Breaking
Fri. Apr 26th, 2024

ஒரு நாட்டின் சுதந்திர தினம் என்பது மகிழ்சியுடன் கொண்டாடும் நாளாகவே

இருக்கின்றது. காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து எமது நாடு 1948 ஆம் ஆண்டும் சுயநிர்ணய உரிமையோடு ஒரு சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றைய ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை விடுதலை செய்யும் போராட்டத்தை சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி வெற்றிகண்டனர்.

 

சுதந்திர தினம் என்பது அன்னிய ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை பெற்றது மாத்திரமின்றி தனிமனித சுதந்திரமும் அடங்கும். மத, மொழி மற்றும் கலச்சார உரிமைகளும் அடங்கி நிற்கும்.

 

கல்வி, தொழில் வாய்ப்பு,. சுகாதாரம் மற்றும் நில உடமை அனைத்திலும் அனைத்து மக்களிற்கும் சம சந்தர்ப்பம் கிடைக்க செய்வதே சுதந்திரத்தின் உண்மையான தார்ப்பரியமாகும். சுதந்திரம் என்று வார்த்தைகளில் மாத்திரமின்றி நடைமுறை வாழ்விலும் அனுபவிக்கப்பட வேண்டும். இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக அன்னிய அதிகாரத்தை எதிர்த்து போராட்டிய முஸ்லிம்களின் பங்களிப்பு மகத்தானது.

 

போர்த்துக்கேய ஆட்சிக்கு எதிராக சீதாவாக்கை மன்னன் மாயாதுன்னை (1521-1581) போராடிய பொழுது அவ்அரசனின் படையில் பிச்சை மரைக்கார், கந்ஹேன் மரைக்கார், அலி இப்றாஹீம் போன்றோர் அரச படையில் முதன்மை அதிகாரிகளாக கடமையாற்றினர். இதில் அலி இப்றாஹீம் என்பவர் முன்னணி தளபதிகளில் ஒருவராக கடமையாற்றினார். மாயாதுன்னையின் படைக்கு மேலும் வலுவூட்டும் விதமாக முஸ்லிம்கள் இந்தியாவின், கேர்ளா மலபார் பிரதேசத்தை  ஆட்சி செய்த  களிக்கட் சமோரின் (1502-1605) என்ற அரசனின்  உதவி பெற்று சமோரின்  கடற்படை  தளபதியாக இருந்த குஞ்சளி மறைக்கார் என்பவரின் தலைமையில் படையொன்றை எடுத்து வந்தனர் என்பது சரித்திர உண்மையாகும்.

 

மாயாதுன்னை அரசனுக்கு உதவியதால் ஆத்திரம் கொண்ட போர்த்துக்கேயர் பழிவாங்கும் முகமாக ஏறக்குறைய 300 முஸ்லிம்களை மாத்தறை கடற்கரையில் வரிசையாக நிறுத்தி சுட்டுக்கொண்டனர். இத்தகைய மாபெரும் உயிர் தியாகம் ஒன்றை நாட்டுக்காக வேறொரு சமூகம் செய்திருக்குமா என்பது சந்தேகமே!

 

1656ன் பின் டச்சுக்காரர் இலங்கையின் கிழக்கு கரையை ஆக்கிரமித்த போது அப்பிரதேசத்தை பாதுகாப்பதற்கு சிறந்தவர்கள் முஸ்லிம்கள் என்பதனால் கண்டியின் 2வது செனரத்தின என்ற அரசன் கிழக்கிலங்கையில் முஸ்லிம்களை குடியேற்றினர்.

 

பிரித்தானியர் இலங்கையின் கரையோரங்களை 1796இல் கைப்பற்றிய பின் கண்டி இராஜதானியை 1818இல் தம் வசம் கொண்டுவர முன்பாக 1814இல்  கிழக்கு கடற்கரையோரமாக மடக்களப்பு ஊடாக படையெடுத்து சென்ற போது கொந்தாச்சி மடம் என்ற இடத்தில் திருகோணமலையையும், மட்டக்களப்பையும் சேர்ந்த  முஸ்லிம் போராளிகள் தடுத்து நிறுத்துவதற்காக முயன்றனர். அவர்களில் ராசியமுனையைச் சேர்ந்த மீரா ஓசன் அவுவக்கர், ஓசன் லெவ்வை உதுமாலெப்பை, பீர் முகம்மது மௌலவி, சம்மாந்துறையைச் சேர்ந்த அவுவக்கர் ஈஸா முகந்திரம், மருதமுனையைச் சேர்ந்த அஸீஸ் லெப்பை, தோப்பூரைச் சேர்ந்த சேகு கீர்த்தி மற்றும் சலம்பத்தி உடையார் ஆகிய எமது 07 நாட்டுப்பற்றாளர்களை தேசதுரோகிகளாக பிரகடனப்படுத்தினர். எனவே பிரித்தானிய படையெடுப்புக்கு எதிராக முதன் முதலாக கண்டி இராச்சியத்தை காப்பாற்ற முயன்றவர்கள்  முஸ்லிம்களே!

 

இந்த முஸ்லிம் தேசபற்றாளர்களுடன் பிரித்தானியா அரசுக்கு எதிராக கலகம் விளைவித்த கெப்பட்பொல என்ற பிரதானியோடு 12 சிங்கள  போராளிகளை தேச துரோகிகளாக 1/1/1818 வர்த்தமானி ஊடாக பிரகடனப்படுத்தி கொலை செய்யப்பட்டார்கள்.

 

1948ற்கு பின், சுதந்திரம் பெறும் முயற்சியில் ரீ.பி ஜாயா, சேர் ராசிக் பரீட், மாக்கான் மரைக்கார் ஆகியோர் சிங்கள- தமிழ் அரசியல்வாதிகளோடு தோலோடு தோல் நின்று செயற்பட்டனர். சுதந்திரத்திற்காக பகீர பிரயத்தனங்களை செய்தார்கள் என்று கூறிக்கொள்வதில் நாம் பெருமையடைகின்றோம். 

 

சுதந்திரம் பெறும் முயற்சியில் தொடர்ந்தும் பெரும்பான்மையோடு கைகோர்த்து நின்று முஸ்லிம்கள், சிங்கள அரசர்கள் காலம் தொட்டு தாம் பெற்ற மத, கலாச்சார உரிமைகளை தொடர்ந்து பேணிக்கொள்வதில் இடையூறுகள் ஏற்படக்கூடாது. என்று அவாவுறும் அதே நேரத்தில் சகல ஜனாநாயக அடிப்படை உரிமைகளையும் சகல இன மக்களும் அனுபவிக்க வேண்டும் என பிராத்திக்கின்றோம்.

 

எஸ். சுபைர்தீன்,

பொதுச் செயலாளர்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.

Related Post