Breaking
Thu. Apr 25th, 2024
????????????????????????????????????

A.S.M.இர்ஷாத்

அணிவகுப்போம் அறப்போருக்கு…
ஏற்றமிகு சமுதாயமா? ஏமாறும் சமூகமா?
வெற்றிகரச் செயலா? வெற்றுப் பேச்சா?

ஏற்றமிகு வன்னி மாவட்டத்தின் கண்ணியம் மிக்க முஸ்லிம் வாக்காளர்களே…

உங்கள்மீது ஸலாம் உண்டாவதாக! உக்கிரமும், நெருக்கடிகளும் மிக்க இக்கட்டான சூழ்நிலையில் திக்குத் தெரியாது வாக்குச் சாவடி நோக்கி விரையும் உடன் பிறப்புக்களே ! கொஞ்சம் நில்லுங்கள்!

பாதையைவிட்டு விலகிய கால்கள் ஊர்போய்ச் சேராது. பட்டுப்போகும் மரத்திலிருந்து நிழலோ பழமோ கிடைக்காது. உரிமை காக்கும் துணிவை அரணாக கொண்டு முஸ்லிம் சமூதாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த உதயமான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி யானைச் சின்னத்தில் தேர்தல் களம் இறங்கியுள்ள இளம் தளபதிகளான அமைச்சர் றிஷாத் பதியுதீனை ஆதரித்து நிற்கும்படி உரிமையோடு அழைக்கின்றோம்.

அகதிகளாக்கப்பட்ட மக்கள் அவலமடையக்கூடாது. அப்பாவி மக்கள் நசுக்கப்படக்கூடாது. உண்மைகள் உறங்குவதையும் உரிமைகள் மறுக்கப்படுவதையும் பார்த்திருக்க முடியாது. அல்லாஹ்வின் ஆலயங்கள் தாக்கப்பட்டபோது, ஹலால் கோட்பாட்டுக்கு வேட்டு வைக்கப்பட்டபோது, முஸ்லிம் மாதர்களின் மானங்காக்கும் பர்தாவுக்கு பங்கம் ஏற்பட்டபோது, முஸ்லிம் மாதர்களின் மானங்காக்கும் பர்தாவுக்கு பங்கம் ஏற்பட்டபோது வியாபாரத்தலங்கள் தாக்கப்பட்டபோது, முஸ்லிம் அரசியல்வாதிகள் பாசாங்கு செய்து பதுங்கி இருந்த வேளையில், துணிந்து வீரநடைபோட்டு முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மட்டுமே என்பதை நாடே அறியும். முஸ்லிம்களுக்கெதிராக நடந்த அடாவடித்தனங்களை நன்கு அறிந்திருந்தபோதும், அரசியல் லாபம் கருதி ‘அப்படியேதும் நடைபெறவில்லை’ எனக் கூறிய சில அரசியல்வாதிகளின் பாசாங்கினைக் கூட நீங்கள் அறிவீர்கள்.

1990 ஒக்டோபரில் தமிழ் புலிகளினால் இரவோடிரவாக பலவந்தமாக, உடுத்த துணிகளோடும், கையிலேந்திய பைகளோடும், பச்சிளங் குழந்தைகளோடும்-கண்ணீரும் கம்பலையுமாக திரும்பிப்பார்ப்பதற்கு கூட அவகாசம் இல்லாமல் ஒரு சில ரூபாய்களோடு-வானமே மழையாக கண்ணீர்விட்ட நிலையில் அல்லோல கல்லோலப்பட்டு தன்னுயிரையும் தான்பெற்ற குழந்தைகளின் உயிரையும் கையில் பிடித்தவண்ணம் திக்குத்தெரியாது இருண்ட காட்டிலும் மேட்டிலும் கால்நடையாக நடந்த-இல்லை ஓடிய காட்சிகள் எந்த அரக்கனையும் கண்கலங்கச் செய்திருக்கும். 80,000க்கும் அதிகமான இந்த அப்பாவி அகதி முஸ்லிம்கள் அண்டை மாவட்டங்களில் தஞ்சமடைந்தபோதும் -இவர்களில் 90 வீதத்திற்கும் மேற்பட்டோர் புத்தளம் மாவட்டத்திலேயே தஞ்சமடைந்தனர்.

அகதி வாழ்வில் அல்லல்பட்ட இந்த வடபுல மக்களுக்கு நிலமொதுக்கி வீடுகள் அமைத்து –பாதைகள் இட்டு, பாடசாலைகள் கட்டி, பள்ளிவாசல்கள் நிறுவி- மின்சாரம் வழங்கி-வாழ்வாதாரத் தொழில்கள் வழங்கி-உயர் கல்விக்கான வசதிகளையும் செய்து-பல்கலைக்கழகம் புகவைத்து வளமான வாழ்வையளிக்க எப்பாடுபட்டார் என்பதை முன் நின்று பார்த்த நீங்களே அறிவீர்கள.; இதே சேவைகளை எமது சகோதர இனமாகிய தமிழ் மக்களுக்கும் தாராளமாகச் செய்தார் என்பதை நன்றியுடைய நெஞ்சங்கள் மறக்கமாட்டாது எனவும் நம்புகிறோம். ஏனெனில் உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது உலக வழமையாகும்.

மீளா துயரத்தில் இருந்த மக்களை மீள்குடியேற்றம் செய்யும்போது எதிர்த்து வந்த பேரினவாத புயல்களை எதிர்கொண்டவனாக, தனியானாலும் சரி தலைபோனாலும் சரி-குள்ளநரிக் கூட்டங்கள் குறுக்கீடு செய்தபோதிலும் கூட சத்தியமே இலட்சியமாக கொண்டு முன்வைத்த காலைப் பின்வாங்காமல் வன்னி மக்களுக்கு வெற்றிகரமாகச் செய்த சேவைகளை ஊரே அறியும்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் எங்களது எதிர்காலத்தின் தலைவிதியை தீர்மானிகும் ஒரு திருப்புமுனையாக அமையப்போகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்-ஏனெனில் ‘மக்கள் தங்களுடைய தலைவிதியை மாற்றிக் கொள்ளாதவரையில் நாங்கள் மாற்றப்போவதில்லை’என்ற இறைமறையின் போதனையை இங்கு ஞாபகப்;படுத்த விரும்புகின்றோம். போலிகளில் இருந்து அசலைக் கண்டறிய முடியுமென்றால்-குயில்களுக்கும் அண்டன் காக்கைகளுக்கும் பேதத்தை அறிய முடியுமானால் -மயிலோடு வான்கோழி போட்டிபோடமுடியாது என்பதை நீங்கள் அறிவீர்களேயானால் தொடர்ந்தும் நீங்கள் முன்னேற்ற பாதையில் நடைபோட, தாணைத் தலைவனாக யானைச் சின்னத்தில் இலக்கம் ஒன்றில்(1) போட்டியிடும் எங்கள் உடன்பிறவா சகோதரன் றிஷாட் பதியுதீனை ஆதரிக்குமாறு அன்பாகவும் பண்பாகவும் வேண்டி நிற்கின்றோம்.

இப்படிக்கு

வடக்கு முஸ்லிம்களின் பிரஜைகள் குழு

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *