Breaking
Wed. Apr 24th, 2024

ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்துக்கு பின்னடைவு ஏற்பட்ட போதும், அதனை சரி செய்து மீண்டும்  மக்கள் பணியை தீவிரப்படுத்துவோம்  என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டையில் இன்று காலை (01) இடம்பெற்ற பொதுமக்கள் ,ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘கடந்த காலங்களில் எமது அரசியல் பயணம் வெற்றிகரமாக இடம்பெற்ற போதும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தடங்கல் ஏற்பட்டுள்ளது. சகல இனங்களையும் சமனாக மதிக்கின்ற, சமத்துவத்தை பேணுகின்ற, சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வேட்பாளராக சஜிதை இனங்கண்டோம். அவருக்கு ஆதரவுவளித்தோம். அவரின் வெற்றிக்காக நாடெங்கும் பரப்புரை செய்தோம். எனினும் நாம் அவரின் வெற்றிக்காக பாடுபட்ட போதும் இறைவனின் நாட்டம் வேறாக அமைந்தனால் அது கைகூடவில்லை. அதற்காக நாம் சோர்வடையவில்லை. சோர்வடையவும் மாட்டோம். துவண்டு போகவும் மாட்டோம். எமது அரசியல் எழுச்சி  எதிர்காலத்தில் பிரகாசமாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ‘

‘19வது  திருத்தத்தில் நிறைவேற்று ஜனாதிபதி ஒருவரின்  அதிகாரம் குறைக்கப்படுள்ளது. பாராளுமன்றத்துக்கும் பிரதமருக்கும் அதிகாரங்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த திருத்தத்தினால் ஜனாதிபதி எந்தவோர் அமைச்சையும் தாம் விரும்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நினைத்த மாத்திரத்தில் வழங்க முடியாது.  அது மாத்திரமன்றி சாதாரண பொரும்பான்மை அதாவது 113 உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளும் கட்சியே ஆட்சியமைக்கும் அக் கட்சியில் இருந்தே பிரதமரும் தெரிவு செய்யப்படுவார். இதுவே தற்போதைய அரசியல் யதார்த்தமாகும்’.

எனவே  பொதுத் தேர்தலுக்கு இன்னும் இருக்கின்ற நான்கு  மாதங்களில் நாம் திட்டமிட்டு பணியாற்ற வேண்டியுள்ளது.

வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் நாலாபக்கத்திலுள்ள சிறுபான்மை சமூகம் ஒருமித்து, ஒன்றுபட்டு வாக்களித்திருந்தது. எனினும் இனவாதமும் மதவாதமும் உருவெடுத்ததனால்  பெரும்பான்மை மக்களின் அதிகூடியோர் ஒரு பக்கம் தள்ளப்பட்டனர். இதுவே சிறுபான்மை சமூகத்தின் பின்னடைவுக்கு காரணமாயிற்று. எனினும் இந்த வாதங்களை தொடர்ந்தும் வைத்திருந்து நீண்ட காலத்துக்கு எவரும்  அரசியல் செய்ய முடியாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இவ்வாறு அவர்  தெரிவித்தார்.

புல்மோட்டை மத்திய குழு தலைவர் சல்மான் பாரிஸின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூஃப் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களான டாக்டர் ஹில்மி மொஹிடின்,   தெளபீக்  பதுர்தீன் நெளபர் இஷார்டின் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை பிர்தெளஸ் தொகுத்து வழங்கினார் 

Related Post