Breaking
Sat. Apr 20th, 2024

– எம்.எஸ்.எம்.நூர்தீன் –

கடந்த (30.10.2015) வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி 6ம்குறிச்சி, பாவா வீதியில் சிறுமியொருவரை காணவில்லை என்ற பரபரப்பான செய்தி அந்தப் பிரதேசமெங்கும் மிக வேகமாக பரவியது.

இந்தச் செய்தி வெளியாகி ஒரு சில மணித்தியாலயங்களில் காணாமல் போன குறித்த சிறுமி மலசல கூடம் நிர்மாணிப்பதற்காக வெட்டப்பட்ட குழியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டதாகவும் சிறுமி உயிரிழந்து விட்டதாகவும் தெரிய வந்தது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜன்னத் மாவத்தை அதனோடுள்ள வீதியே பாவா லேன் என அழைக்கப்படுகின்றது.

இந்த வீதியில் ரமீஸ் ஜெசிமா தம்பதிகளின் மூன்றாவது பிள்ளையே பாத்திமா ரஜா, மூன்று வயதிருக்கும்.

ரமீஸ் ஜெசிமா தம்பதிகளுக்கு முதல்பிள்ளை பெண் பிள்ளை. இரண்டாவது ஆண் பிள்ளை. பிறந்து மூன்று தினங்களில் இந்த ஆண் பிள்ளை உயிரிழந்து விட்டது. தற்போது ஒரு பெண் குழந்தை பிறந்து 33 நாட்களாகின்றன.

இந்தக் குடும்பத்தில் பிறந்த குழந்தையுடன் சேர்த்து மூன்று பெண் பிள்ளைகள். இதில் ஒரு பிள்ளையே பாத்திமா ரஜாவாகும்.

பாத்திமா ரஜாவை இவ்வருடம் அருகிலுள்ள பாலர் பாடசாலையொன்றில் சேர்ப்பதற்காக விண்ணப்ப படிவமும் பெற்றோர் எடுத்துள்ளனர்.

ரமீஸ் ஜெசிமா தம்பதிகளுக்கு நான்காவது குழந்தை பிறந்து அன்று 30வது தினம் வெள்ளிக்கிழமை காலையில் அகீகா கொடுப்பதற்காக மாடு அறுக்கப்பட்டு அயலவர்கள் மற்றும் குடும்பத்தவர்களுக்கு இறைச்சியை விநியோகித்தனர்

.அதே போன்று அன்று பகல் தனது குடும்பத்தவர்களை அழைத்து ரமீஸ் ஜெசிமா குடும்பத்தினர் அகீகா உணவையும் வழங்கினர்.

அன்று பகலுணவை தனது குழந்தை பாத்திமா ரஜாவுக்கும் தாய் ஊட்டுகின்றாள் மூன்றே மூன்று பிடிகள் பகலுணவை உட் கொண்ட நிலையில் பாத்திமா ரஜா எனக்கு சாப்பாடு போதும் உம்மா வாந்தி வாறது போலுள்ளது என்று கூறி ரஜா உணவை உண்ண மறுக்கின்றாள்.

நேரம் அன்று பிற்பகல் மூன்று மணியாகின்றது. பின்னர் தந்தை வாங்கி வந்த சோடாவில் ஒரு கிளாஸை பருகி விட்டு பிற்பகல் 3.30 மணியளவில் தனது வீட்டுக்கு வெளியே ஏனைய சிறுவர்களுடன் விளையாடச் சென்ற ரஜா அன்று மாலையாகியும் வீட்டுக்கு வரவில்லை.

வழமையாக ரஜா பகலுணவை உட்கொண்டால் மாலை 6மணி வரை நித்திரை கொள்வது வழக்கம். தனது வீட்டிலும் அருகிலுள்ள பெரியம்மாவின் வீட்டிலும் சென்று மாலை உறக்கத்தில் ஈடுபடும் பழக்கம் ரஜாவிடம் இருந்து வந்தது. ஆனால் அன்று ரஜா மாலை நித்திரையில் ஈடுபடவில்லை

.மாலையாகியும் வீடு வந்து சேராததால் ரஜாவை தேட பெற்றோரும் குடும்பத்தவரும் ஆரம்பிக்கின்றனர்.

ரஜா மாலை நித்திரையில் இருக்கின்றாள் என்ற சந்தேகத்தில் தனது வீட்டிலும், பின்னர் பெரியம்மாவின் வீட்டிலும் தேடுகின்றனர். ஆனால் ரஜாவைக் காணவில்லை.

பதற்றமும் பரபரப்பும் ஏற்படுகின்றது. குடும்பத்தினர் ரஜாவை காணவில்லை என அங்கலாய்க்கின்றனர்.

ரஜாவின் பெரியம்மாவின் வீடு அருகிலேயே உள்ளது. இங்கு வீடு ஒன்றை நிர்மானிப்பதற்காக அத்திவாரம் போட்டு நிர்மாண வேலைகள் இடம் பெற்று வருகின்றன. அந்த வீட்டு அத்திவாரத்திற்குள் மலசலம் கூட நிர்மாணிப்பதற்கான குழி வெட்டப்பட்டு குழியை வளைத்து கட்டப்பட்டு குழி மூடி போடப்படாமல் இருந்துள்ளது.

unnamed

அப்போது அந்தக் குழியை ஒரு முறை பார்ப்போம் என்று அப்போது ஒரு நினைவு வருகின்றது.

மழை பெய்ததால் அந்த வெட்டப்பட்டுள்ள மல சல கூடத்திற்கான குழி முழுமையாக நீரால் நிரம்பியிருந்தது. ஒரு கலக்கமான நீர் அது. அந்த நீருக்குள் எது கிடந்தாலும் தெரிவது போன்றில்லை.

unnamed (1)

ரஜாவின் பெரியம்மாவின் மகன் ரஜாவின் ஒன்று விட்ட சகோதரர் உடனேயே அந்த வெட்டப்பட்ட குழிக்குள் இறங்கி ரஜாவை தேடுகின்றார். அப்போது பாத்திமா ரஜா அந்தக் குழிக்குள் கிடப்பதை அவதானித்தவுடன் தூக்கி எடுக்கின்றார்.

பாத்திமா ரஜா குற்றுயிராய் வெளியில் எடுக்கப்படுகின்றாhள். இப்போது ரஜாவின் பெற்றோர் குடும்பத்தினர் அயலவர்கள் என அங்கு கூடிய பலரும் சப்தமிட்டு அழுகின்றனர். அங்கு நின்ற அனைவர் முகத்திலும் சோகமே தழும்ப ரஜா ரஜா என உரத்த சத்தத்துடன் அழுகின்றனர்.

பின்னர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு ரஜாவை கொண்டு சென்று ஆரம்ப சிகிச்சைகள் அழிக்கப்பட்டு ரஜாவின் உயிரை எப்படியாவது காப்பாற்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டி மூலம் கொண்டு செல்லும் போதே ரஜாவின் உயிர் பிரிந்துவிட்டது. ரஜா உயிரிழந்து விட்டாள்.

unnamed (2)

மல சல கூடத்திற்காக வெட்டப்பட்ட அந்தக் குழி முழுமையாக நீரால் நிரம்பியிருந்த நிலையில் அங்கு அத்திவாரத்தில் விளையாடிக் கொண்டிருந்த ரஜா அதற்குள் விழுந்திருக்க வேண்டும் ரஜாவின் பெற்றோரும் குடும்பத்தவரும் கூறுகின்றனர்.

எதுவுமறியாத அப்பாவி சிறுமி வயது மூன்றாக இருந்தாலும் அழகான தோற்றமுடையவர். பெற்றோருடனும் குடும்;பத்தவர்களுடனும் அயலவர்களுடனும் கல கலப்பாக கதைக்கும் சுபாவம் கொண்டவர். அந்தக் குடும்பம் மற்றும் அயலவர்களை ரஜாவின் இனிமையான பேச்சு சுறுசுறுப்பான செயற்பாடு கவர்ந்திருந்தது.

ஒரு தாய்க்கு ஒரு குழந்தையை பிரசவித்து அதனை வளர்தெடுப்பதென்பது ஒவ்வொரு தாய்க்கும் தான் புரியும். ரஜாவின் தாய் ஜெசிமா ரஜாவை நினைத்து நினைத்து அழுது புலம்புகின்றாள். ரஜாவை கர்ப்பமாக வயிற்றிலே சுமந்து கொண்டு வைத்தியசாலைக்கு அடிக்கடி சென்றதையும் ஞாபகப்படுத்தி அழுது துடிக்கின்றாள். பிரசவ வலியை எண்ணி குமுறுகின்றாள்.

இத்தனைக்கு மேலாக ரஜாவின் மூத்தம்மாவின் கதறல், தந்தை ரமீசின் சோகம் முழுக்குடும்பத்தினரின் துக்கம் ரஜாவை நினைத்து அயலவர்களின் சோகம் என இந்த பகுதியே சோகத்தில் ஆழ்ந்தது.

இனி நான் இருந்தென்ன இறந்தென்ன என கதறி அழும் தாய் ஜெசிமா நான் ரஜாவை கண்கானித்தே வந்தேன். அடிக்கடி கூப்பிடுவேன். . எனக்கு குழந்தை பிறந்து 30 நாள் என்பதால் எனக்கு வெளியில் செல்ல முடியாத நிலையில் எனது தாய் ரஜாவின் மூத்தம்மா ரஜாவை கண்கானித்து வந்தார் நான் குழந்தை பிறப்புக்காக வைத்தியசாலைக்கு சென்ற போதும் மூத்தம்மாவே கண்கானித்தார். அன்று எனது பிள்ளை விளையாடுகின்றது என்றே எண்ணிக் கொண்டிருந்தேன் அப்படியே மூத்தம்மாவும் எண்ணியிருந்தார். ஆனால் இந்த விபரீதம் நடக்குமென்று கனவில் கூட எண்ணிப்பார்க்கவில்லை என்றார் தாய் ஜெசிமா

எது எப்படியிருப்பினும் குழந்தைகள் மீதான பெற்றாரின் கவனம் என்பது மிக முக்கியமானதாகும். இன்று பெற்றார் குடும்பத்தினரின் கவனக்குறைவினாலேயே இவ்வாறான பல சோக சம்பவங்கள் இடம் பெற்றுவருவதை நாம் பார்க்கின்றோம்.

தமது பிள்ளை எங்கு செல்கின்றது. யாருடன் விiயாடுகின்றது செல்லும் சூழல் எப்படி விளையாடும் சூழல் எப்படி என்பதை பெற்றார்கள் கண்காணிப்பது மிக முக்கியமாகும்.

இவ்வாறான குழிகள் வெட்டும் போது அதை தாமதியாமல் மூடுவது வீட்டு உரிமையாளர்களின் பொறுப்பாகும்.

பெற்றோருக்கு பிள்ளைகள் மீதான அவதானமும் கவனமும் முக்கியம் என்பதை பாத்திமா ரஜாவின் உயிரிழப்பு உணர்த்தி நிற்கின்றது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *