Breaking
Wed. Apr 24th, 2024

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மஹிந்த ராஜக்ஷ்ச ஆட்சிக் காலத்திலேதான் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும் இருக்கிறார்கள். சில ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டும் இருக்கின்றன. ஆனால் நல்லாட்சிக் காலத்தில் எந்தவொரு ஊடவியலாளரும் கொல்லப்படவோ, கடத்தப்படவோ, தாக்கப்படவோ இல்லை.இதற்கு காரணம் நல்லாட்சி வழங்கிய ஊடகச் சுதந்திரம்தான் என துறைமுகங்கள் கப்பல்துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

கிண்ணியா பிரதேசத்தில்  நேற்றுமுன்தினம் (15)  மக்கள் ஏற்பாடு செய்த பிரதி அமைச்சரை வரவேற்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த நாட்டிலே ஐந்து துறைமுகங்கள் இருக்கின்றன. அதில் உலகப் புகழ்பெற்ற இயற்கைத் துறைமுகம்தான் திருகோணமலையாகும். இந்த நாட்டிலே காலணித்துவ ஆட்சியாளர்கள் இலங்கை மண்ணுக்கு வந்தபோது அவர்கள் முதலாவது கண்ட இயற்கை வளம்தான் இந்தத் துறைமுகம். 1072ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர்கள் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் தென் கிழக்கு ஆசியாவின் முக்கிய கேந்திர நிலையமாக இதனை அடையாளங் கண்டார்கள். ஆனால் இவற்றினுடைய பெறுமதியை இன்னும் நாங்கள் அடையாளங் காணாமல் இருப்பது துரதிஸ்டவசமே.

இந்த நாட்டின் தேசிய வருமானத்தைக் கொடுத்த தேயிலை, றப்பர் மற்றும் வாசனைத் திரவியங்களை ஏற்றுமதி செய்தார்கள். இந்த நாட்டுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களை இந்த துறைமுகத்தினூடாகவே கொண்டு வந்தார்கள்.

இன்று நல்ல சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் ஊடாக இந்த மாவட்ட இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க முடியும்.

 பிரதமரின் 2050வேலைத் திட்டத்திலே இந்த மாவட்டதில் இருக்கின்ற 11பிரதேச பிரிவுகளும் பிரதமரின் சிங்கப்பூர் ஒப்பந்தத்தினூடாக அனைத்து துறைகளிலும் பாரிய அபிவிருத்தியை காணவுள்ளது.

இந்த திட்டத்தை பிரதமர் முன்வைத்தது அவர் வாழ்வதற்கல்ல. இந்த நாட்டில் பிறக்கப்போகின்ற அடுத்தடுத்த சந்ததிகள் வாழ்வதற்காகவே சிங்கப்பூர் ஒப்பந்தத்தை செய்திருக்கிறார் பிரதமர். இதுதான் இந்த நாட்டினுடைய பற்றும் விசுவாசமும் ஆகும்.

 நாட்டின் ஜனநாயகத்தை சீரழிக்க நினைத்த மஹிந்த ராஜக்ஷ்சவை இரண்டு வருடங்களுக்கு முன்னரே மக்கள் பதவியை விட்டும் அகற்றினார்கள். ஒக்டோபர் 26 ஆம் திகதி சூழ்ச்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்ற நினைத்த அவரை 51 நாட்களில் நீதிமன்றம் வீட்டுக்கு அனுப்பி வைத்தது  என்றார்.

Related Post