Breaking
Thu. Apr 25th, 2024

இலங்கை  பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒவ்வொரு இன மக்களும் வெவ்வேறு நோக்கங்களோடு மைத்திரியை ஆதரித்திருந்தார்கள்.இதில் பேரின மக்கள் நாட்டின் பொது விடயங்களில் மஹிந்த ராஜ பக்ஸவின் போக்கை ஏற்றுக் கொள்ளாது அவரை எதிர்த்திருந்தனர்.இன்றுள்ள ஆட்சி மலர்ந்ததன் பிற்பாடு பத்தொன்பதாம் சீர் திருத்தம்,அரசியலமைப்பு மாற்ற முயற்சி,ஊழல் செய்தோரை குறைந்தது விசாரனைக்காவது அழைக்கின்றமை போன்ற விடயங்களில் இவ்வரசு பூரண திருப்தியுறும் வகையில் செயற்படாது போனாலும் இதையாவது செய்கிறார்களேயென மனதைத் தேற்றிக் கொள்ளும் வண்ணம் செயற்படுகிறது.

தமிழர்கள் (வடக்கு,கிழக்கு) யுத்தக் குற்றச் சாட்டுகள் உட்பட சில கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தியே ஆதரித்திருந்தனர்.இவ் ஆட்சி துளிர்விட்டதன் பிற்பாடு அவர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக  சம்பூரில் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.இன்னும் மிகக் குறுகிய காலத்தினுள் பெருந் தொகை காணிகள் விடுவிக்கப்படக்கூடிய சாதமாக நிலையும் தோற்றம் பெற்றுள்ளது.தமிழ் கைதிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டும் வருகின்றனர்.காணாமல் போனோரை கண்டறியும் அலுவலகம் திறப்பதற்கான பாராளுமன்ற அனுமதி பெறப்பட்டு அது நடைமுறைக்கு வர சபாநாயகரின் கையொப்பத்தை எதிர்பார்த்த வண்ணமுள்ளது.தமிழர்களின் பிரச்சினைகளைப் பற்றி அரசின் உயர் மட்டத் தலைவர்கள் நாளாந்தம் ஏதாவதொன்றைச் சிலாகித்துக் கொண்டே இருக்கின்றனர்.தமிழர்கள் இவ்வரசின் மீது பூரண திருப்தியுறாது போனாலும் கடந்த ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடுகையில் ஓரளவு மனதைத் தேற்றிக்கொண்டேயாக வேண்டும்.

இவ்வாட்சி தளைக்க நீரூற்றியவர்களும் இதன் மூலம் தங்களுக்கு அனைத்தும் கிடைத்தாப் போல் அக மகிழ்ந்தவர்களுமான முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு இவ்வரசு என்ன செய்துள்ளது?  இவ்வரசு நிறுவப்பட்டு ஒன்னரை வருடங்கள் கழிகின்ற போதும் முஸ்லிம்களுக்கெதிரான இனவாத கோரத்தாண்டவத்திற்கு முஸ்லிம்கள் திருப்தியுறும் வகையில் எதுவும் செய்யவில்லை.பொது பல சேனாவிற்கு எதிராக முஸ்லிம்கள் பொலிஸில் முறைப்பாடு செய்தும் அது விசாரணைக்குக் கூட எடுத்துக்கொள்ளப்படாது முஸ்லிம்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடும் நிலைக்கு வந்துள்ளார்கள்.இதற்கு முஸ்லிம் அரசியல் வாதிகளின் பொடு போக்குத்தனங்கள்,சுக போகங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் தன்மை உட்பட எமது பக்க சில காரணங்களுமிருக்கலாம்.

அக் காரணங்களை எல்லாம் விடுத்து இலங்கை நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றி அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது ஒரு நாட்டு ஆளும் அரசின் தலையாய கடமையாகும்.அதிலும் குறிப்பாக நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் ஏதேனும் தத்துவங்களைப் பிரயோகிக்கும் உச்ச அதிகாரமும் ஜனாதிபதியிடமுள்ளது.

