Breaking
Fri. Apr 19th, 2024
தமிழில் – எம்.எம். முஹிடீன் இஸ்லாஹி
இலங்கையில் சிங்கள, முஸ்லிம் கலவரம் ஏற்பட்டு நூறு வருடங்கள் பூர்த்தியாகும் தருவாயில் உள்ளது. மீண்டும் நூறு வருடங்களுக்குப் பின்னரும் ஆரம்பத்தின் அதேநிலைக்கு வேறு ஒரு முறையில் சென்று கொண்டிருக்கின்றது. எனினும்,  கிடைக்கக்கூடிய பிரதிபலன்கள் முன்னையதைவிட மோஷமானதாக இருக்கும். கடந்த நாட்களில் ஏற்பட்ட சம்பவங்கள்,  இதற்கான நிழற் பிரதிகளேயாகும். நாட்டினுள் பரவுகின்ற இனவாதப் பின்னணி பற்றி அரசியல் தொடர்பான ஸ்ரீ ஜயவர்தனபுற பல்கலைக் கழகத்தின் தொல் பொருளியல் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர் வண. தம்பர அமில தேரர் அவர்களுடன்  சிங்கள ஞாயிறு பத்திரிகையொன்று மேற்கொண்ட  செவ்வியின் தமிழாக்கத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
 
கேள்வி –
இலங்கையில் முதலாவது சிங்கள முஸ்லிம் கலவரம் ஏற்பட்டது 1915 இல் ஆகும். அதற்கு 100 வருடங்கள் புர்த்தியாகும் வேளையில் அது போன்றதொரு நிலை மீண்டும் உருவாகி வருகின்றது. நாட்டில் இனவாதம் மேலோங்குவது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் –
1915 சம்பவத்துக்கும் தற்போது அதுபோன்றதொரு நிகழ்வு உருவாக்குவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை ஒரு சூத்திரம் போன்று பேச முடியாது. சூத்திரம் போன்றோ அல்லது காட்சிப்படுத்தல் போன்றோ இதுபோன்ற நிகழ்வுகள் தோன்றுவது,  அரசியல்ரீதியிலிலான, தேவையை கருத்தில் கொண்டே ஆகும்.  கலகக்காரர்களினால் அடிக்கடி தோற்று விக்கப்படுகின்ற ஒரு நடவடிக்கையின் மூலம் இந்த நோக்கம் நிறைவு செய்யப்படுகின்றது. அதனைஒருமுறை 1915 ஆம் ஆண்டு ஏற்படுத்தினர். தற்பொழுது  2015 ஆம் ஆண்டில் அதனை மீண்டும் ஏற்படுத்துவதற்கான அடையாளங்களை கண்டுகொள்ள முடிகின்றது.
இந்த நிலைமை குறித்து விரிவாகப் பார்க்கப்பட வேண்டும். இந்த நாட்டின் நிருவாகிகள் சகல விதத்திலும் தோல்வியடைந்துள்ளனர். பல் இன, மத ரீதியிலான பிரதேசங்களாக பிரிந்துள்ள ஒரு நாட்டில் சகல மக்களையும் சமனாக பார்க்கமுடியாது போயுள்ளனர். பொருளாதார சமத்துவம், ஜனநாயக சமத்துவம், சம சுதந்திரம் என்பவற்றை வழங்க முடியாது போயுள்ளனர்.  தேசிய ஒற்றுமையின் அழகினையும்,  மதப் புரிந்துணர்வின் யதார்த்தத்தையும்  வழங்க முடியாமல் போயுள்ளது.
இந்த வங்குரோத்து நிலைமையை மூடி மறைப்பதற்கே அவர்கள் பாரிய பிரிவினையிலிருந்து சிறு பிரிவினை வரை சமூகத்தை பிரித்து அதனூடாக சண்டையை மூட்டி வருகின்றனர். இது தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு நடவடிக்கையே ஆகும்.
அன்று வெள்ளையர்கள் நாட்டை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அரச காரியமுறைமையை நீக்கி விட்டு, அதற்குப் பதிலாக அவர்களது பொருளாதார முறைமையைக் கொண்டு வந்தனர். அத்துடன், வரி, பொருதாரம், நீதி என்பவற்றில் ஒரு முறைமையை ஏற்படுத்தி நாட்டை ஒரு   மட்டத்துக்கு கொண்டு வந்தனர். இருப்பினும், சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை இல்லாமல் செய்தனர். நாட்டை முன்னேற்றுவதற்குரிய ஏனைய எல்லாவற்றையும் முன்னெடுத்துவிட்டு,  இனச் சுமுக வாழ்வை மாத்திரம் ஏற்படுத்தவில்லை. இதனை அவர்கள் செய்ததற்கு பிரதான காரணம் பிரித்தாளும் கொள்கையாகும்.  ஏனெனில்,  இன ஐக்கியம் அவர்களது அதிகாரத்துக்கு பெரும் சவாலாக அமைந்து விடும் என அச்சம் கொண்டனர்.
1915  இல் நடைபெற்ற ரயில் பணிப் பகிஷ்கரிப்பு குறித்து கண்டறிய ஒரு ஆணைக்குழுவை நியமித்தது. அவ்வேளையில் ரயில் துறையில் 1600 பேரளவில் பணியாற்றினர். இதில்  1000 பேர் சிங்களவர்கள்.  ஏனைய 600 பேரும் தான் ஏனைய சமூகத்தவர்கள். ரயில் துறையில் சிங்களவர்கள் அதிகம் இருப்பதனாலேயே இவ்வாறு வேலை நிறுத்தத்தில் இவர்கள் ஈடுபடுகின்றார்கள் என வெள்ளையர்கள் குறிப்பிட்டனர். வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமானால் பெரும்பான்மையை இல்லாமல்செய்ய வேண்டும். இதுவே அந்த ஆணைக்குழுவின் முன்மொழிவாக இருந்தது.
வெள்ளையர்களின் காலனித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்ற பின்னரும் எமது ஆட்சியாளர்கள் அவர்களது கொள்கையையே இன்று வரை பின்பற்றி வருகின்றனர்.  இதன் பல்வேறு வடிவங்களைத் தான் நாம் காண்கின்றோம்.
 
