Breaking
Fri. Apr 19th, 2024

சிறுபான்மைச் சமூகத்தினை அடக்கி, அதன் பொருளாதாரத்தினை ஒடுக்கி, நமது சமூகத்தின் குரலை நசுக்கி, எம்மை அடிமைப்படுத்துவதற்காக சில தீய சக்திகள் பாடுபட்டு வருகின்றன. இச்செயற்பாட்டினை முறியடித்து ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை வெற்றி பெறச் செய்வதன் மூலம் எமது சிறுபான்மைச் சமூகத்திற்கு விடிவு கிட்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று(06) அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், எமது சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எதிராக அட்டகாசம் புரிகின்ற சில பேரினவாத சக்திகள் அனைத்தும் இத்தேர்தலின் மூலமாக ஒன்று சேர்ந்து சிறுபான்மைச் சமூகத்தினைத் தோற்கடிக்க பாடுபடுகின்றது. இச்சக்திகளுக்கு எதிராக நமது சிறுபான்மைச் சமூகத்தினர் செயற்பட வேண்டியுள்ளது. சிறுபான்மைச் சமூகத்தின் இருப்பினை உறுதிப்படுத்துவதற்கும், எதிர்கால சந்ததியினர் நிம்மதியாக வாழ்வதற்கும் நாம் இத்தேர்தல் மூலமாக சிறந்த தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியுள்ளது.

இந்த நாட்டிலே எமது சமூகம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தக் கூடிய தலைவர் ஒருவரை தெரிவு செய்கின்ற உன்னதமான தேர்தலே எம்மை நோக்கி வருகின்ற ஜனாதிபதித் தேர்தலாகும். இத்தேர்தலினை ஏனைய தேர்தல்கள் போல் கருதாது மிகுந்த கவனத்தினைச் செலுத்தி நாம் செயற்பட வேண்டும். எமது சமூகத்தின் தலைவிதியினை நிர்ணயிக்கின்ற தேர்தலாக இத்தேர்தல் உள்ளதனை நாம் யாரும் மறந்து செயற்படக் கூடாது.

சிலர் பேசுகின்ற பசப்பு வார்த்தைகளுக்காகவும் அவர்களின் சுயநலத் தேவைகளுக்காகவும் நாம் சோரம் போய்விடக் கூடாது. இத்தேர்தலில் யாரும் மனச்சாட்சிக்கு விரோதமாக எந்தவொரு நபரும் வாக்களிக்கக் கூடாது என்பதற்காகவே நாம் மேடைகள் அமைத்து உண்மைகளை உரத்துச் சொல்லி வருகின்றோம்.

எமது சமூகம் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆபத்தான சூழலினை எதிர்நோக்கி இருக்கின்றது. எமது சமுதாயத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், எமது சமுதாயத்தின் எதிர்காலம் சிறந்த முறையில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதற்காக நாம் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டு வருகின்றோம்.

ஆனால் எமது சிறுபான்மைச் சமூகத்தினை இந்நாட்டில் இருந்து விரட்டியடிக்க வேண்டும், சிறுபான்மைச் சமூகத்தில் உள்ள புத்தி ஜீவிகள் அழித்தொழிக்கப்பட வேண்டும், சிறுபான்மைச் சமூகத்தினது அனைத்து பொருளாதாரத்தினையும் நசுக்க வேண்டும், சிறுபான்மைச் சமூகத்திற்காக குரல் கொடுக்கும் அரசியல் தலைமைகளை குரலை நசுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று, ஒன்று சேர்ந்து ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை தோற்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இச்சக்திகள் பேரினவாத சக்தியொன்றை ஆட்சி பீடம் ஏற்றும் வகையில் பாடுபட்டு வருகின்றது. இத்தீய சக்திகளின் சதியினை முறியடிக்க நமது சிறுபான்மைச் சமூகம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

சிறுபான்மைச் சமூகமான எமது சமூகம் கடந்த ஆயிரத்து நூறு ஆண்டுகளாக இந்நாட்டில் ஜனநாயகத்தினை நம்பி அமைதியாக வாழ்ந்து வரும் சமூகமாகும். இந்நாட்டின் நிம்மதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் நாடு பிளவு படக்கூடாது என்பதற்காக பல்வேறு இன்னல்களையும் இழப்புக்களையும் அனுபவித்த சமூகமாக எமது முஸ்லிம் சமூகம் உள்ளது.

காத்தான்குடிப் பிரதேசத்தில் பல நூற்றுக்கணக்கானோர் காரணமின்றி கொல்லப்பட்டார்கள், ஒரு இலட்சம் மக்கள் வடக்கிலிருந்து வேண்டுமென்று அப்புறப்படுத்தப்பட்டார்கள். வடகிழக்கு மாகாணம் முழுவதும் எத்தனையோ பல இன்னல்களை நாம் அனுபவித்தோம்.இத்தேர்தலில் நாம் நேர்மையாக சிந்திக்கவில்லை என்றால், எமக்கான வாக்குரிமையினை சிறந்த முறையில் பயன்படுத்தாமல் பிழையான முடிவினை எடுப்போமேயானால் நாம் ஒவ்வொருவரும் நிச்சயமாக ஒருநாள் எமது சமூகத்திற்கும் இறைவனுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும். இந்த வரலாற்றுத் துரோகத்தினை நாம் மறந்தும் செய்துவிடக் கூடாது.

“ராஜபக்ஷ தரப்பினர் வெற்றி பெறுவர். அவர்களுக்கு வாக்களிக்காது விட்டால் எமது சமூகத்திற்கு ஆபத்து நிகழ்ந்து விடும்” என அச்சமூட்டுகின்றார்கள். இந்த பசப்பு வார்த்தைகளையெல்லாம் நமது மக்கள் நம்பி விடக்கூடாது.

எத்தனையோ சூழ்ச்சிகளையெல்லாம் அவர்கள் செய்தபோதிலும் எமது சிறுபான்மைச் சமூகம் ஒன்று பட்டு செயற்பட்டதனால் ஈற்றில் தோல்வினையே அவர்கள் சந்தித்தார்கள். அதேபோன்ற முடிவே இம்முறையும் அவர்கள் எதிர்கொள்ளப் போகின்றார்கள்.

எம்மத்தியில் இருக்கின்ற சிலர் ஒட்டகம் என்றும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்றும் எம்மை வலம் வருகின்றார்கள். இவ்வாறானவர்களும் சஜித் பிரேமதாசவினை தோற்கடிக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டு வருகின்றார்கள். ஒவ்வொருவரின் சுய நலனுக்காகவே நமது சமுதாயத்தினை பிளவு படுத்தி வாக்குகளை சிதைத்து மூன்றாவது அணி,நான்காவது அணி என்று மக்களின் கவனத்தினை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தேர்தலானது நீதிக்கும் அநீதிக்குமான போட்டி, இந்தப் போட்டி அநியாயத்திற்கும் அராஜகத்திற்குமான போட்டி, பேரினவாத அடக்கு முறைக்கும் அனைத்து இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என எண்ணுகின்றவர்களுக்குமிடையிலான போட்டி இப்போட்டியில் வெற்றி பெறுவர்கள் அவரவர் வேலைகளை ஆட்சி பீடம் ஏறியவுடன் செய்து விடுவார்கள். ஆகையால் சிறுபான்மைச் சமூகம் மிகுந்த அக்கறையுடன் இத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

ஏப்ரல் 21 இந்நாட்டில் இடம்பெற்ற தாக்குதலினைத் தொடர்ந்து எமது சமூகத்தினை தொலைத்துவிட வேண்டும் என்றும் எமக்கெதிராக எத்தனையோ பல கோஷங்களையெல்லாம் மேற்கொண்டு வந்த அனைவரும் ஒன்று சேர்ந்து கோத்தபாயவின் அணியில் நின்று செயற்படுவதை நாம் மறந்து விடக்கூடாது. இச்சதிகாரர்கள் பின்னால் எமது சமூகம் செல்வதா என்பதை நாம் நன்கு சிந்தித்து செலாற்ற வேண்டும் என்றார்.

-எம்.ஏ.ரமீஸ்-

Related Post