விவசாய அமைச்சின் மூலம் விரைவில் இரண்டாயிரம் ஏக்கருக்கு கற்றாளை செய்கை செய்யப்பட உள்ளதாக -இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய அமைச்சின் மூலம் விரைவில் இரண்டாயிரம் ஏக்கருக்கு கற்றாளை செய்கை செய்யப்பட உள்ளதாக விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி கேணிநகர் பகுதியில் தையல் பயிற்சி நெறியை நிறைவு செய்த யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு கேணிநகர் கலாசார மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உங்களிடம் காணிகள் இருக்கும் பட்சத்தில் கற்றாளை செய்கையை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் பாரிய இலாபங்களை மேற்கொள்ள முடியும். நெல் விளைச்சலில் கிடைக்கும் வருமானத்தையும் விட கற்றாளை செய்கை மூலம் பாரிய இலாபம் கிடைக்கின்றது.

கற்றாளை செய்கையானது இலங்கையில் ஒரு புதிய தொழிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்வதற்கு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். இந்த வேலைத் திட்டத்தில் நீங்களும் பங்குகொண்டு செயற்படுவீர்களாக இருந்தால் நீங்கள் யாரிடமும் கையேந்த வேண்டிய நிலைமை இருக்காது. நீங்கள் யாரிடமும் அரிசி பைக்கும் மற்றும் ஆயிரம் ரூபாவுக்கும் கையேந்த வேண்டிய நிலை கிடையாது. எமது மரியாதை, அந்தஸ்து, கௌரவம் என்பவற்றை விற்க வேண்டிய வாக்காளராக நீங்கள் இருக்க வேண்டியது கிடையாது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நகர பகுதியினரை தவிர்த்து மற்றைய பிரதேசங்களில் செய்கை செய்யக் கூடியவர்கள், அரை ஏக்கர் முதல் பத்து ஏக்கர் காணி உள்ளவர்கள் கற்றாளை செய்கை செய்ய முடிந்தால் பாரிய பணத்தினை பெற முடியும். எனவே நீங்கள் எல்லோரும் எதிர்காலத்தில் ஒற்றுமைப்பட்டு ஒரு தலைமைத்துவத்தின் கீழ் கட்டுப்பட்டு நீங்கள் இருப்பீர்களாக இருந்தால் இன்னும் உங்களுடைய வேலைத் திட்டங்களை சிறப்பாக செய்து தருவேன் என்றார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கேணிநகர் வட்டாரக் குழு தலைவர் எஸ்.ஹைதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் எம்.றிஸ்மின், அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சிவா, கிராம அபிவிருத்தி சங்க தலைவர் அப்துல் ஹமீட், கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் ஆறு இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆறு மாத கால தையல் பயிற்சி நெறியை முடிந்த பதினான்கு யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.