கேள்வி–
அரசியல் நோக்கங்களுக்கான இன வாதத்தைத் தூண்டும் செயற்பாடுகளை உலகம் முழுவதும் கண்டுகொள்ள முடியும்.  மத்திய கிழக்கு நாடுகளில் முஸ்லிம் அடிப்படைவாதத்தை காலனித்துவ வாதிகள் பயன்படுத்திக் கொண்டனர்.  ஆசியாவிலும் இது போன்றதொரு ஆபத்தைக் கண்டு கொள்ள முடியும் அல்லவா?
பதில் –
நிச்சயமாக கண்டுகொள்ள முடியும். இப்போது, பர்மாவை எடுத்துக்கொண்டால், அது ஒரு பௌத்தநாடு. அங்குள்ள மக்களில் 90 வீதமானோர் பௌத்தர்கள். முஸ்லிம்கள் ஒருசிறுதொகையினர்உள்ளனர். பங்களாதேஷிலுள்ள சிதகோன் பிரதேசத்தில் பெரும்பான்மையினர் பௌத்தர்கள். சிறுபான்மையினர் முஸ்லிம்கள்.  தாய்லாந்திலும் அவ்வாறே. இலங்கையிலும் இந்த நிலைமையையே கண்டுகொள்ள முடியும்.
மத்திய கிழக்கில் ஷீயா, சுன்னிப் பிரச்சினையைப் பயன்படுத்தி போரை ஏற்படுத்தினர். ஆசியாவில் தற்பொழுது பௌத்த – இஸ்லாம் ஆகியவற்றுக்கிடையில் பிரச்சினை நடைபெறுகின்றது. இஸ்லாமிய அடிப்படைவாதம் இருப்பதாக தெரிவித்து, பௌத்த அடிப்படைவாதத்தை உருவாக்கி இருக்கின்றனர். ஆசியாவிலுள்ள ஐக்கியத்தை இல்லாமல் செய்து காலனித்துவ வாதிகள் தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்கின்றனர். இதற்குத் தேவையான உதவிகளும் ஒத்தாசைகளும் இந்த நாட்டில் வழங்கப்பட்டு வருகின்றன.
 
கேள்வி –
இருப்பினும், பொதுபல சேனா, ராவணா பலய போன்றஅமைப்புக்கள் தாம் பௌத்த மதத்தின் புனிதத்துவத்தைப் பாதுகாக்க முன்னிற்கின்றோம் எனக் கூறிக்கொள்கின்றன. இதில்உண்மைஉள்ளதா?
பதில் –
மனிதனுக்கு அன்பு, கருணை, இரக்கம் காட்டுமாறு பௌத்த மதம் குறிப்பிடுகின்றது. அடுத்த வீட்டாருக்கு அன்பு காட்டுமாறு கிறிஸ்தவ சமயம் குறிப்பிடுகின்றது. சிவன் என்பது ஒரு கடவுள். சிவன் என்பது அன்பு எனப் பொருள்படுகின்றது. அடுத்தவருக்கு அன்பு காட்டுதல் மூலம் சிவனின் அன்பு கிடைக்கும் என இந்து மதம் குறிப்பிடுகின்றது. சகலருக்கும் சமத்துவத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு மத்தியஸ்தம் வகிக்குமாறு இஸ்லாம் மார்க்கம் வழிகாட்டுகின்றது.
உலகிலுள்ள பிரதான சமயங்கள் நான்கும் அடுத்தவர்களுடன் பொறுமையாகவும், மற்றவர்களை மதித்து வாழ்வது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதைக் காண்கின்றோம். அடுத்தவர்களின் துன்பத்தை தனது துன்பமாகப் பார்க்குமாறு சமயங்கள் வலியுறுத்துகின்றன. பௌத்த தர்மம் இந்த விடயத்தை ஒரு படி மேலே சென்று விளக்கியுள்ளது. அதாவது, ஏனைய சமயங்கள் இதனை கடவுள் கட்டளையாகப் பார்க்கின்றன. ஆனால், பௌத்தம் அதைவிட ஒரு படி மேலே சென்று மனச்சாட்சியுடன் தொடர்புபடுத்திப் பார்க்கின்றது.
தான் விரும்பாத ஒன்றை அடுத்தவருக்கும் விரும்பக் கூடாது. தான் ஒருவனைக் கொலை செய்யச் செல்லுமுன், அடுத்த மனிதர் ஒருவர் தன்னைக் கொலை செய்ய வந்தால் அதனை நான் விரும்புவேனா என்று உள்ளத்தைக் கேட்டுக் கொள்ளுமாறு பௌத்த தர்மம் குறிப்பிடுகின்றது. அதனை உள்ளம் விரும்பவில்லையாயின், அதனை அடுத்தவர்களுக்கு செய்வது மற்றவர்களின் உரிமை மீறலாக கொள்ளப்படுகின்றது. தான் அடுத்தவர்களின் மனதைப் புன்படுத்த முன்னர் அடுத்தவர்கள் எனது உள்ளத்தைப் புன்படுத்தினால் விரும்புவேனா என்று கேட்டுக் கொள்ளவேண்டும் என்று பௌத்த மதம் விளக்குகின்றது.
முஸ்லிம் மக்களின் பள்ளிவாயலை உடைக்கும் போது தமது விகாரையை அவர்கள் உடைக்க வந்தால் பௌத்தர்களாகிய நாம் அதனை விரும்புவோமா என மனச்சாட்சியைக் கேட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால், பௌத்தத்தின் அடிப்படைகளுக்கு ஏற்ப, பொதுபல சேனாவின் நடவடிக்கைகளுக்கும் பௌத்தத்துக்கும் வானம் புவிக்கு இடையிலான இடைவெளி உள்ளது. பாசிச சிந்தனைக்கு ஏற்ப, பௌத்தத்தை அழிக்கும் நடவடிக்கையிலேயே இந்த அமைப்பு செயற்பட்டுச் செல்கின்றது.
 
கேள்வி –
பொதுபல சேனா அமைப்பில் உள்ளவர்கள் பௌத்தத்தைப் பற்றி அறியாதிருக்கின்றார்கள் என்றா நீங்கள் கூறவருகின்றீர்கள்?
பதில் –
பொதுபல சேனா பௌத்தம் போதிக்கும் இந்த விடயத்தை தெரியாதிருக்கின்றார்கள் என்று கூறவரவில்லை. குறைந்தபட்சம் இதிலுள்ள ஒருவராவது இதனை அறிந்து வைத்துள்ளார். அதன் பிரானிகளுக்கு என்றால் அப்படி யோசிக்கும் அளவுக்கு மூளை இருப்பதாக நினைப்பது கஷ்டமாகவுள்ளது. இருப்பினும், தெரிந்தவர்கள் உள்ளனர். உண்மையில் இவர்கள் செய்யும் காரியங்கள் கீழ்த்தரமானவை. அரசியல் வாதிகள் மக்களைப் பிரித்து அரசியல் செய்வதை தெரிந்து தெரிந்து செய்து கொண்டு செல்வது போல், இவர்கள் அதற்கு ஒத்தாசை வழங்குவதையே செய்கின்றனர். உலக இலாபத்தைக் கருத்தியே இவர்கள் இவ்வாறு செயற்படுகின்றார்கள். பணம், பதவி, சொத்து, சுகபோக வாழ்வு என்பனவற்றை எதிர்பார்த்து கீழ்த்தரமான ஆபத்தான வேலையையே இவர்கள் செய்து வருகின்றார்கள். இந்த சூழ்ச்சி பற்றி நன்கு விளங்கி அதனுடன், தொடர்புபடும் ஒரு குழுவே இந்த பொதுபல சேனா அமைப்பு.
 
இவர்கள் ஒரு பக்கத்தில் பௌத்த மதத்தை அழிவுக்கு உள்ளாக்குகின்றார்கள். அத்துடன், இலங்கை தொடர்பில் சர்வதேசத்தில் இருந்த நன்மதிப்பை இல்லாதொழிக்கின்றார்கள். இலங்கை ஒரு பௌத்த அடிப்படைவாத நாடு என்ற வரலாறு கூறும் அளவுக்கு இன்று தள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் நடமாடுவதாக இருந்தால், இனவாதிகளினதும், அடிப்படைவாதிகளினதும் செயற்பாடுகளிலிருந்து கவனமாக இருங்கள் என அறிக்கை வெளியிட்டிருந்ததை நான் கண்டேன். அவற்றின் பின்னணியில் இருப்பது அரசாங்கமே என அமெரிக்க இராஜாங்க திணைக்களமே அறிவித்திருந்தது. எது எப்படிப் போனாலும் அரசாங்கத்தின் கையாலாகாத்தனத்துக்குபடும் சேற்றைப் பாதுகாப்பதற்கு உள்ள ”சேறு தாங்கி” (மெட் கார்ட்) ஆகவே இந்த பொதுபல சேனா செயற்படுகின்றது.
 
கோத்தாபய ராஜபக்ஷ தெளிவாகவே இதன் பின்னணியில் உள்ளார். அவரே இதன் ஸ்தாபகர். பொதுபல சேனா உத்தியோகப் பற்றற் பொலிஸாக செய்படுவதாக சொல்லும் போதும் அதற்கு எதிராக எந்தவிதமான மறுப்புக்களையும் கருத்துக்களையும் தெரிவிக்க வில்லை. எனினும், நானும், நீங்களும் எமது இளைஞர்கள் சிலரும் சேர்ந்து இது போன்ற ஒரு வார்த்தையைக் கூறியிருந்தால், மறுநாளே எங்களை ஒழித்து விடுவார்கள். பொதுபல சேனா பொலிஸுக்குச் சென்று ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தியுள்ளனர். சாதாரண ஒரு மனிதருக்கு பொலிஸில் இரகசியமாகக் கூடப் பேச முடியாது. அளுத்கம, தர்காநகரில் பல மனிப்படுகொலைகள் இடம்பெற்றன. எனினும், அது தொடர்பாக எதுவும் நடைபெறவில்லை. எனவே, இது அரசாங்கத்தின் செயற்பாடே என்பது தெளிவாகத் தெரிகின்றது.
 
கேள்வி –
நாட்டில் இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலையொன்று உருவாகி வரும்போது மகாநாயக்க தேரர்கள் மௌனம் சாதிப்பது ஏன்?
பதில் –
அஸ்கிரிய மகாநாயக்க தேரர் இவர்களின் அராஜமான செயற்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என கருத்துத் தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில் அரசாங்கம் இருப்பதை அவர் அறிந்தே வைத்துள்ளார். இதனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முன்வருவது ஆபத்தானது என்று அவர்கள் ஒதுங்கியுள்ளார்கள் என்றே நான் நினைக்கின்றேன். இதுபோன்று சமூகத்திலுள்ள சக்தி வாய்ந்த குழுக்கள் அதற்குப் பதிலளிக்கத் தவறிவிட்டன. இவ்வாறான பாசிச வாத அமைப்புக்களின் வளர்ச்சிக்கு புத்திஜீவிகளின் மௌனமும் காரணமாகியது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது.
 
