Breaking
Sat. Apr 20th, 2024
நமது மண் மனம் திறக்கிறது…
 
எதிர்வரும் தேர்தல் எதிர்பார்ப்புக்களை வெல்வதற்காக எமக்கு கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் இது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். சலுகைகளுக்கு சோரம் போகாத சமூகமான தமிழர்களை சில்லறை விலைகளுக்கு வாங்கிட, எமது மண்ணில் சிலர் களமிறங்கியுள்ளனர். காட்டிக்கொடுக்கப்பட்டதால் நாமடைந்த நெருக்குவாரங்களிலிருந்து இன்னும் முழுமையாக எமது மண் மீளவில்லை. இவ்வாறு எம்மை நெருக்கும், நெருடும் அதிகார சக்திகளை இன்னும் பலப்படுத்தவே, இந்தச் சிலர் எமது மண்ணில் ஊடுருவியுள்ளனர்.
 
நமது பலவீனங்களைப் பலப்படுத்தி தமிழர், முஸ்லிம்கள் என எம்மைப் பிரித்து, எமது பிராந்திய பிரதிநிதித்துவம், தலைமையை இல்லாதொழிப்பதுதான் இவ்வூடுருவிகளின் நோக்கமாகும். இதுபற்றி எமது தமிழ் உறவுகள் புரிந்துகொள்ள வேண்டும். எம்மிடம் அதிகாரம், அமைச்சுக்கள் இருந்த காலத்தில், மாற்றாந்தாய் மனதுடனும் ஓரக்கண் பார்வையுடனும் தமிழர்களை நடத்தியதுண்டா? பங்குகளை சரியாகப் பங்கிட்டு, சகோதர வாஞ்சையை வெளிப்படுத்தியது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமைதான்.
 
இந்த நம்பிக்கைகள் வெல்லப்பட்டதால், மாந்தை மேற்கு, மாந்தை கிழக்கு பிரதேச சபைகளை எம்மால் வெல்ல முடிந்தது. உள்ளூராட்சி சபைகளிலும் எமது உறவுகளுக்கான உரித்துக்களை சுழற்சி முறையில் வழங்கி வருகிறோம். மதங்களால் எம்மை வேறாக்க முனையும் சில சக்திகள், எமது இருப்புக்களை வேரோடு பிடுங்க முனைந்துள்ளன. இந்த முயற்சிகளுக்கு சில சக்திகள் நமது மண்ணில் ஏவப்பட்டுள்ளன. இந்த தீய சக்திகளை ஜனநாயகப் பலத்தால்தான் வீழ்த்த முடியும். இதற்காக எம்மிடமுள்ளது நமது வாக்குகள்தான். இவற்றை சில்லறைச் சலுகைகளுக்கு விற்றுவிட முடியாது.
 
முள்ளந்தண்டுகளை முறித்தாலும் மண்டியிடாத மக்கள்தான் தமிழர்கள். எமது நாட்டு வரலாற்றில் பல தடவைகள் தமிழர்கள் இதை உணர்த்தியுள்ளனர். உண்பதற்கு உணவில்லாவிடினும், வாழ்வதற்கு சுதந்திரக் காற்றை வேண்டி நிற்பதுதான் தமிழர்களின் இலட்சணம். இந்தத் தன்மானமுள்ள தமிழ் சமூகத்தை, எமது மக்கள் காங்கிரஸ் தலைமையிலிருந்து பிரிப்பது, பேரினவாதிகளின் நெடுநாள் சதிகளில் ஒன்று.
 
திராணியில்லாதோரை பாராளுமன்றம் அனுப்பி எந்தப் பயனும் இல்லை. எடுத்ததெற்கெல்லாம் ஆட்சியாளர்களை எதிர்க்கும் அரசியலும் நம்முடையதில்லை. சாத்தியமானதை, சாதகமானதை வெல்லும் வியூகத்திலே எமது மக்கள் காங்கிரஸ் பயணிக்கிறது. எனவே, இத்தேர்தலில் எப்படியாவது நமது தலைமை வெல்லப்படல் அவசியம். தமிழர்களின் தொழில்வாய்ப்பு, அபிவிருத்தி, வாழ்வாதாரம் இவை எல்லாவற்றுக்கும் மேலாக, எமது வரலாற்று வாழ்விடங்கள் என்பவைதான் வன்னி மக்களாகிய எமது தேவையாகும்.
 
எனவே, தமிழுறவுகளே! தொடர்ந்தும் நமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையைப் பலப்படுத்தி, எமது வாழ்வைப் பலப்படுத்துவோம். எமது இலக்குகளை வெல்லப் புறப்படுவோம்..!
 
– வன்னியூரான் –

Related Post