Breaking
Fri. Apr 19th, 2024

நிந்தவூரிலுள்ள பாடசாலைச் சமூகத்திற்கும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(14) நிந்தவூரிலுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் இடம்பெறும், முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது தவிசாளர்,
நிந்தவூரை பொருத்தமட்டில் கடல், வயல் சார்ந்த தொழில் துறைகளுக்கு அப்பால் கல்வி என்பது பாரிய அடையாளமாக திகழ்ந்து, சர்வதேச ரீதியிலும் புகழ் பூத்த பெரும் கல்வியலாளர்களை பிரசவித்த மண் எமது நிந்தவூர். ஆனால் சமீப காலங்களில் அதில் சற்று தளம்பல் நிலையில் இருப்பதாக எம்மால் உணர முடிகிறது. அதை நாம் அனைவரும் சேர்த்துதான் சரிசெய்ய வேண்டும். அரசியல் வாதிகளான எங்களால் பாடசாலைகளின் பெளதீக மற்றும் கட்டுமான கட்டமைப்பு விடயங்களிலேயே பெருமளவு உதவிகளை பெற்றுத்தர முடியும். ஆனால் மாணவர்களை பரீட்சைகளுக்கு சிறந்த முறையில் தயார்ப்படுத்துவதோடு சமூகத்தில் நல்ல பிரஜைகளாக, அதிபர் ஆசிரியர்களான நீங்களே கல்வியூட்டி வளர்த்தெடுக்க முடியும்.

அந்தவகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டுடனும் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்படும், நிந்தவூரின் பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் ஒரு பகுதியாக, பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தி செயற்படுகிறோம். அதற்காக முதற்கட்டமாக சுமார் 30 இலட்சம் ரூபாய்களை ஒதுக்கியுள்ளோம்.

நிந்தவூரில் அவரின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் வீதிகள், வடிகான்கள், வணக்கஸ்தலங்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள், மயான பூமிகளுக்கான ஒதுக்கீடுகள், கழகங்கள், அமைப்புகளுக்கான ஒதுக்கீடுகள் மற்றும் ஏனைய பொது இடங்களுக்கான ஒதுக்கீடுகள் எனத்தொடரும் அபிவிருத்தி திட்டங்களை கண்டு, ஏனைய சில அரசியல்வாதிகளும் எதையாவது செய்யவேண்டும் என ஓடிக்கொண்டிருப்பதை எம்மால் பார்க்க முடிகிறது. உண்மையில் அதுவும் எமக்கு கிடைத்த வெற்றியாகவே நான் நம்புகிறேன் என்றார்.

இதன்போது நிந்தவூரின் கல்விச் சமூகம் சார்பாக அதிபர்கள், தவிசாளருக்கும், அமைச்சருக்கும் உணர்வுபூர்வமாக நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர். அரசியல்களுக்கு அப்பால் ஊரின் அபிவிருத்தி தொடர்பில் கல்விச் சமூகம் என்ற வகையில், தலைவர் ரிஷாட் பதியுதீனோடும் தவிசாளரோடும் கைகோர்த்து செயற்பட ஆவலாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் நிந்தவூரிலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post