பி நம்பி நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றோம்.

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபையை பெற்றுத்தருவோமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முன்னால் எமக்கு வாக்குத் தந்தவர்கள் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தனியான சபையை வென்றெடுப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் இதய சுத்தியாக செயற்படவில்லை.

ஆனால் எமது பிரதேசத்திற்கென தனியான சபையொன்றை பெற்றுத் தருவதில் மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் காட்டிவரும் அக்கறையும்  அபரிமிதமான நடவடிக்கையும் எமது கோரிக்கைக்கு பலம் சேர்ப்பதாலேயே அவருடைய கரத்தை வலுப்படுத்துவதற்காக இவ்வாறான முடிவொன்றை மேற்கொண்டோம்.

வன்னியில் பிறந்த ரிஷாட் அம்பாறை மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதில் முன்னின்று உழைப்பது எமக்கு பெருமிதத்தையும் மன நெகிழ்ச்சியையும் உருவாக்கியிருக்கின்றது.

மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவரும் அம்பாறை மாவட்ட மக்கள் காங்கிரஸின் அமைப்பாளரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான ஏ எம் ஜெமீல் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்த பிறகு இந்த பிரதேசம் வளம் பெற்று வருகின்றது.

எமது ஊரைப் பொறுத்த வரையில் அவர் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். எனவே அவருடன் இணைந்து அமைச்சர் ரிஷாட்டின் கரங்களை தொடர்ந்து பலப்படுத்துவோம். இவ்வாறு ஹிபத்துல் கரீம் கூறினார்.

இந்த நிகழ்வில் சாய்ந்தமருது பிரமுகர்களான ஏ கபீர், ஏ ஆர் எம் நௌபல், யு எல் ஏ வாஹித், எஸ் எம் சாலி, உமர் லெப்பை, யு கே ஆதாம்பாவா உட்பட பலர் பங்கேற்றனர்.