Breaking
Sat. Apr 20th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, மன்னார் சிலாவத்துறை வைத்தியசாலை, புத்தளம் மாவட்ட வைத்தியசாலை ஆகியவற்றுக்கு விஜயம் செய்து அங்குள்ள குறைபாடுகளைக் கேட்டறிந்து பல பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வையும் பெற்றுக்கொடுத்தார். வைத்தியசாலையின் பாரிய தேவைப்பாடுகளுக்கு ஒரு மாதகாலத்திற்குள் திட்ட வரைபு ஒன்றையும் கோரினார்.

கடந்த மாதம் கொழும்பில் ஜூன் 29ம் திகதி சுகாதார அமைச்சில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான உயர்மட்டச் சந்திப்பின் பின்னர், அமைச்சர் ரிஷாட் விடுத்த வேண்டுகோளை ஏற்றே டாக்டர் ராஜித, இவ்விரண்டு வைத்தியசாலைகளுக்கும் விஜயங்களை மேற்கொண்டிருந்தார்.

கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் போது, சிலாவத்துறை, கற்பிட்டி, புத்தளம், கிண்ணியா, மற்றும் சம்மாந்துறை வைத்தியசாலைகளின் பாரிய குறைபாடுகளை அமைச்சர் ரிஷாட் எடுத்துரைத்த போது, புத்தளம், கற்பிட்டி, சிலாவத்துறை மற்றும் மன்னார் மாவட்டத்தின் பல வைத்தியசாலைகளின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கென ஒரு பகுதி நிதியையும் ஒதுக்கீடு செய்வதாக அமைச்சர் ராஜித, உறுதியளித்து, அந்த நிதியும் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அநுராதபுரத்திலிருந்து மதவாச்சி ஊடாக முருங்கன் வழியாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து,  சிலாவத்துறை  சென்ற அமைச்சர் ராஜித, மன்னார் சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்டிருந்த கட்டிடம் ஒன்றை திறந்துவைத்த பின்னர் அங்கு இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் அந்த வைத்தியசாலையின் குறைநிறைகளைக் கேட்டறிந்தார். சிலாவத்துறை வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தித்தருமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு பணித்தார்.

சிலாவத்துறை வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்திக்குமாறு விடுத்த வேண்டுகோளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ராஜித அதற்கான உடனடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டதுடன், பணிகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளை பணித்தார்.

அமைச்சர் ராஜித சிலாவத்துறை வைத்தியசாலையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கூறியதாவது,

யுத்தக் காலத்தில் விடுதலைப்புலிகள் இங்கு வாழ்ந்த முஸ்லிம்களையும், சிங்களவர்களையும் 24 மணிநேரத்தில் விரட்டி அடித்தனர்.  புத்தளம் அகதி முகாம்களில் நீங்கள் அனைவரும் அநாதைகளாக முடுங்கிக் கிடந்தீர்கள்.

இப்பிரதேசத்தில் வாழ்ந்த கோடீஷ்வர  வியாபாரிகளைக் கூட ஒரே நாளில் 5சதம் கூட இல்லாத அகதிகளாக வெளியேற்றினர். நீங்கள் உங்கள் சொந்த மண்ணில் மீண்டும் குடியேற ஆவலாக இருக்கின்றீர்கள். எனவே, அனைத்து வசதிகளையும் உங்களுக்குச் செய்து கொடுப்பது தான் எமது கடமை.

ஊடகங்ளில் அமைச்சர் ரிஷாட் பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார். 30வருட காலமாக அகதி முகாம்களில் முடங்கிக் கிடந்த அப்பாவி மக்களை மீள்குடியேற்றும் போது இனவாதிகளும், சிங்களப் பேரினவாதிகளும் முன்னெடுத்த நடவடிக்கையினால் அமைச்சர் பல குற்றச்சாட்டுக்களுக்கும் கஷ்டங்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகியது.

இங்கு நான் தெளிவாகச் சொல்வது என்னவெனில் உங்களின் அமைச்சரினால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தமது பிரஜைகளுக்காகவே. ஆதலால் அவரைப் பாதுகாக்க வேண்டும்.

நான் முன்னர் காணி அமைச்சராக இருந்துள்ளேன். ஆகையினால் எனக்கு காணிச் சட்டம் பற்றி நன்றாகத் தெரியும். வனாந்தரம் (காடுகள்) பற்றியும், அதாவது காட்டு நிலங்கள் பற்றியும் ஏனைய நிலங்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு வேறுபடுத்துவது? என்பது தொடர்பிலும் அவற்றிலுள்ள குணாதிசயங்கள் பற்றியும் நன்றாகத் தெரியும் உங்கள் அமைச்சரின் உரையை, விவாதங்களை நான் ரூபவாஹினி தொலைக்காட்சி ஊடாக கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது அமைச்சர் இந்தப் பிரதேசத்தில் அமைந்திருந்த வைத்தியசாலை, பாடசாலை மற்றும் முஸ்லிம்களின் காணி உறுதிகள் பற்றியும் சுட்டிக்காட்டியிருந்தார். நான் கேட்டுக்கொண்டிருக்கும் போது அவருக்கு சிங்கள, மொழியில் விளக்கம் அளிப்பதற்கு சிறிது மொழிப் பிரச்சினையாக இருந்ததை உணர்ந்தேன். எனினும் அவ்விடத்தில் அவரது கருத்துக்களும், விளக்கங்களும் உண்மையானது என நான் விளங்கிக்கொண்டேன்.

மற்றைய  விடயம், ஒரு காட்டுப்பிரதேசம், வன ஜீவராசிகள் வாழும் பிரதேசம் என்பது எந்நாளும் ஒரே மாதிரியாக இருந்ததல்ல. காலத்துக்குக்காலம் அந்த எல்லைகள் மாற்றப்பட்டுள்ளது. நாட்டின் தேவைக்கேற்றவாறு மாற்றப்பட்டுள்ளது. நான் காணி அமைச்சராக இருந்த போது சிங்கராஜ காட்டை சுமார் 5மைல் அளவில் விஸ்தரித்துள்ளேன். அவை அனைத்தும் காட்டுப் பிரதேசம் என வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டன. அதே போன்று நுவரெலியா மாவட்டத்தில் நான் காணி நடமாடும் சேவையை மேற்கொள்ளும் போது காட்டு எல்லையை 500மீற்றருக்கு சுருக்கி  அங்கிருந்த மக்களுக்கு காணி வழங்க ஏற்பாடு செய்தேன். ஆகையினால் காட்டுப் பிரதேசமானாலும் காட்டிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு மக்களை குடியேற்ற முடியும்.

 

உங்கள் விடயத்தில் அன்று உருவாக்கப்பட்ட (LLRC) நல்லிணக்க ஆணைக்குழுவின்   கட்டளையின் பிரகாரம் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக  மேற்கொள்ளபப்ட்டுள்ளது. ஆனால் முஸ்லிம் அமைச்சர் முன் நின்று செய்தமையினாலும், அதில் பலன் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம் மக்கள் என்ற படியாலும் இனவாதத்துடன் இந்தக் காணி வழங்கல் விவகாரம் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது.

 

ரிஷாட் பதியுதீன் அமைச்சர், உங்களுடன் அகதி முகாமில் இருந்த ஒருவர். ஆனால் இன்று மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினராகி உள்ளார். அவர் மன்னாருக்கு சென்று வருவது போல் உங்களையும் மன்னாருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருகிறார். உங்கள் அனைவரையும் இங்கு கொண்டு வராவிட்டால் தான் பிழையென நான் கருதுகிறேன்.  ஆகையினால் இவ்வாறான இனவாதங்கள் என்னதான் சொன்னாலும் நாங்கள் மௌனமாக இருந்து இந்நாட்டை முன்னேற்றுவதற்கு முன் வரவேண்டும். நீங்கள் இந்நாட்டின் சம உரிமையையும் சம பாதுகாப்பையும் போராடி வென்றெடுக்கும்வரை இந்த போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

 

ஆகையினால் இந்த வைத்தியசாலையை முன்னேற்றுவதற்கு அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து துரிதமாகச் செயற்படுங்கள். இதனை அமுல்படுத்தும் போது ஏற்படும் குறைபாடுகள், தாமதங்கள் ஏற்படுமாயின் அதற்கான காரணங்களை எமக்கு தெரிவியுங்கள். நாம் அதற்கான ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளோம்.  ஆதார வைத்தியசாலைக் கோரிக்கையில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும் ஏனைய அனைத்து கோரிக்கைகளையும் ஏற்று அதற்கான நடவடிக்கைகளை  உடனடியாக ஆரம்பிப்போம்.இவ்வாண்டு முடிவடைவதற்குள் இதனை நிறைவு செய்வதற்காக நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உங்களின் ஒத்துழைப்பையும் கோருகின்றோம்.

நீண்ட வார விடுமுறையாகயிருந்த போதும் சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது இங்கு வந்து எமக்கு ஒத்துழைப்பை வழங்கியமைக்கு முழுமையான நன்றியை தெரிவிக்கின்றேன் இவ்வாறு அமைச்சர் ராஜித தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு உரையாற்றிய போது,

அமைச்சர் ராஜிதவின் வருகை எனக்கு பெரும் மகிழ்ச்சி தருகின்றது. வில்பத்து பிரச்சினையில் எனக்கும் நான் சார்ந்த சமூகத்திற்கும் ஆதரவாக எந்தவிதமான பயமும் இன்றி துணிந்து குரல் கொடுத்தவர். வில்பத்து பிரதேசத்தையும் இனவாதிகளால் நீதிமனற கட்டளையைப் பெற்று புனரமைக்கப்படாமல் இருக்கும் இலவங்குளம் பாதையிலும் என்றோ ஒரு நாள் இவரை அழைத்துச் செல்ல வேண்டுமென நான் நினைத்தேன். இன்று அது கைகூடியுள்ளது என்று அமைச்சர் ரிஷாட் தெரிவித்த போது, ‘எனது ஆசையும் இன்று நிறைவேறுவது மகிழ்ச்சி தருகின்றது’ என்று அமைச்சர் ராஜித தெரிவித்தார்.

சிலாவத்துறை வைத்தியசாலை நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான், மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ்பாரூக் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

சிலாவத்துறை நிகழ்வு முடிவடைந்த பின்னர், சிலாவத்துறையிலிருந்து மறிச்சிக்கட்டிக்கு சென்ற அமைச்சர் குழாம், அங்குள்ள ‘சிங்கள கம்மான’ கிராமத்திற்கு சென்று மக்களைச் சந்தித்து குறைநிறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் பாலைக்குளிக்கு சென்று அங்கு இடம்பெற்ற ரிஷாட் பதியுதீன் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டியில் கலந்துகொண்டிருந்த வீரர்களை ஊக்குவித்தார்.

அதன் பின்னர் இலவங்குளம் பாதையின் ஊடாக புத்தளம் வந்த அமைச்சர்கள் குழாம், புத்தளம் தள வைத்தியசாலையின் வார்ட்டுக்களை பார்வையிட்டப் பின்னர், அங்கு இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் பங்கேற்றனர். அந்த வைத்தியசாலையின் குறைபாடுகளை வைத்திய அத்தியட்சகர், வைத்திய நிபுணர்கள், தாதிகள், சுகாதாரத்துறை ஊழியர்கள், வைத்தியசாலை நலன்புரி சங்க உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நவவி, மக்கள் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளர் அலிசப்றி, கற்பிட்டி அமைப்பாளர் ஆப்தீன்யஹ்யா, புத்தளம் பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் முஹ்சி ஆகியோரும் புத்தளம் தள வைத்தியசாலையின் குறைபாடுகளை விபரித்தனர்.

  • சுஐப் எம். காசிம்

 

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *