“யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விதவைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த கைப்பணித் தொழிலை ஊக்குவிக்கும் திட்டம் தொடர்ந்தும் நடைமுறை” கொழும்பில் அமைச்சர் ரிஷாட்!

வடக்கு – கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக, ஜப்பானைத் தளமாகக் கொண்ட சர்வதேச ஆராய்ச்சி நிலையம், அந்தப் பிரதேசத்தின் பாரம்பரிய நெசவு உற்பத்தி மற்றும் பெண்களுக்கான கைப்பணித் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், தற்போது நடைமுறைப்படுத்தி வரும் செயற்திட்டத்தை 2019ஆம் ஆண்டு வரை நீடித்திருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் தேசிய அருங்கலைகள் பேரவையின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்கும், நீடித்தமைக்கும் சர்வதேச ஆராய்ச்சி நிலையம் மற்றும் யுனெஸ்கோ நிறுவனத்துக்கும் தமது நன்றிகளை வெளிப்படுத்துவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தேசிய அருங்கலைகள் பேரவையின் ஏற்பாட்டில் “ஷில்ப அபிமாணி – 2018” ஜனாதிபதி விருது, கைப்பணிக் கைத்தொழில் போட்டி, கண்காட்சி மற்றும் சர்வதேச கைவினை விழா, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை (12) இடம்பெற்ற போது, பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,

கைவினைப் பயிற்சிகளை நாங்கள் விரிவாக்கியுள்ளோம். தேசிய அருங்கலைகள் பேரவையின் கீழ் 112 கைவினைப் பயிற்சி நிலையங்களை அமைத்துள்ளோம். இந்த பயிற்சி நிலையங்களில் பலதரப்பட்ட பாடநெறிகளை புகுத்தியுள்ளோம். நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையங்களின் மூலம் நிகழ்கால, எதிர்காலத்தில் கைவினைஞர்களை (Craftsman) உருவாக்க எண்ணியுள்ளோம்.

தேசிய அருங்கலைகள் பேரவை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபையுடன் இணைந்து குறிப்பாக, ஏற்றுமதி செயல்முறை உள்ளடங்கிய வகையில், கிட்டத்தட்ட நூறு கைவினைஞர்கள் பங்கேற்கும் விஷேட வேலைப்பட்டறை ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது. அத்துடன், மத்திய சுற்றாடல் அமைப்புடன் இணைந்து, கழிவு முகாமைத்துவம் தொடர்பான பயிற்சியை எமது கைவினைஞர்களுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான உதவிகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் மூலம், எமது கைவினைஞர்களுக்கு தொழில் சந்தையில் அறிய சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் ஹேஷாணி போகொல்லாகம தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரன, இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்தூர், மலேசிய உயர்ஸ்தானிகர் ட்ரான் யாங் தாய் ஆகியோர் உட்பட இராஜதந்திரிகள் பலர் பங்கேற்றிருந்தனர்.

-ஊடகப்பிரிவு-