கேள்வி –
இந்த அமைப்பின் பின்னால், அரசாங்கம் இருப்பதாக தெரிவித்த போதும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பொதுபல சேனாவுடன் மோதிக் கொள்கின்றார்கள் அல்லவா?
பதில் –
ஆம், அது உண்மை. ராஜித சேனாரத்ன, டிலான் பெரேரா, ரவுப் ஹக்கீம், ரிஷாட் பத்தியுத்தீன் போன்றோருடன் சண்டையிட வைப்பது அரசாங்கத்தின் செயற்பாடே ஆகும். ஏனெனில், இந்த அமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென்பதை வெளியுலகுக்குக் காட்டுவதற்கே இவ்வாறு செயற்படுகின்றனர். சிங்கள, தமிழ், முஸ்லிம் ஊழல் பேர்வழிகள் நாட்டின் உயர் பதவிகளிலும் நிருவாக சேவையிலும் உள்ளனர். பொதுபல சேனா போன்ற அமைப்பு இதுபோன்றவர்களுக்கு எந்தவித எதிர்ப்பையும் வெளிக்காட்டுவதில்லை. ஊழல் பேர்வழியாகவுள்ள முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிராக எந்தவித எதிர்ப்பையும் வெளிப்படுத்துவதில்லை. பொதுபல சேனா ஒரு பௌத்த அமைப்பாகக் கூறிக்கொள்வதாக இருப்பின், பௌத்தர்களுக்காக குரல் கெடுப்பதாயின், இந்த ஊழல் பேர்வழிகளிலிருந்து பௌத்த மக்களைப் பாதுகாக்க முன்னின்று செயற்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், அவர்கள் பௌத்த மதத்துக்காக அரசாங்கத்தைப் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. இதிலிருந்தும் அவர்கள் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காகவே செயற்படுகின்றார்கள் என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
 
கேள்வி –
நீங்கள் சொல்லாமல் சொல்வது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இஸ்ரேலின் தேவையை நிறைவேற்றுகின்றார் என்றா?
பதில்-
ஆம், அதுதான் தெளிவான உண்மை. மஹிந்த ராஜபக்ஷவின் குழுவில் அதிகமானவர்கள் இஸ்ரேலின் பாதுகாவலனான அமெரிக்காவின் பிரஜாவுரிமை பெற்றோர். இவர்கள் காலனித்துவ வாதிகளின் தேவையை நிறைவு செய்து கொடுக்கும் உள்நாட்டு முகவர்கள். இஸ்ரேல் பலஸ்தீனத்துக்கு எதிராக காஸா நிலத்தில் மேற்கொண்டு வருவது அமெரிக்காவின் தேவையை நிறைவு செய்வதைத் தான். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நாட்டிற்குள்ளே முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுத்தி வருவது இஸ்ரேலின் தேவைகளைத் தான். இது சிங்கள பௌத்தர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதையும் நோக்காகக் கொண்ட ஒரு செயற்பாடாகும். பலஸ்தீனில் முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்ரேல் இருப்பது போன்று இலங்கையில் நாம் இஸ்ரேல் ஆக மாறுவதற்கு விருப்பம் என ஒரு சந்தர்ப்பத்தில் ஞானசார தேரர் கூறியிருந்தார். இவர் இவ்வாறு சொல்லும் போது இலங்கை – பலஸ்தீன் நட்புறவுச் சங்கத்தின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இவருக்கு எதிராக என்ன நடவடிக்கையை முன்னெடுத்தார்?
காஸா நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் இனச் சுத்திகரிப்பை பாசிச வாதிகளைத் தவிர வேறு எவரும் அங்கீகரிக்க மாட்டார்கள். ஆனால், இஸ்ரேலின் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஜனாதிபதி உறுதியோடு உள்ளார்.
பலஸ்தீன் நட்புறவுச் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காஸாவிலுள்ள இந்த இனச் சுத்திகரிப்புக்கு எதிராக ஒரு வார்த்தையைத் தானும் உதிர்த்தவில்லை. குறைந்த பட்சம் விடுத்த அறிக்கையிலாவது, இஸ்ரேலின் பெயரைக்கூட குறிப்பிடவில்லை. பொதுபல சேனாவின் நோக்கத்தை செயற்படுத்தும் வகையில் செயற்படும் ஒருவர் தான் இந்த மஹிந்த ராஜபக்ஷ.
 
நன்றி – லங்கா  (தேசிய சிங்கள பத்திரிகை)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *