Breaking
Wed. Apr 24th, 2024

 

சவால்களுக்கும், பல்வேறு தடைகளுக்கும் மத்தியிலே கொண்டுவரப்படும் அபிவிருத்திகளை விமர்சிப்பதிலும், கொச்சைப்படுத்துவதில் மட்டுமே சிலர் ஈடுபட்டு வருகின்ற போதும் அவற்றுக்கெல்லாம் முகங்கொடுத்தே பணிகளை தொடரவேண்டியிருக்கின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் ஐ.நா ஹெபிடட் நிறுவனத்தின் ஊடாக மன்னார் கூழாங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடத்துடன் கூடிய வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார்.

பாடசாலை அதிபர் அரபாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர்மஸ்தான் ஐ.நா ஹெபிடட் நிறுவனத்தின் பிரதிநிதி    ஹியுக்கோ மெட்சுவா , அமைச்சின் இணைப்புச் செயலாளர் அலிக்கான் சரிப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் உரையாற்றியதாவது,

சுமார் 5 அல்லது 6 வருடங்களுக்கு முன்னர் காடாகியும் அழிந்து போயும் கிடந்த இந்தப் பிரதேசங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களும், பாடசாலைகளும், அபிவிருத்திப் பணிகளும் வெறுமனே, வானத்தால் வந்து குதித்தவை அல்ல. பல்வேறு பிரயத்தனங்களின் மத்தியிலே வெளிநாடுகளிலிருந்தும் பல நிறுவனங்களிடமிருந்தும் கொண்டுவரப்பட்டே இந்த அபிவிருத்தி பணிகளை நாம் மேற்கொண்டோம். வெளிநாடுகளிலிருந்து நிதியை பெற்றுக்கொள்வது என்பது இலகுவான காரியமும் அல்ல.

 

ஜப்பான் அரசாங்கத்தின் விசேட ஆணையாளர் வவுனியா மெனிக்பாமுக்கு விஜயம் செய்து, அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்ட பின்னர் எனது அமைச்சுக்கு வந்த போது, இடம்பெயர்ந்த இந்தப் பிரதேச மக்களின் கல்வி தேவை குறித்தும் பிரஸ்தாபித்தேன்.  கட்டிடம் இல்லாத அவலத்தை எடுத்துரைத்தேன். திட்ட முன்மொழிவுகளைக் கொடுத்து இரண்டு வருடங்களாகியும் எதுவும் நடக்காததனால் ஜப்பான் நாட்டுத் தூதுவருடன் மீண்டும் நினைவுபடுத்தல் கடிதம் ஒன்றை அனுப்பினோம். அதன் பின்னரே எமக்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆரம்பத்தில் 3 மில்லியன் அமெரிக்க டொலர் தருவதாக கூறியவர்கள் பின்னர் 4.2மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கினர். ஐ.நா ஹெபிடட் ஊடாக இந்தக் கட்டிடப் பணிகளை ஜப்பான் அரசு எமது ஒத்துழைப்புடன் முன்னெடுத்தது.

அந்த வேளை 16 பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. அவற்றில் முசலிப் பிரதேசத்திலேயே அநேகமான பாடசாலைகள் உள்ளடக்கப்பட்டன. நாங்கள் வழங்கிய  திட்ட வரைபில் சிற்சில மாற்றங்கள் இடம்பெற்ற போதும், நேர்மையாகவும், திருப்தியாகவும் அந்த நிறுவனம் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்தமையை நன்றியுணர்வுடன்  நோக்குகின்றேன்.

நீங்கள் எனக்குப் பெற்றுத்தந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவி, அந்தஸ்து என்பவற்றை நேர்மையுடனும், இதய சுத்தியுடனும் பயன்படுத்தி இந்தப் பணிகளை நாங்கள் முன்னெடுக்கின்ற போதும் எல்லோரும் ஏசுவதுபோன்று இந்தப் பிரதேசத்திலுள்ள உங்களில் ஒரு சிலரும் ஏசுகின்றனர். குறைகாணுகின்றனர். ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் தாங்கிக் கொண்டு, ஏச்சு வாங்குவதற்கே பிறந்தவன் என்ற எண்ணத்தில் பொறுமையுடன் செயலாற்றி வருகின்றேன்.

அரசியல் அதிகாரம், பதவி மற்றும் அதற்கான வாய்ப்புகள் உள்ளபோதே முடிந்ததை செய்ய வேண்டுமென்று நாம் எண்ணுகின்றோம். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அடிப்படை வசதிகளை கட்டியெழுப்பவும் நல்ல ஆலோசனைகளை எல்லோரும் தருவார்களாய் இருந்தால் இன்னும் எவ்வளவோ மேற்கொள்ள முடியும்.

இந்தப் பிரதேசத்தில் வைத்தியசாலைகள் பல இருக்கின்றன ஆனால் டாக்டர்கள் இல்லை. இங்குள்ள வைத்தியசாலைகளை மேம்படுத்துவது தொடர்பில் அமைச்சர் ராஜிதவைச் சந்தித்து திட்டங்களை முன்வைத்த போது அவற்றிற்கு  நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஏதிர்வரும் 17ம் திகதி அவர், மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்கின்றார். இந்த விஜயம் நமக்கு பயனளிக்கும்.

இந்தப் பிரதேசத்தில் பிறந்து உயர் கல்வி கற்ற பலர் இன்று வெளிமாவட்டங்களில் பணி புரிகின்றனர். அவர்கள் இந்த மக்களின் அவலநிலையை கருத்தில் எடுத்து இங்கு வந்து தமது வைத்தியப் பணிகளைத் தொடர வேண்டுமென அழைப்பு விடுக்கின்றேன்.

ஐ.நா ஹெபிடட் நிறுவன பிரதிநிதி இங்கு கூறியது போல கற்றலோடு மட்டும் நம்மை மட்டுப்படுத்திவிடாது, புறக்கிருத்தியச் செயற்பாடுகளிலும் நாம் ஈடுபடவேண்டும். அதற்கமைய மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் கூழாங்குளத்திற்கும்; புதுவெளி போன்ற சில கிராமங்களுக்கும் விளையாட்டு மைதானங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வோம். அத்துடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு இன்னும் முடிக்கப்படாது, அரைகுறையில் இருக்கும் அபிவிருத்திப் பணிகளை இந்தவருடத்திற்குள் பூர்த்தி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.

அது மட்டுமன்றி, வேப்பங்குளம், காக்கையன் குளம், சுவர்நபுரி உட்பட நான்கு கிராமங்களுக்கும் விஷேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாடசாலைக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். இந்தப் பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு சுமார் இரண்டு வருடங்களாக நாங்கள் வடமாகாண சபையை கெஞ்சிப்பார்த்தும் பலன் கிடைக்கவில்லை.

அதனாலேயே இந்தப் பாடசாலைகளுக்கு விஷேட நிதியின் மூலம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

ஊடகப்பிரிவு

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *