Breaking
Wed. Apr 24th, 2024

கொவிட் – 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டுமென, கடந்த ஏப்ரல் ௦4 ஆம் திகதி சனிக்கிழமை திகதியிடப்பட்டு, சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் பவித்திராதேவி வன்னிஆரச்சியினால் வெளியிடப்பட்ட 2170/08 எனும் வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யக் கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட அக்கட்சியின் தவிசாளர் அமீர் அலி, தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப், பொருளாளர் ஹுசைன் பைலா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி தவராசா ஊடாக இந்த மனு, இன்று (14) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆரச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோரை பிரதிவாதிகளாக பெயரிட்டே, இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுதாரர்களான ரிஷாட் பதியுதீன், அமீர் அலி, அப்துல்லாஹ் மஹ்ரூப், ஹுசைன் பைலா ஆகியோர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையில் நடைமுறையில் இருந்துவரும் தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய் தடுப்புக்கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், தொற்றுநோய்களால் மரணிப்பவர்களின் சடலத்தை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடும் இருக்கத்தக்க நிலையிலேயே, கொரோனா வைரஸினால் உயிரிழந்தவரின் உடல் தகனம் செய்யப்பட வேண்டுமென, திருத்தியமைக்கப்பட்ட வர்த்தமானியின் மூலம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய் தடுப்புக்கட்டளைச் சட்டம், வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் திருத்தப்பட்டமையை வலுவிழக்கச் செய்து, கொவிட் – 19 வைரஸினால் உயிரிழப்பவர்களை புதைக்கவோ அல்லது தகனம் செய்யவோ முடியுமென மீளத் திருத்தி வெளியிட உத்தரவிட வேண்டுமென மேற்குறிப்பிட்ட மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

மரணித்த உடலை அடக்குவதை விட எரித்தலானது வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் என்ற விஞ்ஞான ரீதியான எந்தச் சான்றுகளும் இல்லாத நிலையிலும், உலகத்தில் மில்லியன் கணக்கானோருக்கு கொவிட் – 19 வைரஸ் பரவியிருக்கும் சூழ்நிலையிலும், உயிரிழந்த இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களில், ஆயிரக்கணக்கானோரின் உடல்கள் பல நாடுகளில் அடக்கப்பட்டிருப்பதையும் மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், உலக நாடுகளில் இதுவரை அடக்கப்பட்டவர்களில் எந்தவொரு உடலத்திலிருந்தும் நோய் பரவியதாக ஒரு அறிக்கையேனும் இல்லையெனவும் மனுதாரர்கள் குறிப்பிட்டிருப்பதோடு, உலக சுகாதார ஸ்தாபனத்தின் இடைக்கால வழிகாட்டலில், இந்த இரண்டு தேர்வுகளும் உள்வாங்கப்பட்டிருக்கின்றமையையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, இவற்றை வலுவான காரணங்களாக ஏற்று, நீதி பெற்றுத்தருமாறு உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Related Post