Breaking
Thu. Apr 18th, 2024

– ரஸீன் ரஸ்மின் –

அது எமது கிராமம் இல்லையென்றால் எங்கே எமது கிராமம்?

தற்போது எல்லோரும் தீரும்பிப் பார்க்கின்ற ஒரு பேசு பொருளாக மாறியிருக்கும் மன்னார் விலிபத்து விவகாரத்தினால் அதன் உண்மைத் தன்மையை அறிந்துகொள்வதற்காக தென்னிலங்கையிலிருந்து அதிகாரிகள், அரசியல்வாதிகள், பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலர் நாளாந்தம் அந்த பகுதிக்கு சென்று வருவதாக அங்கிருக்கும் எனது நண்பர் ஒருவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு நாளுக்கு நாள் மன்னார் முசலிப்பிரதேசத்திற்கு வருகை தருவோர் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடுவது மாத்திரமின்றி, வில்பத்து வனப்பகுதியையும் சென்று பார்வையிட்டு வருவதாகவும் நண்பர் குறிப்பிட்டார்.
வழமை போல வில்பத்து விவகாரம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை மன்னார் முசலிப்பிரதேசத்திலிருக்கும் நண்பருடன் தொலைபேசியில் கலந்துரையாடுவதற்காக தொடர்புகொண்ட போது ‘இப்போது எதுவும் பேமுடியாது. முசலிப் பிரதேசமெங்கும் காவியுடையணிந்ந பௌத்த மதகுருமார்களின் கூட்டங்கள் இரண்டு , மூன்று பஸ்களில் வந்திரங்கியுள்ளார்கள். பிறகு பேசுகிறேன். முகநூலை பார்க்குமாறும் கூறி தொலைபேசியை நிறுத்தி வைத்துவிட்டார்.

பின்னர் ஒருசில நிமிடங்களில் நண்பரின் முகநூல் பக்கத்திற்கு சென்றேன். ஆப்போது மன்னார் முசலிப்பிரதேசத்திற்கு கொழும்பிலிருந்து வருகை தந்த பௌத்த மதகுருமார்களின் பட்டாலத்தை காண முடிந்தது.

இப்போது எனக்கு கடந்த வருடம் ஞாபகத்திற்கு வருகிறது. மஹிந்த அரசாங்கத்தில் வில்பத்து விவகாரம் தலைதூக்கியாடிய போது பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலமையிலான பௌத்த மத குழுவினர் பூரண பொலீஸ் பாதுகாப்புடன் முசலிப்பிரதேசத்திற்கு வருகை தந்தனர்.
அதே பாணியில்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசில் சிங்கள ராவணா பலய உள்ளிட்ட இனவாத அமைப்புக்களைச் சேர்ந்த பௌத்த மத குருமார்கள் கடந்த வியாழக்கிழமை முசலி பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

இவ்வாறு முசலிப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த பிக்குகள் அந்தப்பிரதேசத்தில் அரச மரக்கன்றுகளை நாட்டிவைத்ததுடன், வில்பத்து வனப்பகுதியை அழித்து மீள்குடியேற்றம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என சத்தியக்கிரகப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு பிக்குகள் குழுவினர் அந்தப்பிரதேசத்தில் வந்திரங்கியதும் குறித்த கிராம மக்கள் பெரும் அச்சத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து போகும் வரை என்ன நடக்கும் ஏது நடக்கும் என்ற பெரும் அச்சத்தில் மக்கள் காணப்பட்டதுடன், முசலிப்பிரதேச செயலகம் மற்றும் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறு நாளுக்குநாள் முசலிப்பிரதேசத்திற்கு விஜயம் செய்பவர்களினால் குறித்த பிரதேச மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக அங்கிருக்கும் நண்பர் குறிப்பிட்டார்.

குடந்த முப்பது வருடங்களாக யுத்தத்தினால் இடம்பெயர்ந்து புத்தளம், அநுராதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழ்ந்து சமாதனம் ஏற்பட்டுள்ளதும் மீண்டும் தமது சொந்த மண்ணில் கௌரவமாக குடியேறலாம் என்ற ஆசையுடன் வருகை தந்த இந்த கிராம மக்கள் தற்போது வில்பத்து விவகாரத்தினால் நிம்மதியிழந்து, உளரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இப்படியிருக்கையில் நாளுக்கு நாள் தென்னிலங்கையில் இருந்து வருகை தருபவர்களும், ஊடகவியலாளர்களும் சென்று அந்த மக்களுடன் கலந்துரையாடி பழைய நினைவுகளை மீண்டும் ஞாபகப்படுத்தி அந்த மக்களை மீண்டும் மீண்டும் சிரமங்களுக்கு உள்ளாக்குவதாகவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
எனினும் தமது தாயகப் பூமி எப்படியாவது கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் முசலிப்பிரதேச மக்கள் அந்த பிரதேசங்களுக்கு வந்து போகும் சகலரிடமும் தமது உண்மை நிலைமைகளை விளக்கிக் கூறிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வில்பத்து விவகாரம் தொடர்பில் அரச உள்ளிட்ட உயர்மட்டங்களில் நல்ல தெளிவுகள் காணப்படுகின்ற போதிலும் ஒருசில ஊடகங்கள் தவறான செய்திகளை ஒளி, ஒலி பரப்புவதன் மூலம் விவகாரத்தை வில்லங்கமாக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கு நல்ல உதாரணம். வில்பத்து வனப்பகுதியை அழித்து அங்கு முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருவதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை ஊடகவியலாளர்களுக்கு நேரில் தெளிவுபடுத்துகின்ற வகையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை அமைச்சர் ரிசாத் பதியுதீனின் ஏற்பாட்டில் தென்பகுதி ஊடகவியலாளர்கள் குழுவொன்று வில்பத்து பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதன்போது அமைச்சரையும், முசலி பிரதேச மக்களின் மீள்குடியேற்றத்தையும் பூதாகரமாக்கி செய்திகளை வெளியிடுகின்ற அந்த இனவாத ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் அங்கு சென்றிருந்தனர்.
ஆங்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு நிலைமைகளை நேரில் காட்டி விளக்கமளித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன், விஷேட ஊடகவியலாளர் மாநாடொன்றையும் நடத்தியிருந்ததார்.
ஆப்போது மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார். விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் முப்பது வீதமான குடும்பங்களே தமது சொந்த மண்ணில் மீள்குடியேறியுள்ளதாகவும், இன்னும் எழுபது வீதமானவர்கள் புத்தளம், அநுராதபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்துகொண்டு தமது தயாகம் திரும்புவதற்கு காத்துக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருகிறார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் தமிழ் ஊடகமொன்று (தனியார்) இப்படி செய்தியை வெளியிடுகின்றது. அதுவும் பிரதான செய்தியாகும். ‘வில்பத்து பிரதேசத்தில் முப்பது வீதமான முஸ்லிம் குடும்பங்களே மீள்குடியேறியுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியுதின் ஒப்புக்கொண்டள்ளார்’ என்பதாகும்.
எனவே, ஊடக மாநாட்டில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் எப்படியான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார் தனியார் ஊடகம் அந்த செய்தியை எப்படி வெளியிட்டிருக்கிறது என்பதை ஒப்பிட்டு பார்ப்பதற்கு அவ்வளவு கஷ்டமாக இருக்காது என நம்பகிறேன்.
இது மாத்திரமின்றி, அன்று தொடக்கம் இன்றுவரை இனவாதங்களை அள்ளி பரப்புகின்ற ஒரு சில ஊடகங்கள் தமது ஊடக தர்மத்தை அப்படியே அருகில் வைத்துவிட்டு ஒருசில நோக்கங்களுக்காக சமூகத்தை அடமானம் வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசில் ஊடக அடக்கு முறைக்கு அப்பால் நல்லாட்சி அரசாங்கத்தில் சகல ஊடகங்களுக்கும் ஊடகச் சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனினும் வழங்கப்பட்ட ஊடகச் சுதந்திரத்திற்காக தாம் நினைத்தவாறு செயற்படுவது, இதனால் ஒரு சமூகம் குறிவைத்து தாக்கப்படுவதை பொறுப்புள்ள ஊடகங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதையே மக்கள் குறிப்பிட்டு சொல்கின்றனர்.

அது எமது கிராமம் இல்லையென்றால் எங்கே எமது கிராமம்?
மன்னார் மரிச்சிக்கட்டி கிராம மக்களின் குடியேற்றங்களை சட்டவிரோத குடியேற்றங்கள் என பொதுபலசேனா, சிங்கள ராவய உள்ளிட்ட இனவாத அமைப்புக்கள் குறிப்பிடுகின்றன.
குறித்த கிராமத்தில் யுத்தத்திற்கு முன்னர் மக்கள் குடியேறி வாழ்ந்தமைக்குரிய ஆதாரங்கள் நிறையவே காணப்படுகின்ற போதிலும் இனவாதங்களை சொல்லி மக்களை உசுப்பேத்தி பார்க்கின்ற இனவாத அமைப்புக்கள் சொல்வதைப் போல முசலிப்பிரதேச சபை;குற்பட்ட மரிச்சிக்கட்டி கிராமம் இல்லையென்றால் நாம் வாழ்ந்த கிராமத்தின் புவியியல் ரீதியான வரைபடங்களையும், கிராமத்தின் எல்லைகளையும் காட்டுமாறு அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு விரிவான மகஜரொன்றையும் அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மௌனம் காக்கும் முஸ்லிம் அரசில்வாதிகளே!
ஓன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழிக்;கிணங்க முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் ஒன்றுபட்டு செயற்பட்டிருந்தால் வில்பத்து விவகாரம் இவ்வளவு பூதாகரமாகியிருக்காது.
இன்று ஒரு சமூகத்தை மாத்திரம் குறிவைத்து பேரினவாதிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். தங்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அரசுடன் இருந்துகொண்டிருக்கும் போதும் முப்பது வருட போரினால் இடம்பெயர்க்கப்பட்ட வன்னி முஸ்லிம் மக்கள் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என்ற குற்ற உணர்வு அமைச்சருக்கும், தாம் இன்னமும் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் முஸ்லிம் மக்களுக்கும் அழியா வடுக்களாக எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.
பாராளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், பிரதேச சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என ஜனநாயக ரீதியில் தமது பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் பொருட்டு வன்னி முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களுக்கு சென்று வாக்கு கேட்டு வருபவர்கள் அந்த மக்கள் சொந்த மண்ணில் மீள்குடியேற வேண்டும் என்பதில் எந்த அளவுக்கு அக்கறையுடன் செயற்பட்டுள்ளார்கள் என்பது கேள்விக்குறியே.
தேர்தல் காலங்களில் வார்த்தைகளை மாத்திரம் நம்பி வாக்களித்த வன்னி முஸ்லிம்களின் வெறும் வாக்குகள் மாத்திரம்தானா அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தேவை என எண்ணுகின்ற அளவுக்கு செயற்பாடுகள் காணப்படுகின்றன.
அழுது புரளும் சின்ன பிள்ளைக்கு அதுவாங்கிக் கொடுக்கிறேன், இது வாங்கித் தருகிறேன் என்று சொல்லி மனதை ஆறுதல் படுத்துவதைப் போல விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை இன்று மீள்குடியேற்றம் செய்கிறோம், நாளை மீள்குடியேற்றம் செய்கிறோம் என்று நாட்களை கடத்தியதுதான் மிச்சமே.
தவிர, கடந்த அரசாங்கத்தினால் விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம் மக்களை தமது சொந்த மண்ணல் மீள்குடியேற்ற முடியாமல் போனது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயங்களில் ஒருவிதமான போக்குடன் செயற்பட்டார்.
ஆனாலும் புதிய அரசு நல்லாட்சியை நோக்கி நகருகின்ற அரசு தமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் வடபுல முஸ்லிம்களின் எதிர்பார்ப்புகளுக்கு நல்ல பதிலைக்கொடுக்கும் என்ற நம்பிக்கையில்தான் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
ஆனால், தற்போது நடக்கின்ற விடயங்களைப் பார்க்கின்ற போது தமது மீள்குடியேற்றம் கேள்விக்குறியாகிப் போய்விடுமோ என்ற அளவுக்கு அச்சத்துடன் அந்த மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
எனவே, வடபுல முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம், மன்னார் முசலிப்பிரதேச மக்களின் காணி உரிமை உள்ளிட்ட ஏனைய முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினை என நீண்டுகொண்டு செல்லும் அந்த மக்களின் நலன்கள் தொடர்பில் அந்த மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு மாத்திரம் பொறுப்பன்றி, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இன்று வடபுல முஸ்லிம்களின் உரிமை உள்ளிட்ட பிரச்சினைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மூலம் முக்கியத்துவம் பெறுகின்ற போது, அவர்களின் குடியேற்றங்கள் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் கட்சி பேதங்களுக்கு அப்பால் நின்று முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்படவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்புகளாகும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *