Breaking
Thu. Apr 25th, 2024

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பள்ளிவாயல்கள், பாடசாலைகள், அரபு கலாசாலைகளில் அரபு மொழி பலகை அகற்ற வேண்டுமென்பது பொலிஸாருடைய அடாவடி நடவடிக்கை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கல்குடா பிரதேசத்தின் காணப்படும் அரபு வாசகங்களை அகற்றுமாறு பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை, ஓட்டமாவடி, நாவலடி, ஏறாவூர், காத்தான்குடி போன்ற பிரதேசத்தில் காணப்படும் பள்ளிவாயல்கள், மதரசாக்களில் உள்ள அரபு மொழியிலான பெயர் பலகைகளை அகற்றுமாறு பிரதேச பொலிஸார் மக்களுக்கு வற்புறுத்தல் செய்யப்படுவதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பிரகாரம் இவ்விடயமாக பதில் பொலிஸ் மா அதிபர் சீ.வி.விக்கரம ரட்னவோடு இன்று வெள்ளிக்கிழமை உரையாடினேன். அதனடிப்படையில் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தவிர்க்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். இதுவிடயமாக தனக்கு தெரியப்படுத்தவில்லை எனவும், இது தொடர்பாக உடனடியாக எனது கவனத்துக் கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு குறித்த அரபு மொழிகளிலான பெயர் பலகைகளை அகற்றுவது பொலிஸாருடைய கடமையல்ல. இது உள்ளுராட்சி மன்றங்களுடைய கடமை. இதில் பொலிஸார் தலையிடுவது பிழையான விடயம் என்பதை பதில் பொலிஸ் மா அதிபரோடு பேசிய போது எனக்கு தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸார் அல்லது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளவர்கள் இவ்வாறு செய்வார்கள் என்றால் இதற்கு எதிராக எனக்கு அறியத்தருமாறும், அல்லது இதற்கெதிராக முறைப்பாடு செய்யுமாறும் அன்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.

சம்பந்தப்படாத இடங்களில் இருக்கின்ற பெயர் பலகைகளை அகற்றுவதில் நாங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்;. ஆனால் பள்ளிவாயல்கள், பாடசாலைகள், அரபு கலாசாலைகளில் அகற்ற வேண்டுமென்பது பொலிஸாருடைய அடாவடி நடவடிக்கை என்பதை நான் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

எனவே யாரும் இதற்கு பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. இது உரிய அதிகாரிகள், பாராளுமன்றத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டுள்ள விடயம். இதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டுமே தவிர அவர்களோடு சண்டை போட வேண்டாம் என்றார்.

Related Post