மதத்தைக் கற்றுணர்ந்தவர்கள் நன்கு பதப்பட்டவர்களாக இருப்பார்கள்.இங்கு குழப்பங்களின் பிரதான சூத்திரதாரிகளாக மதத்தை கற்றுணர்ந்தவர்கள் இருப்பது குறித்த மதங்களை இழிவு படுத்துவதாகவே அமைகிறது.

இலங்கையின் அரசியலில் பௌத்த பிக்குகள் முக்கிய கதாபாத்திரம் வகிப்பதை மறுக்க முடியாது.பண்டா செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது ஜே.ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான அணியினர் கண்டி தலதா மாளிகை வரையிலான பாத யாத்திரையை ஏற்பாடு செய்திருந்தார்.கம்பஹாவில் வைத்து பண்டாரநாயக்க அணியினர் இவர்கள் மீது தாக்குதல் தொடுத்தனர்.இதனை எதிர்கொள்ள முடியாது பின்வாங்கிய ஜே.ஆர் பௌத்த பிக்குகளைக் கொண்டே இவ்விடயத்தை சாதித்து முடித்தார்.சு.காவின் ஸ்தாபகரான பண்டாரணாயக்காவை கொலை செய்தது கூட ஒரு பௌத்த பிக்குவே.அண்மைக்காலத்தில் சோபித தேரர் அரசியலில் பேசப்படும் ஒருவராக இருந்தார்.இப்படி இலங்கை அரசியல் பல வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டுள்ளது.

மேலுள்ள பண்டா-செல்வா ஒப்பந்தத்தில் அரசியல் ஜாம்பவான்களில் ஒருவரான ஜே.ஆர் தனக்கு இயலாத ஒன்றை பௌத்த பிக்குகளைக் கொண்டு சாதித்தமையானது பௌத்த பிக்குகளுக்கு இலங்கை நாட்டின் அரசியல் செல்வாக்கை அறிந்துகொள்ளச் செய்கிறது.அரசியல் வாதிகள் மக்கள் வாக்குகளில் தங்கியுள்ளமையால் பௌத்த தேரர்களை மிகக் கவனமாக கையாள வேண்டிய நிலை உள்ளதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.பொது பல சேனா அமைப்பானது மஹியங்கனையில் மீண்டும் ஒரு அளுத்கமை போன்ற கலவரம் ஏற்படுமென எச்சரித்திருந்தது.அண்மையில் சிங்க லே அமைப்பு அரைமணி நேரத்தில் முஸ்லிம்கள் அனைவரையும் அழித்துவிடுவோம் எனக் கூறியுள்ளது.இப்படியான இனவாதங்களை பௌத்த தேரர்கள் முன்னெடுப்பது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம்.ஒரு அரசு வாக்குகளுக்காக இந்த வார்த்தைகள் வெளிப்படும் வரை பொறுமையாக இருப்பது ஏற்கத்தகுந்த விடயமல்ல.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் உச்சத்தில் நின்று கூவித் திருந்த இனவாதம் மைத்திரியின் வருகையோடு அப்படியே சற்று நிலை குலைந்து போனது என்னவோ உண்மை தான்.பொது பல சேனாவின் செயலாளர் ஞான சார தேரர் ஒரு தடவை தனக்கு விசாரணைகளுக்கு சென்று வரவே நேரம் சரியாகவுள்ளதாக தனது கஷ்டத்தை கூறியிருந்தார்.காலம் செல்லச் செல்ல உறக்க நிலையிலிருந்த ஞானசார தேரருக்கு அனைத்துக் காரணிகளும் சாதகாமாக அமைந்தது போன்று சிறிது சிறிதாக தனது ஆட்டத்தைத் தொடர்ந்து தான் முந்திய ஆட்சியில் ஆட்டத்தை நிறுத்திய இடத்திற்கே வந்துவிட்டார்.இங்கு இன்னுமொரு விடயத்தையும் ஆராய வேண்டும்.மைத்திரி ஜனாதிபதியான ஆரம்பத்தில் மஹிந்த ராஜ பக்ஸவும் அடங்கித் தான் சென்றார்.இல்லாவிட்டால் சு.காவின் தலைமைப் பொறுப்பை அவ்வளவு இலகுவில் விட்டுக்கொடுத்திருக்க மாட்டார்.தோல்வியின் ஆரம்பத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் அடங்கிச் சென்றார் எனலாம்.பிற்பட்ட காலப்பகுதியில் தான் தனது செல்வாக்கை உணர்ந்து தனது ஆட்டத்தை ஆரம்பித்தார்.

இங்கு ஒரு விடயத்தை விளங்கலாம்.இருவரும் ஒரே நேரத்திலேயே உயிர் பெற்றுள்ளார்கள்.இதிலிருந்து தற்போது எழும் இனவாதம் மஹிந்த அணியினரின் விளையாட்டாக இருக்கலாமென ஊகிக்க முடிகிறது.எதிர்வரும் தேர்தல்களில் மஹிந்தவின் வெற்றிக்கு முஸ்லிம்களின் வாக்குகள் இன்றியமையாததாகும்.இச் சந்தர்ப்பத்தில் இவ்வாறான அமைப்புக்களை களமிறக்கும் போது மைத்திரியின் செல்வாக்கு முஸ்லிம்களிடையே குறைவடைந்து மஹிந்த மீண்டும் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள ஏதுவாக அமையும்.

சிங்கள ராவய,ராவண பலய ஆகிய அமைப்புக்கள் ஏற்கனவே அரசியல் சாயம் பூசப்பட்டு அவர்களின் போராட்ட வீரியங்கள் குறைக்கப்பட்டிருந்தன.இந்த நிலையில் தான் பொது பல சேனா இலங்கையில் களமிறக்கப்பட்டிருந்தது.பொது பல சேனாவின் அண்மைக் கால செயற்பாடுகள் காரணமாக அதன் உண்மை முகத்தையும் மக்கள் அறிந்துகொண்டனர்.இவர்கள் தவிர்ந்து அரசியல் சாயம் பூசப்படாத ஒரு அமைப்பின் தேவை இலங்கையில் இனவாத அரசியல் செய்பவர்களுக்கு உள்ளது.இந்த வகையிலேயே சிங்க லே அமைப்பினர் களமிறக்கப்பட்டிருக்கலாம்.இவர்கள் இலங்கை நாட்டில் தங்கள் மதத்தை பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் முஸ்லிம்களுடன் மாத்திரம் மோதச் செல்கின்றமையே இச் சந்தேகத்தை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.இருந்தாலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இனவாதத்தை மஹிந்தவின் தலையில் கட்துவதும் ஏற்கத்தகுந்த ஒன்றல்ல.

வில்பத்து,மஹியங்கனை,முமன்ன,அரிசிமலை,தம்புள்ளை பள்ளிவாயல்,கண்டி லைன் பள்ளிவாயல்,தெஹிவளை பாத்தியா வீதி பள்ளிவாயல் விவகாரம் என இந்த அரசில் முஸ்லிம்களுக்கான பிரச்சினை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.தம்புள்ளை பள்ளிவாயல் விவகாரம் மஹிந்த காலம் தொட்டு நீடித்துச் செல்கிறது.இந்தப் பிரச்சினைக்கு நல்லாட்சி என வர்ணிக்கும் ஆட்சியிலும் தீர்வில்லை என்றால் மஹிந்த ராஜபக்ஸவை முஸ்லிம்களின் இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்காத இனவாதியாகச் சிந்தரிப்பதில் எந்த நியாயமுமில்லை.தற்போது தம்புள்ளை பள்ளிவாயல் அமைக்க மது பான சாலை ஒன்றிற்கு முன்பாக நிலம் வழங்கப்பட்டுள்ளது.ஒரு கட்டடம் கட்டுவதற்கான அனுமதி (local government authority approval) சாதாரணமாக வழங்கப்படுவதில்லை.அக் குறித்த இடத்தில் அக் கட்டடம் அமைக்க அதனைச் சுற்றியுள்ள சூழல் பொருத்தமானதா என்பதும் ஆராயப்படும்.ஒரு மதஸ்தளமானது ஒரு மதுபான சாலைக்கு முன்பாக அமைக்க பொருத்தமற்றது.இங்கு நிலத்தை வழங்கியவர்கள் இதனை அறியாமல் உள்ளார்களா?

பாத்தியா மாவத்தை பள்ளிவாயல் விவகாரத்தைப் பொறுத்த மட்டில் சகல அனுமதிகளையும் பெற்றே அப் பள்ளிவாயலில் கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதற்கெதிராக கிளம்பிய இனவாதத்தில் முஸ்லிம் தரப்பு தோல்வியுற்றது.அன்று இப் பள்ளிவாயலை நிறுவ மஹிந்த ஆதரவு அணியில் ஒருவரான கலைக்கப்பட்ட தெஹிவளை நகர பிதா தனசிரி அமரத்துங்கவே வழங்கிருந்தார்.அவரின் காலத்தில் இதில் எழுந்த இனவாதத்தை அவர் சமாளித்து முஸ்லிம்களுக்கு ஆதரவாக நின்றார்.இன்று அதன் அனுமதிகள் அனைத்தும் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.இங்கு நகர சபையே தனது அங்கீகாரத்தை இல்லாமல் செய்திருக்க வேண்டும்.நகர அபிவிருத்தி அதிகார சபை தனக்குள்ள அதிகாரத்தை நேரடியாக இங்கு பிரயோகித்துள்ளமையைப் வைத்துப் பார்க்கும் போது மஹிந்த காலத்து இனவாத ஆட்சியை விட தற்போது இனவாத ஆட்சி தலை தூக்கியுள்ளதை அறிந்துகொள்ளலாம்.

முஸ்லிம்-சிங்கள முரண்பாடுகள் எங்கு தோன்றினாலும் அங்கு பொது பல சேனா நியாயம் தீர்க்கச் செல்கிறது.மத ரீதியான அமைப்புக்கள் சமூகப் பிரச்சினைகளில் தலையிடக் கூடாதென யாரும் கூற முடியாது.இலங்கையில் பேரின மக்களை வழி நடாத்த பௌத்த பீடங்கள் உள்ளன.அவைகள் இது விடயங்கள் தலையிட்டால் அதனை ஓரளவு ஏற்கலாம்.இலங்கை அரசியலின் பல விடயங்களில் இவ் அமைப்புக்கள் தலையிட்டுள்ள போதும் அவைகள் நாகரீகமாகவே நடந்துள்ளன.முகவரி தெரியாத,கடந்த தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட பொது பல சேனா போன்ற அமைப்பு கலந்து கொள்ளும் ஒவ்வொரு இடத்திலும் இனவாதக் கருத்துக்களை மக்களிடத்தில் அள்ளி வீசிவிட்டு வருகிறது.சில நாட்கள் முன்பு அனைவரும் சமமே என்ற தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட அமைதிப் பேரணியில் சிங்க லே அமைப்பினர் புகுந்து அட்டகாசம் செய்துள்ளனர்.ஒரு அமைதியான போராட்டத்தில் குழப்பம் செய்வது எந்த விதத்திலும் ஏற்கத் தகுந்ததல்ல.இவர்களின் குழப்பத்தை அங்கு குழுமி இருந்தவர்கள் எல்லோரும் இணைந்து முறியடித்தமை பாராட்டுக்குரிய விடயமாக இருந்தாலும் சட்ட ரீதியாக அவர்கள் மீது எது வித நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை (சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்).இவ்வாறான ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் இலங்கை அரசியலமைப்பு இலங்கை பிரஜை ஒருவருக்கு 14 (1) பிரிவு மூலம் வழங்கும் சுதந்திரம் கேள்விக்குட்படுத்தப்படுகிறது.இலங்கை அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டிய கடமை யாவரும் உண்டு.

இலங்கையில் முஸ்லிம் அரசியல் வாதிகள் கைக் கொள்ளும் அரசியலும் இவ்வாறான பிரச்சினைகள் இழுத்தடிப்புச் செய்யப்படுவதற்கான பிரதான காரணமாகும்.இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படும் போது முதலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கெதிராக அரசாங்கத்திற்கு உள்ளிருந்து அல்லது வெளியிலிருந்து குரல் கொடுக்க வேண்டும் (தற்போது அனைவரும் அரசின் பங்காளிகளாகவே உள்ளனர்).அதற்கு தீர்வில்லாத போது அரசாங்கத்திலுள்ளவர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.அதற்கும் இயலாத போது அதனை சர்வதேசங்களுக்கு கொண்டு செல்வதன் மூலம் இப் பிரச்சனைகளை தீர்க்க முயல வேண்டும்.முஸ்லிம் கட்சிகள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தேசிய அரசில் முக்கிய பதவிகள் வகிப்பதால் அவ் ஆட்சியை எச்சரிக்கும் தொனியில் எதனையும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.இது தொடர்பில் இவர்களின் பேச்சுக்களும்,கடிதங்களும் காதல் கடிதங்கள் போன்றே உள்ளன.ஆளும் அரசின் அமைச்சராக உள்ள ஒருவருக்கு அரசின் செயற்பாடுகளில் ஒரு குறித்த பங்குண்டு.ஜனாதிபதியிடமிருந்து அமைச்சை பெறும் போது செய்யப்படும் சத்தியப்பிரமாணத்தில் (அட்டவணை-7) குறித்த அரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே வார்த்தைக்களுமுள்ளன.ஒரு அரசின் பங்காளிகளாக இருந்து கொண்டு அதனை சர்வதேசத்திடம் முறையிடும் போது அதன் கனதிகள் மிகக் குறைவாகும்.முஸ்லிம் கட்சித் தலைவர்கள் இலங்கையில் எப் பிரச்சார மேடைக்குச் சென்றாலும் அங்கு தேசிய அரசை புகழ்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இவர்கள் சர்வதேசத்திடம் சென்று மிகவும் அழுத்தமான முறையிட்டிருப்பர்கள் என்பதை நம்பவும் இயலாது.

அன்று மஹிந்த ராஜ பக்ஸவின் காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டால் அதனை மஹிந்தவின் தலையில் கட்டி அவரைத் தூற்றியே பலர் தங்களது அரசியல் வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.இன்று இவ் அரசின் மீது குற்றம் சாட்ட எமது அரசியல் வாதிகள் தவறுவதேன்.இன்றைய நல்லாட்சியின் உயர் மட்ட அரச தலைவர்கள் முஸ்லிம்கள் தொடர்பான அனைத்து விடயங்களிலும் மௌனத்தையே கடைப்பிடிக்கின்றனர்.இது முஸ்லிம்களின் நிலையான இருப்பிற்கு சிறந்த சமிஞ்சைகளல்ல.மஹிந்த அரசு சிறிது பிரச்சினை ஏற்பட்டாலும் அதனை தூக்கிப் பிடித்து விமர்சிப்பதில் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் பிரதானமாக இருந்தார்.தற்போது நாட்டில் பல்வேறு இனவாத பிரச்சினைகள் தலை தூக்கியுள்ளன.பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் உயிருடன் இருக்கின்றாரா என்று கூட தெரியவில்லை.மஹியங்கனை பிரச்சினையின் போது வெறுப்புப் பேச்சு சட்ட மூலத்தை பாராளுமன்றில் கொண்டுவரப்போவதாக கூறி இருந்தார்.இது வெறும் வாய்ப் பேச்சோடு நின்றுவிட்டமை தான் இங்கு சுட்டிக்காட்டத் தக்க விடயமாகும்..

தற்போது இலங்கையில் இனங்களுக்கிடையிலான முறுகல்கள் உச்சத்தில் உள்ளது.இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுகளை ஏற்படுத்தும் வண்ணம் சில செயற்றிட்டங்கள் அறிமுகம் செய்ய வேண்டும்.இவ்வாறான இனவாதங்களைத் தூண்டும் அமைப்புக்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பு: இக் கட்டுரை இன்று 23-08-2016ம் திகதி செவ்வாய் கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  akmhqhaq@gmail.comஎனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *